Barley avoids body heat problems https://tamil.oneindia.com
ஆரோக்கியம்

உடல் உஷ்ணப் பிரச்னைகளைத் தவிர்க்கும் பார்லி!

கோவீ.ராஜேந்திரன்

ரிசி, கோதுமைக்கு முந்தைய முழுமையான தானிய உணவு பார்லி. தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தி வரும் ஒரு 1000 ஆண்டு பழைமையான ஆற்றல்மிக்க தானியம். ‘பார்லி ரொட்டியும், மோரும் சாப்பிடுபவர்களுக்கு எந்த நோயும் வராது’ என்பது ஒரு பார்சிய நாட்டின் பழைய பழமொழி. 100 கிராம் பார்லியில் 350 கலோரி உள்ளது. இதில் 80 சதவிகித கலோரிகள் மாவுச்சத்துதான். அதனால் இது பலமிக்க உணவாக கருதப்பட்டது. எகிப்து நாட்டில் பிரமிட் கட்டிய தொழிலாளர்களின் முக்கியமான உணவு பார்லிதான்.

பார்லி தண்ணீரும், தேனும் மூச்சிரைப்புக்கு மருந்தாக அந்நாளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பார்லி தொற்று நோய்களுக்கும், புற்றுநோய்களுக்கும், உடற்புண்களுக்கும், காயங்களுக்கும் மற்றும் குடல் நோய்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற தானியங்களிலுள்ள நார்ச்சத்து சமைக்கும்போது கொஞ்சம் குறையும். ஆனால், பார்லியில் உள்ள ‘பீட்டோ குளூக்கான்’ என்ற நார்ச்சத்து எந்த வகையான தயாரிப்பு முறையிலும் அழிவதில்லை, இதுதான் பார்லியின் தனிச்சிறப்பு.

பார்லி அரிசியை 10 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் இரவில் ஊறவைத்து, காலையில் கொதிக்க வைத்து கால் லிட்டராக சுண்டிய பின் வடிகட்டி குடித்துவர சிறுநீரக பாதை அடைப்பு சரியாகி ஆரம்பகட்ட புரோஸ்டேட் பிரச்னை சரியாகும். இதை நேரடியாக குடிக்க முடியாதவர்கள் இதனுடன் சர்க்கரை பாகு அல்லது பழச்சாறு கலந்து குடிக்கலாம். இதனால் அதிக தாகம், தொண்டை வலி, தொண்டை புண், உடல் பலஹீனமான நிலை மாறும். தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பார்லி கஞ்சியுடன் பால் சேர்த்து கொடுக்கலாம். சிறுநீரக கோளாறுகள் மற்றும் இரத்தத்தில் யூரியா அதிகமுள்ளவர்கள் தினமும் பார்லி கஞ்சி செய்து சாப்பிடுவது நல்லது.

உயர் இரத்த அழுத்த நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் தினமும் பார்லி வாட்டர் குடித்து வந்தால் ஆரோக்கியமாக இருப்பார்கள். இரத்தத்தில் சர்க்கரை அளவு உயராது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். பார்லி தண்ணீர் குடிப்பதால் செரிமான மண்டலமும் சுத்தமாகும். குழந்தைகள் பார்லி தண்ணீரைப் பருக அது அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கிறது.

காய்ச்சல், சோம்பல், சோர்வு போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் பார்லி தண்ணீரை குடித்தால், உடலுக்கு உடனடியாக ஆற்றல் கிடைக்கும். வியர்வை அதிகமாக வெளியேறி, உடலில் நீர்ச்சத்து குறைந்து போனால் உடனே பார்லி தண்ணீரைக் குடிக்க வேண்டும். நீரிழப்பு உடல் உறுப்புகளை சேதப்படுத்தும். எனவே அதிகமாக வியர்க்கும்போது மோர் மற்றும் பார்லி தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். சிறுநீரக பிரச்னையால் அவதிப்படுபவர்களும் குடிக்க வேண்டும். உடலில் சூடு அதிகரித்தால் பார்லி தண்ணீரைக் குடிப்பதால், சூடு தணிந்து சமன் செய்யும்.

இதில் மாங்கனீஸ், மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட், பிளோவனாய்ட்ஸ் மற்றும் வைட்டமின் ஈ, நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இதிலுள்ள வைட்டமின் ஏ மற்றும் செலினியம் சத்து நுரையீரலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தக்கூடியவை அதோடு மாசுபட்ட காற்றில் இருந்தும் நுரையீரலை பாதுகாக்கும்.

அதிக எடை கொண்டவர்கள் பார்லி தண்ணீரை தினமும் குடிப்பதன் மூலம் உடல் எடையை விரைவில் குறைக்கலாம். சில வகையான புற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் ஆற்றல் பார்லி தண்ணீருக்கு உண்டு. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பெரிய குடலில் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. அவை உடலில் தீங்கு விளைவிக்கும் நோய்களைத் தடுக்க உதவுகின்றன.

கர்ப்பிணிகள் பார்லி தண்ணீரை குடிப்பதன் மூலம் அவர்களின் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும். அவர்கள் எளிதில் சோர்வடைய மாட்டார்கள். அவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை பார்லி தண்ணீரைக் குடிப்பதை வழக்கமாக்க வேண்டும். இந்த பார்லி தண்ணீர் பெண்கள் குடிக்க. சிறுநீர் தொற்று போன்ற பிரச்னைகள் குறையும். உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும். சிறுநீரக கற்களை கரைக்கும்.

பார்லியை பவுடர் செய்து காய்கறிகள் சமைக்கும்போது சிறிதளவு சேர்த்துக் கொண்டால் சுவையாக இருக்கும். பார்லியை தோசை மாவில் கலந்து சாப்பிடலாம். வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் பார்லியை கஞ்சியாக சாப்பிடலாம். செரிமான பிரச்னைகளுக்கு பல காலமாக வீட்டு வைத்தியத்தில் பார்லி நீர் பயன்பட்டு வருகிறது.

பார்லி தண்ணீர் குடிக்க விரும்பாத குழந்தைகள் மற்றும் டீன்ஏஜ் பிள்ளைகளுக்கு காலை உணவாக தோசை மாவில் பார்லி அரைத்து கலந்து சுட்டுதரலாம். இதற்கு பார்லியை இரவு 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பார்லியை தயிரில் கலந்து சாப்பிடலாம். அசைவம் பிரியர்கள் கோழி சூப்பில் கலந்து சாபிடலாம். கோதுமை மாவுடன் கலந்து ரொட்டி செய்து சாப்பிடலாம். மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொள்ளும்போது மட்டும் பார்லி சாப்பிட கூடாது. காரணம் அது மருந்துகளின் வீரியத்தை குறைக்கும்.

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

கங்குவா - என்னத்த சொல்ல?

SCROLL FOR NEXT