
இறைவன் நமக்குத் தந்த கொடை இந்த வாழ்க்கை. சிலரால் சரியாக அதை வாழ முடிகிறது. சிலருக்கு ரயில் பெட்டி போல தடம் மாறி விடுகிறது. சாதாரண சூழலோ, நல்ல கட்டமைப்பான வாழ்க்கையோ எதுவாய் இருந்தாலும் நாம் திட்டமிடுதலுடன் வாழ்ந்துதான் ஆக வேண்டியுள்ளது. இந்தக் கால வாழ்வில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குப் போய் வருவாய் ஈட்டினால்தான் குடும்பம் நடத்த இயலும் என்ற சூழல் வந்துவிட்டது. அதோடு, ஆரோக்கியமான உடல் அமைப்பும் அவசியம் இருக்க வேண்டும். அதை பலர் தவற விடுவதும் நடைமுறையே!
பொதுவாக, நாம் படித்து திருமணமான நிலையில் பெரும்பாலான பெற்றோா்களுக்கு வயது அறுபதை நெருங்கலாம். அந்தத் தருணத்தில் பெற்றோா்களின் ஆரோக்கியமும் நமது கணக்கில் வந்துவிடும்! ஆக, அவர்களது மருத்துவ செலவு மற்றும் இன்ன பிற தவிா்க்க இயலாத செலவுகள் வந்து போவதும் இயற்கை. பெற்றோா்கள் பணம் சோ்த்து வைத்திருக்கலாம், சோ்த்து வைக்காமலும் இருக்கலாம். அதை நாம் புாிந்துகொள்ள வேண்டும்.
அவர்கள் சரிவர தங்களது ஆரோக்கியம் தொடர்பாக முன்னெச்சரிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம். இப்போதெல்லாம் யாருக்கு எந்த விதத்தில் என்ன நோய் வருகிறது என்பது தொியாத ஒன்று. ஆக, அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயம் ஆரோக்கியத்தில் கவனம், சேமிப்பில் நிதானம். இவை இரண்டுமே முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க வாயப்பில்லை.
‘எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்’ என்பது போல உடல் ஆரோக்கியமும் பிரதானமே! எனவே, நாம் நமது இருபத்தி ஐந்து வயதில் வேலைக்கு செல்வதாக இருந்தால், தோராயமாக மாத சம்பளம் ஒரு லட்சம் என வைத்துக்கொண்டால் மாதம் பத்தாயிரம் வீதம் அஞ்சலகத்தில் தொடர் சேமிப்பில் முதலீடு செய்வதே நல்லது. அதேபோல, முப்பது வயதில் திருமணம் என வைத்துக்கொண்டால் வேலைக்குப் போகும் மனைவியாக இருந்தால் அவரது ஊதியத்திலும் ஏறக்குறைய பத்தாயிரம் வீதம் சேமிக்கும் பழக்கம் வர வேண்டும்!
முதலாவது சேமிப்பு தாய், தந்தையர்களுக்கானது. அடுத்த சேமிப்பு என்பது நமது வாாிசுகளின் எதிா்காலத்திற்கானது என்ற திட்டமிடல் அவசியம்! அதேபோல, ஆரோக்கியம், நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், சரிவிகித கலோாிகள் அமைந்த உணவு, ஆடம்பரம், டாம்பீகம் இல்லாத வாழ்க்கை, யோகா, தியானம் இப்படி பல்வேறு விஷயங்களில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வதே சாலச்சிறந்தது. இது போலவே, வயதான பொியவர்களுக்கும் அதிக சிரமம் கொடுக்காமல், அவர்களும் உடற்பயிற்சி முறைகளில் அவர்களால் செய்ய முடிந்த வகையில் செய்யலாம்.
வீடு கட்டுவதாக இருந்தால் நிதானமாக செயல்பட்டு, வங்கிகளில் அதிக வட்டிக்கு கடன் வாங்காமல் கொஞ்சம் சேமிப்பில் கவனம் காட்டி அதற்கேற்றாற்போல ஆடம்பரமில்லாமல் மேற்கொள்வதே நல்லது. பொியவர்களுக்கு உாிய மரியாதை கொடுத்து, அவர்கள் மனம் சங்கடப்படாத வகையில் அவர்கள் மீது அக்கறை காட்டி அன்பு செலுத்துங்கள்.
எப்படியும் தாய், தந்தைக்கு எழுபது வயதில் வரும் வயோதிகத்தை கருத்தில் கொண்டு அவர்களின் தேவையை பூா்த்தி செய்யுங்கள். இதுபோன்ற தருணத்தில் இருபத்தி ஐந்து வயதில் நாம் சேமிக்கத் தொடங்கிய பணம் நமது தாய், தந்தையர்களான முதியவர்களுக்கு உதவியாய் அமையட்டும். அப்போது அவர்கள் இருவரையும் பாா்த்துக்கொள்ள ஒரு பணியாளரை வேலைக்கு அமர்த்திக்கொள்வது மிகவும் நல்லதாகும். அதேபோல, மனைவியின் சேமிப்பு நமது வாாிசுகளின் எதிா்காலத்திற்கு உதவும்.
பொதுவாக, வயதான காலத்தில் பொியவர்களின் மனோநிலை ஒரு குழந்தையைப் போலத்தான். அவர்கள் நூறாண்டு காலம் ஆரோக்கியமாக இருக்கட்டும். அது நல்லதே. இருப்பினும், எந்த நேரம் எது வரும் என யாருக்கும் தொியாது! எனவே, சரியான நேரத்தில், சரியான திட்டமிடுதலுடன் கூடிய சேமிப்பு, ஆரோக்கியம், தெய்வ வழிபாடு, நல்ல உணவு, நல்ல பழக்க வழக்கங்கள், ஆடம்பரமில்லா வாழ்க்கை, புாிந்து கொண்டு வாழும் தன்மை இவற்றை கவனத்தில் கொண்டு வாழ்வதே சிறப்பானதாகும். வெள்ளம் வரும் முன்பே அணை போடுதல் அனைவருக்கும் நல்லதே!