வாழ்க்கை முழுவதும் உழைத்த பிறகு அமைதியான, நிம்மதியான, சந்தோசமான ஓய்வு வாழ்க்கைக்கு (Retirement) பலரும் ஆசைப்படுகிறோம். ஆனாலும் நிதி பற்றாக்குறை காரணமாக வேலைக்கு செல்லும் நிலைமை ஏற்படும்போது நாம் இடைவிடாது உழைத்த உழைப்பிற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது. அந்த வகையில் ஓய்வு காலத்திற்கு திட்டமிடுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 தகவல்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. ஓய்வுபெறும் வயதை தீர்மானிக்கவும்
எந்த வயதில் ஓய்வு பெற வேண்டும், எவ்வளவு காலம் உழைக்க முடியும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்கேற்ப முதலீடு செய்யத் துவங்குவது மிகவும் அவசியம் .
2. நிதி தேவையை தீர்மானிப்பது அவசியம்
ஓய்வு பெற்ற பிறகு மாதந்தோறும் தேவைப்படும் அவசிய தேவைகளான வாடகை, மருத்துவம், உணவு, பயணம் போன்ற அடிப்படை தேவைகளுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை அறிந்து முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
3. மருத்துவக் காப்பீடு மிகவும் அவசியம்
வயது அதிகரிக்க அதிகரிக்க மருத்துவ செலவுகளும் அதிகரிக்கும் என்பதால் அதற்கேற்ப மருத்துவ காப்பீட்டு திட்டங்களை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும் .
4. கடனை சரியாக கையாள வேண்டும்
ஓய்வு காலத்தில் ஏற்படும் நிதி சுமையை குறைக்க வேலையில் இருந்து ஓய்வுபெறுவதற்கு முன் கடன்கள், இஎம்ஐகள் என அனைத்தையும் முடிக்க திட்டமிட வேண்டும்.
5. முதலீட்டு வாய்ப்புகள்
வட்டி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு முதலீடு செய்வது அவசியம் என்பதால் பிபிஎப், தேசிய ஓய்வூதிய திட்டம், மியூச்சுவல் ஃபண்ட், ஃபிக்சட் டெபாசிட், மூத்த குடிமக்கள் திட்டம் போன்ற பல்வேறு சேமிப்பு திட்டங்களை தேர்ந்தெடுத்து சேமிக்க வேண்டும்.
6. செலவுகளை திட்டமிட வேண்டும்
ஓய்வூதிய நாட்களில் உங்களது விருப்பங்களுக்கு ஏற்ப எவ்வளவு செலவாகும் என்பதை (அதாவது வியாபாரம், பயணங்கள் போன்ற செலவுகளை) மனதில் வைத்து திட்டமிட வேண்டும்.
7. குடும்ப உறுப்பினர்களுக்கான திட்டமிடல்
நிதி பாதுகாப்பை மனதில் வைத்து உங்கள் மனைவி மற்றும் மகள்களை வங்கி மற்றும் முதலீடு திட்டங்களில் நாமினியாக சேர்ப்பதோடு , சொத்துக்களையும் பிரித்துக்கொடுக்கலாம். அதனை முன் கூட்டியே செய்வது ஓய்வு காலத்தில் நமது நிம்மதிக்கு வழிவகுக்கும்.
மேற்கூறிய ஏழு தகவல்களை ஒருவர் சரியாக கையாண்டால் அவருடைய ஓய்வு காலம் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.