
இன்றைய பொருளாதார உலகில் நம்முடைய ஒவ்வொரு நிதி செயல்பாடுகளும் சிபில் ஸ்கோரில் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒருசில நிதி செயல்பாடுகள் மட்டும் சிபில் ஸ்கோரை பாதிப்பது இல்லை. அவற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்போது தான் அனைவருக்கும் நிதி சார்ந்த புரிதல் ஏற்படும். அவ்வகையில் எந்தெந்த நிதி செயல்பாடுகள் சிபில் ஸ்கோரை பாதிப்பதில்லை என்பதை இப்போது பார்ப்போம்.
வாங்கிய கடனை சரியாக திருப்பிச் செலுத்தவில்லை என்றாலோ, கிரெடிட் கார்டு பில்லை செலுத்தாமல் இருந்தாலோ, அது சிபில் ஸ்கோரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது பலரும் அறிந்தது தான். சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால், அடுத்த முறை கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அப்படியே கடன் கிடைத்தாலும், இதனைக் காரணம் காட்டி வட்டியை அதிகப்படுத்துவார்கள்.
இது ஒருபுறம் இருக்க நம்முடைய வேறு சில நிதி செயல்பாடுகள், சிபில் ஸ்கோருடன் தொடர்பே இல்லாமல் இருக்கின்றன.
ஏடிஎம் கார்டு:
பொதுவாக கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது சிபில் ஸ்கோரில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், ஏடிஎம் கார்டைப் பயன்படுத்துவது சிபில் ஸ்கோரில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஏனெனில் ஏடிஎம் கார்டுகள் கடன் வகைகளில் வராது. இருப்பினும், வங்கிகளால் ஏடிஎம் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது.
வருமானம் மற்றும் வட்டி உயர்வு:
நாம் வாங்கிய வங்கிக் கடனுக்கான வட்டி உயர்வது, தனிநபர் வருமானம் உயர்வது மற்றும் செயலற்றுப் போகும் வங்கிக் கணக்குகள் ஆகியவை சிபில் ஸ்கோரில் தாக்கத்தை ஏற்படுத்தாது. இதுதவிர ஒருவரின் பாலினம், வயது மற்றும் இருப்பிடமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
சிபில் ஸ்கோர் சரிபார்த்தல்:
நிதி செயல்பாடுகளில் ஈடுபடும் அனைவரும் தங்களது சிபில் ஸ்கோர் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதற்காக நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் சிபில் ஸ்கோரை சரிபார்த்துக் கொள்ளலாம். இந்த கோரிக்கைகள் எப்போதும் சிபில் ஸ்கோரை பாதிக்காது. கடன் பெறுவதற்கான கோரிக்கைகள் மட்டுமே சிபில் ஸ்கோரில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கடன் ஆலோசனை:
கடன் நிர்வாகத்தைத் திறம்பட கையாள நிதி ஆலோசகர்களை அணுகுவது சிபில் ஸ்கோரை பாதிக்காது. இந்த ஆலோசனைகள் உண்மையில் உங்களின் நிதி நிர்வாகத்தை மேம்படுத்தவே உதவும்.
காசோலை நிறுத்தம்:
யாருக்காவது நீங்கள் காசோலை வழங்கிய பிறகு, அதற்கான பணத்தை நிறுத்தி வைக்குமாறு வங்கிகளிடம் கோரிக்கை வைத்தால் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படாது. மேலும், பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தாலும் பிரச்சினை இல்லை. மாதத் தவணைக்கு வழங்கும் காசோலைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. ஏனெனில் மாதத் தவணை என்பது கடன் சார்ந்த நிதி செயல்பாடாகும்.
மேற்கண்ட 5 நிதி செயல்பாடுகளை நீங்கள் செய்யும் போது, அது சிபில் ஸ்கோரை பாதிக்குமோ என்ற அச்சம் இனி உங்களுக்குத் தேவையில்லை. இருப்பினும் கடன் சார்ந்த செயல்பாடுகளை திறமையாக கையாண்டால், நிச்சயமாக சிபில் ஸ்கோர் உயரும் என்பதில் ஐயமில்லை.