பாத வெடிப்பு என்பது பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய பிரச்னையாகும். வயதாவது, உடல் எடை, கர்ப்பக்காலம் ஆகிய காரணங்களாலும் பாத வெடிப்பு ஏற்படலாம். வெறுங்காலில் அதிகமாக கரடுமுரடான தரையில் நடப்பதே இதற்கு முக்கியமான காரணமாகும். பாத வெடிப்பை கண்டுகொள்ளாமல் விடுவது ஆழமான வெடிப்பை உருவாக்கி நோய் தொற்றுக்கு காரணமாகி விடும். எனவே, அதற்கான சிகிச்சையை உடனுக்குடன் எடுப்பதே சிறந்ததாகும்.
1. பாத வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் தினமும் இரண்டு முறை மாய்ஸ்டரைசர் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். சில மாய்ஸ்டரைசர்ஸ் சருமத்தில் படிந்துள்ள இறந்த செல்களை நீக்கக்கூடிய தன்மையைக் கொண்டவை. அத்தகைய மாய்ஸ்டரைசரை பயன்படுத்துவது மிகவும் நல்லதாகும்.
2. தூங்க செல்வதற்கு முன்பு பாதங்களை பராமரிப்பது மிகவும் அவசியமாகும். பாதங்களை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் வைத்திருந்து பின்பு Foot scrubber ஐ பயன்படுத்தி இறந்த செல்களை நீக்கிவிட்டு பெட்ரோலியம் ஜெல்லியை தடவி சாக்ஸ் அணிந்துக் கொண்டு தூங்க செல்வது கால்களை பராமரிக்கும் சிறந்த வழியாகும்.
3. அரிசி மாவு, தேன், வினிகரை சேர்த்து பேஸ்ட் போல கலந்து தடவுவதால், பாத வெடிப்பு குணமாகும். அரிசி மாவு சிறந்த எக்ஸ்பாலியேட்டராகவும், தேன் ஆன்டி செப்டிக்காகவும் செயல்படுகிறது.
4. வாழைப்பழத்தில் வைட்டமின் A, C, B6 போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அது சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பது மட்டுமில்லாமல், ஈரப்பதத்துடனும் வைத்துக்கொள்ளும். எனவே, இது சிறந்த மாய்ஸ்டரைசராக செயல்பட்டு சருமத்தை வறட்சியில்லாமல் பார்த்துக்கொள்கிறது.
5. தேங்காய் எண்ணெய்யை வறண்ட சருமம், Psoriasis, eczema போன்ற பிரச்னைகளுக்காகப் பயன்படுத்துவார்கள். இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெய்யில் அழற்சி எதிர்ப்புத் தன்மையும், நுண்ணுயிர் எதிர்ப்புத் தன்மையும் உள்ளதால் பாத வெடிப்பை விரைவில் குணமாக்குகிறது.
6. கற்றாழை சருமம் சம்பந்தமான அனைத்து பிரச்னைகளுக்கும் அருமருந்தாகப் பயன்படுகிறது. கற்றாழையில் அழற்சி எதிர்ப்புத் தன்மையும், வைட்டமின் ஈ, பீட்டா கரோட்டின் உள்ளதால் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும். இதில் நோய்க்கிருமி எதிர்ப்பு சக்தி உள்ளதால், காயத்தை ஆற வைக்கும் தன்மையைக் கொண்டதாகவும் உள்ளது. இந்த 6 வழிகளை வீட்டிலேயே பின்பற்றி பாத வெடிப்பை குணப்படுத்தலாம். முயற்சித்துப் பாருங்களேன்.