
தமிழ்நாடு, இன்று தொழில் வளர்ச்சியில் இந்தியாவிற்கே ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. தொழிற்சாலைகளின் எண்ணிக்கையிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முன்னணி வகிப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இப்படிப்பட்ட சாதகமான சூழலில், "சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும்" என்ற கனவுடன் இருக்கும் பலருக்கு, 2025 ஆம் ஆண்டு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது. மாறிவரும் தொழில்நுட்பம், மக்களின் தேவைகள் மற்றும் தமிழக அரசின் புதிய திட்டங்கள் ஆகியவை இணைந்து, பல புதிய தொழில் வாய்ப்புகளுக்குக் அடித்தளம் அமைத்துள்ளன. சரியான திட்டமிடலுடன் களமிறங்கினால், நீங்களும் அடுத்த ஆண்டின் வெற்றிகரமான தொழில்முனைவோராக வலம் வரலாம்.
சுற்றுச்சூழல் சார்ந்த தொழில்கள்:
இன்றைய காலகட்டத்தில், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளது. இதுவே ஒரு புதிய வணிக வாய்ப்புக்கான திறவுகோல். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றான பொருட்களைத் தயாரிப்பது, உதாரணமாக, பாக்குமட்டை தட்டுகள், காகிதப் பைகள், துணிப்பைகள் போன்ற தொழில்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இதனுடன், நகரங்களில் உருவாகும் கழிவுகளை மறுசுழற்சி செய்து உரம் தயாரிப்பது, இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை நேரடியாக விற்பனை செய்வது போன்ற தொழில்களும் நல்ல லாபம் தருவதோடு, சமூகத்திற்கும் நன்மை பயக்கும்.
தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள்:
உலகமே டிஜிட்டல் மயமாகி வரும் வேளையில், அதற்கான சேைகளை வழங்குவது புத்திசாலித்தனமான தொழில் தேர்வாகும். இன்று சிறிய மளிகைக் கடை முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவருக்கும் ஒரு இணையதளம் மற்றும் சமூக ஊடக மார்க்கெட்டிங் அவசியமாகிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சி தொடங்குவது, உள்ளூர் வணிகங்களுக்கு ஆன்லைன் விளம்பரங்கள் செய்து தருவது போன்றவை அதிக தேவையுள்ள சேவைகள்.
மேலும், ட்ரோன் தொழில்நுட்பம் விவசாயம், திருமணம் போன்ற நிகழ்வுகளின் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது, நில அளவை போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. எனவே, ட்ரோன்களை இயக்குவதற்கும், பழுதுபார்ப்பதற்கும் பயிற்சி அளிக்கும் மையங்கள் அல்லது சேவை வழங்கும் நிறுவனங்களைத் தொடங்குவது எதிர்காலத்தில் பெரும் வளர்ச்சி அடையும்.
உணவு மற்றும் விவசாயம் சார்ந்த நவீன தொழில்கள்:
உணவுத் தொழிலுக்கு ஒருபோதும் அழிவில்லை. ஆனால், அதை தற்போதைய தேவைக்கு ஏற்ப நவீனமாகச் செய்வது அவசியம். பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு நகர்ப்புறங்களில் தேவை அதிகரித்து வருகிறது. சிறுதானியங்களைக் கொண்டு பிஸ்கட், நூடுல்ஸ் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யலாம்.
தமிழக அரசு தேனி, திண்டிவனம் போன்ற இடங்களில் உணவுப் பூங்காக்களை அமைத்து ஊக்குவிப்பதால், இதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. மேலும், 'கிளவுட் கிச்சன்' எனப்படும், டெலிவரிக்கு மட்டுமேயான உணவகங்களை சிறிய இடத்தில் தொடங்கி, ஸ்விக்கி, ஸொமாட்டோ போன்ற செயலிகள் மூலம் விற்பனை செய்வது குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்ட ஒரு சிறந்த வழியாகும்.
வளர்ந்து வரும் உற்பத்தித் துறை:
தமிழ்நாடு, மின்னணுப் பொருட்கள் மற்றும் வாகன உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அவற்றுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைப்பது ஒரு நீண்டகால லாபம் தரும் தொழிலாகும். அரசு, ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் மின்சார வாகன உற்பத்திப் பூங்காக்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்குத் துணையாக, சிறிய உதிரிபாகங்கள் தயாரிப்பது அல்லது வாகன பழுதுபார்க்கும் சேவைகளை வழங்குவது போன்ற தொழில்களைத் தொடங்கலாம்.
மேலே குறிப்பிடப்பட்டவை சில உதாரணங்கள் மட்டுமே. ஒவ்வொருவரின் திறமைக்கும், முதலீட்டுக்கும் ஏற்ப எண்ணற்ற வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மிக முக்கியமாக, புதிதாக தொழில் தொடங்குவோரை ஊக்குவிக்க, தமிழக அரசு பல திட்டங்கள் மூலம் மானியத்துடன்கூடிய கடனுதவிகளை வழங்குகிறது.
எனவே, தயக்கங்களைத் தவிர்த்து, சரியான தொழில் ஐடியாவைத் தேர்ந்தெடுத்து, முழுமையான திட்டமிடலுடன் அடியெடுத்து வையுங்கள்.