
ELSS நிதிகள் என்றால் என்ன?
ELLS நிதிகள் (Equity Linked Savings Scheme) என்பவை பங்கு சந்தைகளில் முதலீடு செய்து, வருமான வரிச் சட்டம் 1961ன் பிரிவு 80Cன் கீழ் வரி விலக்குகள் வழங்கும் ஒருவகை மியூச்சுவல் ஃபண்டுகளாகும். இந்த நிதிகள் பெரும்பாலும் ஈக்விட்டிகள் மற்றும் ஈக்விட்டி தொடர்பான கருவிகளில் முதலீடு செய்கின்றன. இந்த நிதிகளில், முதலீட்டாளர்கள் 3 வருட லாக்-இன் காலத்துடன் தங்களின் முதலீட்டை பெருக்கிக் கொண்டு வரி சேமிப்பையும் பெறலாம்.
ELSS நிதிகளில் எப்படி முதலீடு செய்வது?
ELSS நிதிகளில் முதலீடு செய்ய, முதலில் மியூச்சுவல் ஃபண்ட் தளங்கள், வங்கிகள் போன்ற ஆன்லைன் போர்டல்களில் பதிவு செய்ய வேண்டும். பிறகு சிறந்த ELSS நிதியைத் தேர்ந்தெடுத்து, நம் நிதி இலக்குகளுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். மொத்தமாக அல்லது முறையான முதலீட்டு திட்டங்கள்(SIP) மூலமாகவும் முதலீடு செய்யலாம்.
ELLS நிதிகளின் முக்கிய அம்சங்கள்:
பங்குகளில் முதலீடு:
ELSS நிதிகள், தங்கள் முதலீட்டில் பெரும்பகுதியை ஈக்விட்டி அல்லது ஈக்விட்டி தொடர்பான கருவிகளில் முதலீடு செய்கின்றன. இது ஒரு பன்முகப்படுத்தப்பட்ட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். இது பல்வகைப்பட்ட நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்கிறது.
வரிச்சலுகைகள்:
ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம்கள் என்பவை ஈக்விட்டி சார்ந்த வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட்களாகும். இவை வருமான வரி சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி சேமிப்பை அளிப்பதுடன், ஈக்விட்டிகளின் வளர்ச்சி சாத்தியக்கூறையும் வழங்குகின்றது. இந்த இரண்டு நன்மைகளுடன் இவற்றின் லாக்-இன் காலம் 3 வருடங்கள் தான். வரி சேமிப்பு வகை ஸ்கீம்களில் கிடைக்கின்ற மிகக் குறைவான லாக்-இன் காலம் இதுவே. அதோடு இந்த ஃபண்ட்கள் ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளாக இருப்பதால் அவற்றுக்கே உரித்தான சில நன்மைகளையும் அளிக்கின்றது.
குறைந்தபட்ச லாக்-இன் காலம்:
இந்த நிதிகளில் முதலீடு செய்யும் பணம் குறைந்தது மூன்று வருடங்களுக்கு லாக்-இன் செய்யப்படும். அதாவது அந்த காலகட்டத்தில் அந்த பணத்தை எடுக்க முடியாது. ஆனால் லாக்-இன் காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து முதலீடு செய்ய முடியும்.
ஆனால் வரி சேமிப்புக்கான பிற ஸ்கீம்களில் லாக்-இன் காலம் முடிந்ததும் பணம் தானாக முதிர்வடைந்து விடும் அல்லது வட்டியாக கிடைக்கும் லாபம் அதன் பிறகு வராமல் நின்று விடும். முதலீட்டாளர் விரும்பும் காலம் வரை தொடர்ந்து முதலீடு செய்து வைத்தபடியே இருக்கலாம். எந்த அளவு நீண்ட காலம் முதலீட்டை வைத்திருக்கிறோமோ அந்த அளவுக்கு முதலீட்டு ரிஸ்க் குறையும். அதோடு காலம் அதிகரிக்க அதிகரிக்க அதிக ரிட்டர்ன் பெறும் வாய்ப்பும் அதிகரிக்கும்.
முதலீட்டு நெகிழ்வுத்தன்மை மற்றும் அதிக வருமானத்திற்கான சாத்தியம்:
முதலீட்டுத் தொகைக்கு உச்சவரம்பு கிடையாது. பங்குகளில் முதலீடு செய்வதால் முதலீட்டாளர்கள் நீண்ட காலத்திற்கு நல்ல வருவாயைப் பெற வாய்ப்புள்ளது. பணவீக்கத்தைத் தாண்டி வருமானம் ஈட்டும் திறன் கொண்டதால் ELSS நிதிகள் மக்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
இதில் யார் முதலீடு செய்யலாம்?
சொந்தமாக செல்வம் பெருக்க விரும்புபவர்களும், அத்துடன் வரிகளை சேமிக்கவும் விரும்புபவர்களும் ELSS நிதிகளில் முதலீடு செய்யலாம்.
முறையான முதலீட்டுத் திட்டங்கள் (SIP) அல்லது மொத்தத் தொகை முதலீடுகள் மூலமாகவும் இதில் முதலீடு செய்யலாம்.
வரி சேமிப்பு தேடுபவர்கள், சந்தை அபாயங்களை எடுக்க விரும்புபவர்கள் மற்றும் நீண்ட கால வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டவர்களுக்கு ELSS சிறந்தது.