சென்னை வெள்ளத்தால் பாதித்த நிறுவனங்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் டிக் கழகம்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட தொடர் மழையின் காரணமாக அதிக அளவிலான தண்ணீர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தேங்கியது. இதனால் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெருமளவில் சேதமடைந்தன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களை சேர்ந்த சிட்கோவின் 24 தொழில்பேட்டையில் இயங்கும் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர் சங்கம் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்தது.
இதை அடுத்து சிட்கோ மண்டல மேலாளர்களை கொண்டு நடத்திய ஆய்வின் முடிவில் சிட்கோவின் 24 தொழில்பேட்டைகளில் இயங்கிய பல தொழில் நிறுவனங்களின் இயந்திரங்கள், தளவாட பொருட்கள், இருப்பில் வைத்திருந்த உற்பத்தி பொருட்கள் மற்றும் உற்பத்தி சாதனங்கள் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இந்த இக்கட்டான சூழலில் இருந்து சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாக்க டிக் கடன் உதவி மூலம் சிறப்பு சலுகைகளுடன் கடன் வழங்க தமிழக அரசின் தொழில் முதலீட்டு கழகம் அறிவித்துள்ளது.
இதன்படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், ஏற்கனவே கடன் பெற்ற நிறுவனங்களுக்கு பிணையில்லாமல் 50 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என்றும், இதற்கான வட்டித் தொகையும் குறைவாக கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் டிக் கழகம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் திட்ட அறிக்கையை பொறுத்து 5 லட்சம் முதல் 41 கோடி ரூபாய் வரை கடன் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இது தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் அடிப்படையில் மானிய மற்றும் சலுகை அடிப்படையில் கடன் வழங்கி வருகிறது.