தீபாவளி கார் விற்பனை ரேஸில் முந்திக் கொள்ள முன்னணி கார் நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. அக்டோபர் மாதம் புதிய கார்களை களம் இறக்கி சந்தையில் முன்னணி இடத்தைப் பிடிக்க மல்லு கட்ட தயாராகி உள்ளன. இந்த ரேஸில் மஹிந்திரா, ஸ்கோடா மற்றும் மினி போன்ற பிராண்டுகள் இந்தியாவில் பல்வேறு பிரிவுகளில் புதிய கார்களை அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளன.
பண்டிகை கால பரபரப்பைப் பயன்படுத்திக் கொள்ள, மஹிந்திரா, ஸ்கோடா மற்றும் மினி போன்ற நிறுவனங்கள், தங்களது கார்களை புதிய வசதிகளுடன் சந்தையில் அறிமுகப் படுத்த உள்ளது. அந்த கார்களைப் பற்றிய விவரங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.
மஹிந்திராவின் தார் (Mahindra Thar) வகை ஜீப்பிற்கு சந்தையில் அதிக கிராக்கி உள்ளது. தாரில் 3 கதவு மற்றும் 5 கதவு கொண்ட மாடல்கள் வெளியாகியுள்ளன. இதில் 3 கதவு பேஸ்லிப்ட் மாடலில் பல புதிய அம்சங்களை சேர்த்து மஹிந்திரா மேம்படுத்தியுள்ளது. அல்டிமேட் லைஃப்ஸ்டைல் SUV என்று அழைக்கப்படும் புதிய தார், வெளிப்புறத்தில் அதன் கரடுமுரடான அம்சங்களை தக்கவைத்துக் கொண்டு , உப்புறத்தில் பிரீமியம் காருக்கு உண்டான பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது.
உள்ளே புதிய ஏசி சுவிட்சுகள், 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா மற்றும் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கரடுமுரடான பாதையில் மலை ஏறவும், சாகச விரும்பிகளின் முதல் தேர்வாகவும் தார் உள்ளது. இது பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் வகைகளில் கிடைக்கிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ₹12 லட்சத்தில் ஆரம்பமாகிறது.
மஹிந்திராவின் தாருக்கு என்று ரசிகர்கள் இருப்பதை போல பொலிரோவிற்கும் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி, போலீஸ் அதிகாரிகளின் விருப்பமான தேர்வாக இந்த கம்பீரமான வாகனம் உள்ளது. கூர்மையான புதிய கிரில் வடிவமைப்பு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட பம்பர் சேர்க்கப்பட்டுள்ளன. டேஷ்போர்டு மல்டிமீடியா செயல்பாடுகளை ஆதரிக்கும் 7-இன்ச் டச்ஸ்கிரீன் யூனிட் பொருத்தப்பட்டுள்ளது.
Ride Flo Tech சேர்த்ததன் மூலம் கரடுமுரடான சவாரியிலும் உள்புறம் மென்மையான அனுபவம் கிடைக்கிறது. USB Type-C போர்ட்கள், கதவு பேனல்களில் மேம்படுத்தப்பட்ட பாட்டில் ஹோல்டர்கள் மற்றும் லெதரெட் இருக்கைகள் பொருத்தப்பட்டு மஹிந்திரா பொலிரோ நியோ (Mahindra Bolero Neo) டாப் B8 மற்றும் அப்ஹோல்ஸ்டரி மாடல்கள் கிடைக்கிறது.இதன் எக்ஸ் ஷோரூம் விலை 7.99 லட்சத்தில் இருந்து ஆரம்பமாகிறது.
ஸ்கோடா ஆக்டேவியா தனது சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு பெயர் பெற்றது. மேம்படுத்தப்பட்ட ஆக்டேவியா ஆர்.எஸ் பதிப்பு இந்த மாதம் அக் 17 அன்று விற்பனைக்கு வர உள்ளது. கண்ணைக் கவரும் மாம்பா கிரீன், மேஜிக் பிளாக், ரேஸ் ப்ளூ, கேண்டி ஒயிட் மற்றும் வெல்வெட் ரெட் ஆகிய பளிர் வண்ணங்களில் இந்த கார் கிடைக்கிறது.
10 ஏர்பேக்குகள், 19-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், 12.9-இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், கூலிங், ஹீட்டிங், மசாஜ் மற்றும் மெமரி செயல்பாடுகளுடன் கூடிய முன்பக்க ஸ்போர்ட் இருக்கைகள், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் மொபைல் ப்ரொஜெக்ஷன், டைப் -C சார்ஜிங் போர்ட்கள் மற்றும் 675W கேன்டன் மியூசிக் சிஸ்டம் ஆகிய உயர்ரக அம்சங்களுடன் கிடைக்கும் இந்த கார் , வெறும் 100 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு வர உள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை தோராயமாக ₹45 - 50 லட்சமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு அழகிய வடிவில் இருக்கும் மினி நிறுவன கார்கள் அந்தஸ்து மிக்க இளைஞர்களின் தேர்வாக உள்ளது. இதில் உள்ள 4 சிலிண்டருடன் கூடிய டர்போ பெட்ரோல் எஞ்சின் இது 300 BHP மற்றும் 400 NM ஆற்றலை உருவாக்கும். இதில் 7 ஸ்பீட் டூயல் கிளட்ச் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.5.4 நொடிகளில் 100 கிமீ வேகம் எடுப்பது இதன் முக்கிய சிறப்பம்சம். இந்த கார் அக்டோபர் 14 அன்று அறிமுகமாக உள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை தோராயமாக ₹50-52 லட்சம் வரை இருக்கலாம்.