
இந்தியாவில் உள்ள முன்னனி கார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், புதுப்புது மாடல் கார்களை சந்தையில் அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. ஒரு நிறுவனம் வெளியிடும் மாடலை பார்த்து போட்டி நிறுவனம் அதை விட கூடுதல் அம்சங்களுடன் மற்றொரு காரை அறிமுகப்படுத்துகிறது. அந்த வகையில் தற்போது ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம், அதன் தயாரிப்பான சிட்டி செடான் காரில் ஸ்போர்ட் எடிஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் ஆரம்ப ஷோரூம் விலை சுமார் ரூ.14.89 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்பெஷல் எடிஷன்
புதிய சிட்டி ஸ்போர்ட் கார் ஆனது 5-ம் தலைமுறை ஹோண்டா சிட்டி காரை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, 5-ம் தலைமுறை சிட்டி காரில் வழங்கப்படும் அத்தனை அம்சங்களும் புதிய சிட்டி ஸ்போர்ட் காரிலும் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, புதிய சிட்டி ஸ்போர்ட் காரில் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் ஐ-விடெக் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
எத்தனால் 20 சதவிகிதம் கலக்கப்பட்ட பெட்ரோலை ஏற்கக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 119 பி.எச்.பி. மற்றும் 145 என்.எம். டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. பெடல் ஷிப்டர்கள் உடன் வழங்கப்படும் இந்த பெட்ரோல் என்ஜின் மூலம் அதிகபட்சமாக லிட்டருக்கு 18.4 கி.மீ. மைலேஜை பெறலாம் என ஹோண்டா தெரிவிக்கிறது.
வெளித்தோற்றம்...
சிட்டி ஸ்போர்ட் காரின் வெளிப்பக்கத்தில், முன்பக்க கிரில் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டு இருக்க, அதற்கு ஏற்ப டிரங்க் லிப் ஸ்பாய்லர், மேற்கூரையில் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா மற்றும் பின்பக்கத்தில் பளபளப்பான கருப்பு நிற கண்ணாடி போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. காரின் மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்கள் கிரே நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.
உள்தோற்றம்...
காரின் உட்புறம் கேபின் முழுவதுமாக கருப்பு நிறத்தில் காட்சி அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இருக்கைகள், டோர் இன்செர்ட்கள் மற்றும் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவை சிவப்பு நிறத்தில் தையலிடப்பட்டு உள்ளன. ஹோண்டா சென்சிங், குரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் உள்ளிட்ட அடாஸ் பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.