Heat rashes problem cure Image Credits: Boldsky Tamil
ஆரோக்கியம்

கோடைக்காலத்தில் வியர்க்குரு வராமல் தடுப்பது எப்படி?

நான்சி மலர்

ம்முடைய சருமத்தின் ஆழமான பகுதியான டெர்மிஸ்ஸில் (Dermis)தான் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. இந்த வியர்வை சுரப்பிகளிலிருந்துதான் வியர்வை உருவாகி வெளியிலே வருகிறது. அதிகப்படியாக வியர்க்கும்போது சில சமயங்களில் வியர்வை சுரப்பியின் வாய்ப்பகுதி அடைத்துக்கொள்ளும். அப்போது உருவாகும் வியர்வை வெளியே வர முடியாமல் வியர்வை சுரப்பியினுள்ளே சேர்ந்து வியர்க்குருவாக மாறிவிடுகிறது.

நமது உடலில் உள்ள சூட்டை வியர்வை என்னும் தண்ணீர் மூலம் வெளிக்கொண்டு வந்து விடுகிறது. பிறகு அந்த வியர்வை நம் சருமத்தில் படும்போது சருமத்தில் இருக்கும் சூடு தணிந்து ஆவியாக மாறிவிடுகிறது. உடலில் வியர்க்குரு வருவதால் உடலில் அரிப்பு ஏற்படும். அதை அதிகமாக சொரிந்து விட்டுவிட்டால், புண்ணாகும் வாய்ப்பிருக்கிறது.

இந்த வியர்க்குருவில் நிறைய வகைகள் உண்டு. மேலோட்டமாக வியர்வை சுரபி அடைத்திருந்தால் Miliaria crystallina என்ற வியர்க்குரு வரும். இதனால் பெரிய அரிப்பெல்லாம் வராது. இதை பெரும்பாலும் பிறந்த குழந்தைகளிடம் நெற்றி, நெஞ்சு பகுதியில் பார்க்கலாம். அடுத்து இன்னும் கொஞ்சம் ஆழமான பகுதியில் அடைப்பிருந்தால் Miliaria Rubra என்ற வியர்க்குரு வரலாம். இதுதான் நாம் பரவலாகக் கேள்விப்படும் வியர்க்குருவாகும். இதனால் அரிப்பு இருக்கும்.சருமம் சிவந்து விடும்.

வியர்க்குரு வராமலிருக்க உடல் சூட்டை குறைக்க வேண்டும். அதற்கு அடிக்கடி குளிக்கலாம், ஏசி, ஃபேன் ஆகியவற்றை பயன்படுத்தலாம், குளிர்ந்த பானமான இளநீர், நுங்கு போன்றவற்றை சாப்பிடலாம். அதிகமாக தண்ணீர் குடிக்கலாம். காற்றோட்டமான இடத்திலே அமர்ந்து வேலை செய்யலாம், இருக்கமான உடைகளை அணியாமல், தளர்ந்த உடைகளை அணியலாம்.

வியர்க்குரு வந்த இடத்தில் அதிகப்படியாக பவுடர் போட்டுக்கொள்ளும்போது அதுவே வியர்வை சுரப்பிகளை அடைத்துக்கொள்ளும் வாய்ப்புள்ளது. அதனால் சந்தனம் பயன்படுத்துவது நல்லது. உணவு வகைகளில் அதிகமாக எண்ணெய் பதார்த்தம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும், வெயிலில் அதிகம் நேரம் அலைவதை நிறுத்திக்கொள்ள வேண்டும், வாரம் இருமுறை நல்லெண்ணெய் குளியல் மிகவும் அவசியமாகும்.

வெள்ளரிக்காய் போன்றவற்றை சிறு துண்டுகளாக வெட்டி முகத்தில் வைத்திருந்து கழுவினால் வியர்க்குரு வருவது குறையும். வியர்க்குரு உடலிலே வந்தாலும் இரண்டு மூன்று நாட்களில் தானாகவே சரியாகிவிடும். வியர்க்குரு அரிக்கிறது என்று அதை சொரிந்து புண்ணாக்காமல் பார்த்துக்கொண்டால் போதுமானது. இதையெல்லாம் இந்தக் கோடைக்காலத்தில் வீட்டிலே செய்து பார்த்து வியர்க்குரு வராமல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT