
மனிதர்களுக்கு எப்போதும் பணப் பிரச்னை இருந்துகொண்டே இருக்கிறது. மளிகைப் பொருட்கள், காய்கறிகள் விலை ஏற்றம், திடீரென ஏற்படும் மருத்துவமனை செலவுகள், பிள்ளைகளின் கல்லூரி, பள்ளிக் கட்டணங்கள், விருந்தினர் வருகை என வரவுக்கும் அதிகமான செலவுகள் இருக்கின்றன. சிக்கனத்தை கடைப்பிடித்தால் பொருளாதார சிக்கல்கள் இல்லாமல் வாழலாம். அதற்கான பத்து வழிகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. மளிகைப் பொருட்கள்: மளிகைப் பொருட்களை மாதத்திற்கு ஒருமுறை மட்டும் பட்டியல் போட்டு வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் அடிக்கடி கடைக்குச் செல்ல நேராது. அங்கே போய் தேவையில்லாத பொருட்களை வாங்கும் செலவுகள் குறையும். அரிசி தானியங்கள் போன்றவற்றை மொத்தமாக வாங்கி முறையாகப் பாதுகாத்தால் நீண்ட நாட்கள் உபயோகிக்கலாம்.
2. சமூக இணைப்புகள்: அண்டை வீட்டார்கள், நண்பர்கள் மற்றும் உள்ளூர் சமூக குழுக்களை இணைப்பது பணத்தை சேமிக்கும் ஒரு சிறந்த வழியாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள், குழந்தைகளுக்கான பொருட்கள், புத்தகங்கள் போன்றவற்றை தனித்தனியாக சென்று வாங்குவதை விட மொத்தமாக வாங்கி பிரித்துக் கொள்ளலாம்.
3. புத்திசாலித்தனமான ஷாப்பிங்: தள்ளுபடி என்ற பெயரில் தரம் குறைந்த பொருட்களை, குறிப்பாக துணிமணிகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். தேவையானபோது மட்டும் உடைகள் வாங்கலாம். நிறைய பேர் உடைகளுக்கு எக்கச்சக்கமாக செலவு செய்கிறார்கள். அதனால் அத்தியாவசிய செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடுகிறார்கள். தள்ளுபடி என்ற பெயரில் வாங்கும் ஆடைகள் நீடித்து உழைப்பதில்லை. மிக விரைவில் அவை கிழிந்து போகலாம். எனவே, தரமான துணிகளை மட்டும் வாங்க வேண்டும்.
4. வீட்டுத் திறன்கள்: வீட்டு பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புத் திறன்களை கற்றுக்கொண்டால் பணத்தை சேமிக்க உதவும். அடிப்படை கார் பராமரிப்பு முதல் வீட்டுக் குழாய்களை சரி செய்வது போன்றவற்றை யூட்யூப் வீடியோக்களில் பார்த்து கற்றுக் கொண்டால் தேவையில்லாமல் பிளம்பர் போன்றோரை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை.
5. வீட்டுத் தோட்டத்தில் காய்கறிகள்: வீட்டுத் தோட்டத்தில் தேவையான அளவு காய்கறிகளை பயிரிடலாம். அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்கள் கூட தொட்டிச் செடிகளில் தினமும் சமையல் தேவைக்கு உகந்த மல்லி, புதினா, தக்காளி, சாமி படங்களுக்கு போட பூக்கள் என செடிகளை நட்டு வளர்க்கும்போது தினமும் மார்க்கெட் செல்ல வேண்டிய வேலை இல்லை.
6. போக்குவரத்து செலவுகளை குறைத்தல்: வாகனங்களை சரியாக பராமரித்து வருவதன் மூலம் தேவையில்லாத செலவுகளை குறைக்கலாம். அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்லுதல், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல், நண்பர்களுடன் இணைந்து பயணித்தல் போன்றவற்றை கடைபிடித்தால் பெட்ரோல், டீசலுக்கு செலவாகும் பணத்தை கணிசமாக மிச்சப்படுத்தலாம்.
7. வீட்டில் சமைத்து உண்பது: வெரைட்டியாக உணவு உண்ண வேண்டும் என்று நினைத்து ஹோட்டலில் ஆர்டர் செய்து பணத்தை விரயம் செய்ய வேண்டாம். அதற்குப் பதிலாக வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து புதிய உணவு வகைகளை செய்து உண்டு மகிழலாம். கணிசமான பணம் மிச்சமாகும். ஆரோக்கியமும் கூட.
8. பொழுதுபோக்குகள்: பொழுதுபோக்குக்காக சினிமா, மால் என்று அடிக்கடி செல்லாமல் அவற்றை குறைத்துக் கொண்டு உள்ளூர் பூங்காக்களுக்கு பிள்ளைகளை அழைத்துச் சென்று விளையாட விடுதல், இலவச சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்ளுதல், கோயிலுக்கு செல்லுதல் போன்ற பொழுதுபோக்கின் மூலமாக நல்ல அனுபவங்கள் கிடைப்பதுடன் பணமும் மிச்சமாகும்.
9. சமையல்: வீட்டில் எல்லோரும் ஒரே சமயத்தில் உண்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் அடுப்புப் பற்ற வைத்து டிபன் தயாரிப்பதை விட மொத்தமாக தயாரித்து அவர்களுக்கு வழங்கினால் கேஸ் செலவை மிச்சப்படுத்தலாம்.
10. செலவுக் கணக்கு எழுதுதல்: தினமும் செய்யும் சிறு சிறு செலவுகளைக் கூட நோட்டில் எழுதி வைக்க வேண்டும். இதனால் தேவையில்லாத செலவுகளைக் குறைக்க முடியும். அனாவசிய செலவுகளைத் தவிர்க்கவும் முடியும்.