இந்தியாவில் 'சிங்காரா' (Singhara) என்றும், செஸ்ட்நட் (Chestnut) என்றும் அழைக்கப்படும் ஊட்டச்சத்து மிக்க ஒருவித தாவர கொட்டைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இந்தத் தாவரமானது இலைகளால் மூடப்பட்டு, ஏரி, குளம், ஆற்றுப்படுகை, வயல்வெளி போன்ற நீர்நிலைகளில் அதிகமாக வளர்கிறது. இதன் கொட்டைகள் உடலுக்குக் குளிர்ச்சியும் நாவுக்கு நல்ல சுவையும் கொண்டவை. அதை அப்படியேயும் சாப்பிடலாம். உலர்த்தி பொடியாக்கி மற்ற உணவுகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம். பெரிய வெள்ளை நிற கொட்டைகளான இவற்றில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் மிகவும் ஏராளம்!
இதில் அடங்கியுள்ள ஃபைசெடின், டையோஸ்னெட்டின், லூடியோலின், டெக்டோரிஜெனின் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் சேதமடைந்த செல்களைப் புதுப்பிக்கின்றன. உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது. ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸை குறைத்து மன அமைதி தருகிறது. நாள்பட்ட நோய்கள் தாக்கும் அபாயத்தையும் குறைக்கிறது.
இந்தக் கொட்டைகளில் மிக அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. அதன் காரணமாய் ஜீரண மண்டலம் சிறப்பாக செயல்பட முடிகிறது. மலச்சிக்கல் நீங்குகிறது. வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் நார்மலுக்கு வருகிறது. அதிகளவு பொட்டாசியமும் இதில் உள்ளதால், இதய நோய் மற்றும் பக்கவாதம் வரும் அபாயமும் குறைகிறது.
மேலும், ஊட்டச்சத்துக்களாகிய வைட்டமின்-B, B6, E, ரிபோஃபுளேவின், பொட்டாசியம், துத்தநாகம் ஆகியவை அடங்கியுள்ளதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் இதன் மூலம் கிடைக்கிறது. முடி வளர்ச்சிக்கு நன்கு உதவுகிறது. குறைந்த க்ளைசெமிக் இன்டெக்ஸ் அளவு கொண்டுள்ளதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. உடல் எடை குறைப்புக்கும் இது ஏதுவானது.
இது நீர்ச்சத்து அதிகம் கொண்டதாகவும், குளிர்ச்சியாகவும் இருப்பதால் அதிக வெப்பம் கொண்ட கோடை காலங்களில் இது அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. மொத்ததில் இதை ஒரு சரிவிகித உணவு என்றே கூறலாம். இத்தனை நற்பலன்களைக் கொண்ட இந்த செஸ்ட்நட் கொட்டைகளை நாமும் உணவுகளில் சேர்த்து உட்கொண்டு நலம் பெறுவோம்.