கே.எஸ்.கிருஷ்ணவேனி
எறும்புகள் சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு பூச்சியினம். எறும்புக்கு உறவி, இறும்பி, எறும்பி என பல பொதுப் பெயர்கள் உண்டு.
தேனெறும்பு, பருந்தலை எறும்பு, பனங்கட்டி எறும்பு, பிள்ளையார் எறும்பு, நிமிண்டி, பேய்க்கால் எறும்பு (நீளமான கால்களை உடைய கருப்பு எறும்பு), வரம், ஆயெறும்பு, நாயெறும்பு, உலூதை, நெசவாளர் எறும்பு என எறும்புகளில் பல வகைகள் உள்ளன.
உலகில் மிகப் பழமையான உயிரினங்களில் எறும்புகளும் ஒன்று. உலகெங்கும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான எறும்பு வகைகள் உண்டு.
ஒரு எறும்பு அதன் எடையை விட 30, 40 மடங்கு அதிக எடையை சுமக்கும் சக்தி பெற்றது. நெசவாளர் எறும்பு அதன் எடையை விட 100 மடங்கு அதிகம் உள்ள பொருட்களை தூக்கும் தன்மை கொண்டது.
அண்டார்டிகா கண்டத்தைத் தவிர அனைத்து இடங்களிலும் எறும்புகளை காண முடியும்.
எறும்புகளுக்கும் காது கிடையாது. அதிர்வலைகள் மூலமே அவை தொடர்பு செய்து கொள்ளும்.
ஒரு சில எறும்புகள் தண்ணீருக்கு மேல் மிதக்கும் தன்மை கொண்டவை.
எறும்புகளுக்கு என்று தனியாக சுவாச அமைப்பு கிடையாது. உடலைச் சுற்றி ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் சுவாச வழிகள் உள்ளன.
எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் உண்டு என்பது ஆச்சரியமான விஷயம்.
சாதாரண எறும்புகள் 90 நாட்கள் வாழும். கருப்பு வகை பெண் எறும்புகள் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
கருப்பு எறும்புகளை பிள்ளையார் எறும்புகள் என்று கூறுகிறோம். இந்த எறும்புகள் நம்மை கடிப்பது இல்லை. நமக்கு துன்பம் தராததால் சாமி எறும்பு என்று சொல்கிறோமோ என்னவோ.
நம் வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டால் வீடு லட்சுமி கரமாக இருப்பதுடன் கட்டாயம் பிள்ளையார் எறும்புகள் வரும். வீட்டில் இந்த எறும்புகள் வந்தால் பணவரவு அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
சில சமயம் நிறைய எறும்புகள் வரிசை கட்டி வந்துவிடும். மூலை முடுக்குகளில் நிறைய தென்படும் போது அதை சாகடிக்காமல் சிறிது தண்ணீரை கையில் எடுத்து தெளித்து விட நொடியில் எறும்புகள் கூட்டம் கலைந்து காணாமல் போய்விடும்.
சில சமயம் சர்க்கரைக்கு எறும்புகள் வரும். இதற்கு ஒரு சின்ன கட்டி கற்பூரத்தை பேப்பரில் மடித்து சர்க்கரை டப்பாவில் போட்டு விட எறும்புகள் ஓடிவிடும்.
மஞ்சள் தூள் சிறிது எடுத்து எறும்புகள் வரிசை கட்டி செல்லும் இடத்தில் போட்டு விட காணாமல் ஓடிப் போய்விடும்.
சுள்ளி எறும்புகள் கடிக்கும்போது ஃபார்மிக் ஆசிட் (formic acid) தெளிக்கப்படுவதால் நமக்கு வலி ஏற்படுகிறது. சில எறும்புகள் கடித்தாலும் நமக்கு வலி தெரிவதில்லை. காரணம் ஃபார்மிக் ஆசிடின் அளவு சிறியதாக இருக்கும்.
கட்டெறும்புகள்: இவை கருப்பாக இருக்கும். கால் பழுப்பு நிறமாக இருக்கும். இவற்றிற்கு பற்கள் உண்டு. கடித்தால் வலிக்கும்.
எறும்புகள் குழுக்களாக வாழும் தன்மை கொண்டவை. இவை உணவு தேட செல்லும்போது பீரோமோன் (Pheromone) என்னும் ரசாயனத்தை வழி நெடுக விட்டுச்செல்லும். இதனால் முதலில் செல்லும் எறும்பின் ரசாயனத்தை அதன் பின்வரும் எறும்பு பின் தொடரும், தானும் ரசாயனத்தை விட்டுச் செல்லும். இதனால் அனைத்து எறும்புகளும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக செல்லும்.