
பெருகி வரும் பொருளாதாரத் தேவைகளைச் சமாளிக்க, நடுத்தர வர்க்கத்தினருக்கு பேருதவியாக இருப்பவை வங்கிகள் வழங்கும் கடன் தான். சில நேரங்களில் இந்தக் கடனே எமனாகவும் மாறும் அபாயமும் உள்ளது. கடனை சரியாக திருப்பிச் செலுத்தினால் சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருக்கும். ஆனால், கடனைக் கட்டத் தவறினால், சிபில் ஸ்கோர் குறைவது நிச்சயம். இருப்பினும் சிலருக்கு கடன் வாங்காத நிலையில் கூட சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும். இது ஏன் என புரியாமல் தவிப்பவர்களுக்கு இந்தப் பதிவு விடையைக் கொடுக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் வங்கிக் கணக்கும், ஏடிஎம் கார்டும் இல்லாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு வங்கிகள் டிஜிட்டல் மயமாகி, அதிகளவிலான வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளன. இதன்மூலம் வங்கிகளின் வருமானம் பலமடங்கு அதிகரித்துள்ளது. வங்கிகளுக்கு வருமானம் வரும் ஒரு முக்கியமான வழி என்றால் அது தான் கடன் வழங்குதல். தனிநபர் கடன், வாகனக் கடன், நகைக் கடன் மற்றும் கல்விக் கடன் என பல பெயர்களில் கடன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ஒவ்வொன்றிற்கும் வட்டி விகிதம் வேறுபடும்.
வங்கிக் கணக்குடன் பான் கார்டை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் பான் கார்டு எண்ணை வைத்தே சிபில் ஸ்கோரை சரி பார்த்துக் கொள்ள முடியும். கடன் வாங்கிய வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோர், அக்கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை குறைவாகவே இருக்கும். ஆனால் கடனே வாங்காத வங்கி வாடிக்கையாளர்களுக்கும் சிபில் ஸ்கோர் குறையும் வாய்ப்புகள் அதிகமுள்ளன. வங்கிக் கணக்கைச் சரியாக பராமரிக்காமல் இருப்பது, குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாமல் இருப்பது மற்றும் பல ஆண்டுகளுக்கு வங்கிக் கணக்கை உபயோகப்படுத்தாமல் இருப்பது போன்ற சில நடவடிக்கைகளால் சிபில் ஸ்கோர் குறையலாம்.
கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை கிரெடிட் ஏஜென்சிகளுக்கு புதுப்பிக்கப்பட்ட விவரங்களை கட்டாயமாக அளிக்க வேண்டும். இது ரிசர்வ் வங்கியின் முக்கிய விதிமுறைகளில் ஒன்று. சிபில் ஸ்கோரை சரிசெய்யும் போது, அது குறைவாக இருந்தால், நாம் தான் கடனே வாங்கவில்லையே! பிறகு ஏன் சிபில் ஸ்கோர் குறைந்தது என குழப்பம் அடையலாம். வங்கிக் கணக்கை முறையாகப் பராமரித்தும், சிபில் ஸ்கோர் குறைந்தால் நீங்கள் முதலில் கிரெடிட் ஏஜென்சியிடம் புகார் அளிக்க வேண்டும்.
பின் வங்கிக்கு நேரடியாகச் சென்றோ அல்லது இ-மெயில் மூலமாகவோ, சிபில் ஸ்கோர் குறைந்தது குறித்து புகார் அளிக்கலாம். இதில் எதிலுமே தீர்வு கிடைக்கவில்லை என்றால், வாடிக்கையாளர் குறைதீர் ஆணையரை நேரடியாக சந்தித்து புகார் கொடுக்கலாம். அடுத்த 15 நாட்களில் நிச்சயமாக உங்கள் பிரிச்சினைத் தீர்ந்து விடும்.
சிபில் ஸ்கோர் குறைந்தால் நமக்கென்ன என்று கவனக்குறைவாக இருக்க வேண்டாம், தற்போதைய காலகட்டத்தில் எதிர்காலத்தில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அப்போது சிபில் ஸ்கோரை சரிபார்ப்பார்கள். ஆகையால், இன்றைய பொருளாதார உலகில் சிபில் ஸ்கோரும் முக்கியமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.