
காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் எனும் அழகிய சிறிய கிராமத்தில் பாலாறு நதிக்கரையில் ஒரு சிறிய மலையில் அமைந்துள்ளது ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில். இது 17ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. நரசிம்மர் லட்சுமியுடன் வாசம் செய்யும் தலம் என்பதால் 'ஸ்ரீபுரம்' எனப்பட்ட இக்கோவில் சீவரம் என மாறியது. பழமையான ஊர் என்பதால் பழைய சீவரம் என பிற்காலத்தில் மாறியது.
மூலவர் லட்சுமி நரசிம்மர் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார். கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியும், வலகரத்தில் அபயம் அளித்தும், இடக்கையால் லட்சுமி தேவியை அணைத்தபடியும் காட்சி தருகிறார்.
மூலஸ்தானம் செவ்வக வடிவுடையது. இங்கு வீற்றிருக்கும் லக்ஷ்மி நரசிம்மர் இடக்காலை மடித்து வலக்காலை தொங்கவிட்டு பத்ம பீடத்தில் ஊன்றிய நிலையில் சதுர் புஜங்களுடன் லட்சுமி தேவியை இடது தொடையின் மீது அமர்த்திக்கொண்டு மேற்கு திசை நோக்கி காட்சி தருகிறார்.
அகோபிலவல்லித் தாயார் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். ஆண்டாள், நிகமாந்த மகாதேசிகன், வீர ஆஞ்சநேயர் சன்னதிகளும் உள்ளன. ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கி உள்ளது. இந்த நரசிம்மரை பிரதோஷம், சுவாதி நட்சத்திர நாட்களில் தரிசிப்பது மிகவும் சிறப்பாகும். இக்கோவிலில் தினமும் இரண்டு கால பூஜைகள் மிகவும் சிறப்பாக நடக்கின்றன.
தல பெருமை:
300 ஆண்டுகளுக்கு முன் வட இந்தியாவிலிருந்து வந்த பக்தர்களில் ஒருவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது. அவர் இங்கு வந்து தங்கிய போது அவருடைய கனவில் தோன்றிய பெருமாள் இங்கு 48 நாட்கள் தங்கி வழிபாடு செய்ய நோய் நீங்கும் என்று அருள் புரிந்ததாகவும், அவரும் அதன்படி தங்கி வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார் என்றும் கூறப்படுகிறது. அவருடைய பரம்பரையில் வந்தவர்களே இன்றும் இங்கு அறங்காவலர்களாக இருந்து வருகின்றனர். நாள்பட்ட நோய்களால் அவதிப்படுபவர்கள், இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்டு, துளசி மாலை சார்த்தி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள். ஆரோக்கியம் பெற வேண்டி இந்த லட்சுமி நரசிம்மரை வேண்டிக் கொள்ள நோய் நீங்கி ஆரோக்கியமாக இருக்கலாம்.
தல சிறப்பு:
அத்ரி மகரிஷிக்கு காட்சி தந்த நரசிம்மர் இவர். சிம்ம முகத்துடன் திருமார்பில் மகரக் கண்டிகையும், கௌஸ்துபமும் கொண்டு புஜங்களில் கேயூரமும், பாஜிபந்தமும், முன் கரங்களில் வளைகளும், நாபியின் மேல் உதரபந்தமும் கொண்டு அழகுடன் காட்சி தருகிறார்.
அத்ரி முனிவர் கார்த்திகை மாதம் இங்கு வந்து தங்கி தவம் செய்ததாகவும், தவக்கோலத்தில் பெருமாளை முழுவதும் தரிசிக்காமல் திருமுக மண்டல தரிசனம் மட்டும் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆதலால் கார்த்திகை மாதத்தில் இத்தலத்தில் அத்ரி முனிவர் தரிசனம் செய்த அதே கோலத்தில் 'அர்த்த ரூப சேவை' என்ற பெயரில் காட்சி தருகிறார் நரசிம்மர்.
மற்றொரு சிறப்பு காஞ்சி வரதராஜ பெருமாள் ஆதியில் அத்தி மரத்தால் ஆன மூலவராக இருந்ததாகவும், அதில் சிறு பின்னம் ஏற்பட்டதால் இங்கிருந்து தான் வரதராஜர் சிலையை செய்து காஞ்சிக்கு எடுத்துச் சென்று பிரதிஷ்டை செய்தார்கள் என்றும் கூறப்படுகிறது. பழைய சீவரத்தில் இருந்து வந்த வரலாற்றை நினைவு கூறும் வகையில் ஆண்டுக்கு ஒரு முறை மாட்டுப் பொங்கல் தினத்தன்று பரிவேட்டைக்கு இந்த ஊரில் வந்து தங்குகிறார்.
பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று நதிகள் இங்கு ஒன்றிணைந்து திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. இது கங்கைக்கு சமமாக புனிதமாக கருதப்படுகிறது.
விழாக்கள்:
நரசிம்ம ஜெயந்தி, ஆடிப்பூரம், கிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீ ராம நாமி, வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்கள் இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. கோவில் அமைந்துள்ள மலை பத்மகிரி என்று அழைக்கப்படுகிறது. மலையில் ஏறுவதற்கு வாகனப் பாதை உள்ளது. அற்புதமான இயற்கை சூழலில் அமைந்துள்ள இக்கோவில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.