பொ.பாலாஜிகணேஷ்
அப்பப்பா... இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கும் முன்னரே பல மடங்கு வெயில் நம்மை வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. வெயில் நேரத்தில் நமக்கு என்ன தோன்றும்? ஆஹா! எங்கேயாவது வெளியூர் போகலாம், எங்கேயாவது ஜில்லென்று இருந்து விட்டு வரலாம், மனதுக்கும் உடலுக்கும் இதமாக இருக்கும் என்ற யோசனை உங்களுக்கு வரலாம். அப்படி வந்தால் கீழ்கண்ட இந்த இடங்களுக்கு சென்றால் உங்கள் எண்ணங்கள் நிச்சயம் நிறைவேறும். அதற்குத்தான் இப்பதிவு.
குமுளி, கேரளா: கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குமுளி, மசாலா தோட்டங்களுக்கும், அமைதியான நீரோடைகளுக்கும் பசுமையான மலைகளுக்கும் பெயர் பெற்றது. சுற்றுலாவாசிகள் இங்குள்ள பெரியார் புலிகள் காப்பகத்தை சுற்றிப் பார்க்கலாம்; பெரியார் ஏரியில் படகு சவாரி செய்யலாம்; அமைதியான சுற்றுச்சூழலுக்கு இடையே அமர்ந்து சுவைமிகுந்த கேரள உணவை ருசிக்கலாம்.
குன்னூர், தமிழ்நாடு: நீலகிரி மலைப்பகுதியில் அமைந்துள்ள குன்னூர், பசுமையான மலை வாசஸ்தலமாகும். இங்குள்ள தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், பரந்தக் காட்சிகள் சுற்றுலாவாசிகளை நிச்சயம் ஈர்க்கும். அருகிலுள்ள தேயிலை தோட்டங்களுக்குச் சென்று டீ தயாரிக்கும் முறையை பார்வையிடலாம். இயற்கை அழகை ரசித்தபடியே பல்வேறு வகையான பறவைகளை காணலாம்.
ஹம்பி, கர்நாடகா: பழங்கால கட்டிடங்களும் கோயில்களும் அமைந்துள்ள, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பி நகரம், யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகும். கடந்த காலத்தை பார்வையிட விரும்புகிறவர்களுக்கு இதுவொரு மிகச்சிறந்த இடம். கோயில்கள், சிற்பங்கள், கோபுரங்கள் என விஜயநகர பேரரசின் பெருமைகளை ஒவ்வொரு பாறைகளிலும் கண்டு ரசிக்கலாம்.
காவி, கேரளா: கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அடர்ந்த காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள காவி, ஒரு அழகான கிராமமாகும். மலையேற்றம், பறவை நோக்குதல், பெரியார் புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு சஃபாரி ஆகியவை இங்கு மிகவும் பிரபலம்.
செட்டிநாடு, தமிழ்நாடு: ஆடம்பர வீடுகள், துடிப்புமிக்க கலாச்சார பாரம்பரியம், நாக்கில் எச்சில் ஊற வைக்கும் சமையல் முறை என தமிழ்நாட்டில் உள்ள செட்டிநாட்டில் சுற்றுலாவாசிகளின் மனதை ஈர்க்கும் அத்தனை விஷயங்களும் உள்ளன. இங்கு வருகை தரும் சுற்றுலாவாசிகள் பலவகை மசாலாவின் சுவை கலந்த உணவை ருசிக்கலாம்; ஆடம்பரமும் செழிப்பும் நிறைந்த வீடுகளை சுற்றிப்பார்க்கலாம்.
அரக்குவேலி, ஆந்திரபிரதேசம்: கிழக்கு மலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள அரக்குவேலியில் கண்ணைக் கவரும் நிலப்பரப்புகளும், காஃபி தோட்டங்களும், பழங்குடி இன கலாச்சாரத்தையும் கண்டு ரசிக்கலாம். இங்குள்ள பழங்குடி கிராமங்களுக்கு நேரில் சென்று அவர்களின் கலாச்சாரம், பாரம்பரியம், உணவுமுறையை தெரிந்துக்கொள்ளலாம். இது உங்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.
கூர்க், கர்நாடகா: இந்தியாவின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படும் கூர்க், பிரபலமான மலை வாசஸ்தலங்களில் ஒன்று. பனி மூடிய மலைகள், சுற்றிலும் காஃபி எஸ்டேட்டுகள், பசுமை போர்த்திய மலைகள் என சுற்றுலாவாசிகள் ரசிக்க நிறைய இடங்கள் உள்ளன. சாகசப் பிரியர்களுக்கு அபேய் மற்றும் இருப்பு அருவிகள் உள்ளன.
ஆலப்புழா, கேரளா: மனதை மயக்கும் கழிமுகங்கள் நிறைந்த ஆலப்புழா, கேரளாவின் அழகான கிராமமாகும். படகுவீட்டில் தங்குதல், கால்வாய் ஓரமாக பயணம் செய்தல், துடிப்பான கிராம வாழ்க்கையை கண்டு ரசித்தல், உள்ளூர் சமையல் கலைஞர்களின் கை வண்ணத்தில் சமைத்த உணவுகள் என சுற்றுலாவாசிகளை திக்குமுக்காடச் செய்ய நிறைய விஷயங்கள் ஆலப்புழாவில் உள்ளன.
வேகமான், கேரளா: பனி மூடிய பள்ளத்தாக்குகள், பசுமையான புல்வெளிகள், பைன் மரக்காடுகள் போன்றவை நிறைந்த அருமையான மலை வாசஸ்தலம் வேகமான். முருகன் மலை மற்றும் தங்கல் பாறை போன்ற இடங்கள் உங்களுக்கு நிச்சயம் பிடித்தமானதாக இருக்கும். மேலும் இங்கு நீங்கள் பாரா க்ளைடிங், மலை ஏற்றம் போன்ற சாகச விஷயங்களிலும் ஈடுபடலாம்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி, தமிழ்நாட்டின் கடலோர நகரம். இந்தியாவின் தென் முனையில் உள்ளது. ஆங்கிலேயர்கள் இதனை கேப் கொமரின் என்று அழைத்தனர். கடலில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் காட்சிகள் மிகவும் கண்கவர் காட்சிகளாகும்.