தொடைகள் உரசுவதால் ஏற்படும் காயம், குறிப்பாக கோடை காலங்களில் அதிக எடை உள்ளவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாகும். இது ஒருவருக்கு அசோகரியத்தை ஏற்படுத்துவதோடு, தொற்று நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மருத்துவ சிகிச்சையுடன் கூடுதலாக வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றி, இந்தப் பிரச்சனையை சரி செய்ய முடியும்.
தொடைகள் உரசுவதால் ஏற்படும் காயத்தை குணப்படுத்த முதலில் அந்த பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் சூடான நீரில் குளித்து, காயத்தை மெதுவாக சோப்பு போட்டு சுத்தம் செய்யவும். இது பாக்டீரியாக்களை அகற்றி, தொற்றுநோயை தடுக்க உதவும். காயத்தை காற்றோட்டமாக வைப்பது விரைவில் ஆற உதவும்.
இயற்கை மருத்துவ பொருட்கள்:
காயத்தின் மீது கற்றாழை ஜெல் அல்லது லோஷன் தடவுவதால், எரிச்சல் குறைந்து விரைவில் குணமாகும். கற்றாழை ஜெல் காயத்தை ஆற்றி புதிய செல்கள் உருவாக உதவும்.
வெள்ளரிக்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து, அந்த ஜூஸை காயத்தின் மீது தடவி வந்தால், வீக்கம் குறைந்து விரைவில் சரியாகும்.
காயத்தின் மீது தேங்காய் எண்ணெய் தடவுவதால் அது வறண்டு போகாமல் எப்போதும் ஈரப்பதமாக இருந்து, விரைவில் காயம் ஆற உதவும்.
சிறிது கொக்கோ பவுடரை காயத்தின் மீது தடவுவது, காயத்தை மென்மையாக்கி அரிப்பை தணிக்கும். இதனால் காயத்தின் தீவிரத்தை குறைக்க முடியும்.
உணவுமுறை மாற்றங்கள்: சரியான உணவு முறையைப் பின்பற்றினால் தொடைகள் உரசி ஏற்படும் காயத்தை விரைவில் சரி செய்ய முடியும். நார் சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகள் செரிமானத்தை சீராக வைத்து, உங்கள் உடல் எடை குறைக்க உதவும். இது தொடைகள் உரசும் பிரச்சனையைக் குறைக்கும்.
தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சருமத்தை ஈரப்பதமாக வைத்து காயம் விரைவில் ஆற வழிவகுக்கும்.
பழங்கள், காய்கறிகளில் உள்ள விட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள், தோல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது காயத்தை விரைவில் ஆற்றும்.
நீங்கள் உடல் எடை அதிகமாக இருக்கும் நபராக இருந்தால், உடல் எடையை குறைக்க முற்படுங்கள். தொடர்ச்சியான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலமாக உடல் எடையைக் குறைத்து தொடைகள் உரசும் பிரச்சனையைத் தடுக்கலாம். மேலும், எப்போதும் சமச்சீரான உணவை உட்கொள்ள முற்படுங்கள்.
மேற்கூறிய வீட்டு வைத்தியங்கள், தொடைகள் உரசுவதால் ஏற்படும் காயத்தை சமாளிக்க உதவும் என்றாலும், காயம் விரைவில் சரியாகாமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.