சி.ஆர்.ஹரிஹரன்
உருளைக்கிழங்கை வெட்டிய பிறகு சிறிதளவு எலுமிச்சைச் சாறு தடவி வைத்தால் கறுத்துப்போகாது.
கடலை உருண்டை பிடிக்கும்போது நல்லெண்ணெய் தொட்டுப்பிடித்துப் பாருங்கள். உருண்டையின் மேல் கண்ணாடி போல் பளபளப்பாக இருக்கும்.
இட்லி மிளகாய்ப்பொடி அரைக்கும்போது சிறிது கொப்பரை சேர்த்தால் சுவையும் மணமும் அதிகரிக்கும்.வேர்க்கடலையை வறுத்து அரைத்தும் சேர்க்கலாம்.
வெண்ணெய் மீது ஒரு ஸ்பூன் சர்க்கரையைத் தூவி வைத்தால் உலராமல் அப்படியே இருக்கும்.
மாங்காய் ஊறுகாய் போடும்போது கல் உப்பை சிறிது நேரம் வாணலியில் வறுத்துப்பொடி செய்துபோட்டால் பல மாதங்கள் வரை ஊறுகாய் கெடாமல் இருக்கும்.
வெங்காய பக்கோடா கமகமவென்று மணக்க ஒரு வெங்காயத்தையும், சிறிது இஞ்சியைஅரைத்து, அதை மாவில் கலந்து பக்கோடா செய்ய வாசனை தூக்கலாக இருக்கும்.
இட்லிமாவில் ஒரு வெற்றிலையை போட்டு வைத்தால் மாவு பொங்கி வழியாது. அதிகம் புளிக்கவும் செய்யாது.
வாழைக்காயை வாங்கி வந்ததும், தண்ணீரில் மூழ்குமாறு அகன்ற பாத்திரத்தில் போட்டு வைத்து தினமும் அந்த நீரை மாற்றி வந்தால், குறைந்தது ஒரு வாரம் வரை ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
தேங்காயுடன் கொஞ்சம் பால் விட்டு தேங்காய் பர்பி செய்தால் வெள்ளையாக இருக்கும்.
அடைக்கு அரைக்கும்போது, அத்துடன் சிறிது இஞ்சி, மிளகு ஆகியவற்றையும் சேர்த்து அரைத்து செய்தால் எளிதில் ஜீரணமாகும். வாயுத்தொல்லையும் ஏற்படாது.