எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும் மழை, பனிக்காலத்தில் நமக்கு சளி, ஜலதோஷம், இருமல் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. எளிய வீட்டு வைத்தியமாக இவற்றை செய்வதன் மூலம் சளி, இருமல் பிரச்னைகளை சமாளிக்கலாம். இனி, சளி, இருமல், ஜலதோஷம் குணமாக சில எளிய மூலிகை வைத்தியங்களைப் பார்க்கலாம்.
* ஒரு கைப்பிடி அருகம்புல்லை அரைத்து சாறெடுத்து அதை குடித்து வர, சளித்தொல்லை குறையும்.
* பழுத்த நேந்திரம் பழத்தைத் தினமும் பாதியளவு சாப்பிட சுவாசப் பிரச்னை சீராகும்.
* துளசிச் சாறு, தூதுவளை சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை 200 மி.லி. அளவுக்கு தினமும் குடித்து வர சளி, இருமல், நெஞ்சு கபம், மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் சரியாகும்.
* கற்பூரவள்ளி இலைச் சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, தலையில் தேய்த்து வர, மூக்கில் நீர் கொட்டுவது, தலைவலி ஆகியவை குணமாகும்.
* கொய்யாப்பழம் சளித் தொல்லையை விரட்டும் தன்மை கொண்டது. வளரும் குழந்தைகளுக்கு ஒன்றிரண்டு கொய்யாப்பழம் கொடுக்கலாம்.
* மூக்கில் புண் இருந்தால், மஞ்சள் கிழங்கை சுட்டுக் கரியாக்கி பொடித்து, வேப்ப எண்ணெயில் குழைத்து தடவி வர புண் ஆறும்.
* ரோஜா பன்னீரை உணவில் சேர்த்துக்கொள்ள, மூச்சு இரைப்பு நீங்கும். ரோஜாவை முகர்ந்தாலே சளி, மூக்கடைப்பு நீங்கி, சுவாசிக்க சுலபமாக இருக்கும்.
* உடல் சூட்டினால் மூக்கில் இரத்தம் வடிவது நிற்க, மாதுளம்பழச் சாறுடன் அருகம்புல் சாறை சம அளவு கலந்து குடிக்க வேண்டும்.
* சளி, இருமல் இருந்தால் கறந்த பால், தயிர், வாழைப்பழம், முட்டை இவற்றை தவிர்க்க வேண்டும்.
* சளி, இருமல், ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகள் இருப்பவர்கள் மூலிகை டீ, துளசி காபி, தூதுவளை சூப், எள்ளு லட்டு, முருங்கைக்கீரை அடை, முருங்கை பொரியல், கொத்தமல்லி தோசை, வில்வ சூப், பேரீட்சை என சத்தான உணவுகளை உட்கொள்ள நல்ல நிவாரணம் கிடைக்கும்.
* சிலருக்கு வாழைப்பழம் சாப்பிட்டால் தொண்டை சளி பிடிக்கும் என்பர். பழம் சாப்பிட்டு விட்டு சூடான தண்ணீரை பருகினால் சளி ஏற்படாது.
* மழையில் நனையாமல் இருத்தல், குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்தல் என பாதுகாப்பாக நம்மை கவனித்துக்கொள்ள சளி, இருமல், மூச்சுத் திணறல் பிரச்னைகளை வராமல் தடுக்கலாம்.