பெரும்பாலானவர்களுக்கு முந்திரிப் பழம் சாப்பிடப் பிடிப்பதில்லை. மேலும், அந்தப் பழம் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை என்பதால் அதில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் பற்றி யாருக்கும் தெரிவதில்லை. உடலில் இரத்தத்தை உற்பத்தி செய்து இதயத்தை நோய்களிலிருந்து காக்கும் முந்திரி பழத்தின் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
பொதுவாகவே, முந்திரிப் பருப்பில் சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதுமட்டுமின்றி அதன் பழத்திலும் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. முந்திரிப் பழத்தின் சுவையும் நன்றாக இருப்பதால் அதை ஊட்டச்சத்து நிறைந்த பொக்கிஷம் என்றே கூறலாம். ஏனெனில், இதில் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம், இரும்புச்சத்து போன்ற உடலுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன.
புற்றுநோயை தடுக்கும்: முந்திரிப் பழங்களில் நிறைந்துள்ள புரோ அன்தோசயனின் என்னும் சேர்மம், நம் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும், இதில் தாமிரம் இருப்பதால் உடல் செல்களில் ஏற்படும் மாற்றங்களைத் தடுக்கிறது. குறிப்பாக, பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுப்பதற்கு முந்திரிப் பழங்கள் பெரிதும் உதவுகின்றன.
நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாகும்: முந்திரிப் பழத்தில் அதிகப்படியான வைட்டமின் சத்துக்கள் உள்ளன. இவை நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது. இதனால் நமது உடலால் தொற்று நோய்களை எதிர்த்துப் போராட முடியும்.
கண்களைப் பாதுகாக்கும்: முந்திரிப் பழத்தில் உள்ள லூட்டின் கண்களின் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்கிறது. இது சூரியக்கதிர்களின் தாக்கத்திலிருந்து கண்களைப் பாதுகாத்து அதன் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
இதய ஆரோக்கியம்: என்னதான் முந்திரிப் பழங்களில் அதிக கொழுப்பு இருந்தாலும் அவை அனைத்துமே உடலுக்கு ஆரோக்கியமானவை. இதை நாம் சரியான அளவில் எடுத்துக் கொண்டால் உடலுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை. இதில் நிறைந்துள்ள நல்ல கொழுப்புகளால் உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இது நம் மூளை வளர்ச்சிக்கும், இதய ஆரோக்கியத்துக்கும் நல்லது.
சரும ஆரோக்கியம் மேம்படும்: முந்திரிப் பழத்தில் விட்டமின் சி சத்து நிறைந்துள்ளதால், அது சருமத்துக்குத் தேவையான கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும், இதில் நிறைந்துள்ள தாமிரம் சருமத்துக்கு பளபளப்பு தன்மையைக் கொடுக்கிறது.