
உலக அளவில் பொருளாதாரம் சீராக வளர்ந்து வரும் வேளையில் வங்கிக் கடன்களும், கிரெடிட் கார்டு கடன்களும் அதிகரித்துள்ளன. வங்கிக் கணக்கு வைத்துள்ள அனைவரும் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையில் வட்டியே இல்லாமல் கடன் வழங்கும் சார்ஜ் கார்டுகளும் சந்தையில் வரத் தொடங்கியுள்ளன. இதன் சிறப்புகளையும், பயன்படுத்தும் முறைகளையும் பார்க்கலாம் வாங்க.
சார்ஜ் கார்டு கிட்டத்தட்ட கிரெடிட் கார்டு போன்று தான் செயல்படுகிறது. இருப்பினும், சிறுசிறு வித்தியாசங்கள் உள்ளன. அதோடு, இந்தியாவில் சார்ஜ் கார்டுக்கான சந்தைத் தேவை தற்போது குறைவாகவே உள்ளது. சார்ஜ் கார்டைத் திறம்பட பயன்படுத்தினால், நல்ல பலனைத் தரும்.
இந்தியாவில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மட்டுமே சார்ஜ் கார்டுகளை வழங்குகிறது. ரூ.6 இலட்சத்திற்கு மேல் வருமானம் கொண்ட தனிநபர்களுக்கு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கோல்டு சார்ஜ் கார்டு வழங்கப்படும். ரூ.25 இலட்சத்திற்கு மேல் வருமானம் கொண்ட தனிநபர்களுக்கு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பிளாட்டினம் சார்ஜ் கார்டு வழங்கப்படும். சார்ஜ் கார்டு வழங்கும் போது வாடிக்கையாளரின் தற்போதைய நிதி நிலைமை, மாத வருமானம் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் சரிபார்க்கப்படும்.
கிரெடிட் கார்டுகளில் வாடிக்கையாளர்களின் நிதி நிலையைப் பொறுத்து முன்னரே கடனுக்கான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படும். இதனை உயர்த்திக் கொள்ள வேண்டுமானால், சம்மந்தப்பட்ட நிதி நிறுவனத்திடம் வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், சார்ஜ் கார்டைப் பொறுத்தவரை உச்ச வரம்பு என்பதே கிடையாது. எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். சார்ஜ் கார்டுகளுக்கு வட்டியே கிடையாது. ஆனால், இதற்கான பில்லை மாதந்தோறும் தவறாமல் கட்டி விட வேண்டும். இல்லையெனில், உங்களது சார்ஜ் கார்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். மாதாந்திர பில் தொகையை கட்டத் தவறும் பட்சத்தில், அதில் குறிப்பிடத்தக்க அளவு அபராதத் தொகையை மட்டும் கூடுதலாக செலுத்த வேண்டும்.
பொருளாதாரச் சந்தையில் கிடைக்கும் மற்ற கார்டுகளை விடவும், சார்ஜ் கார்டுகளுக்கான ஆண்டு சேவைக் கட்டணம் அதிகம். இருப்பினும் பயண சலுகைகள், விரிவான வெகுமதிகள் மற்றும் வரவேற்பு சேவைகள் உள்ளிட்ட பல கூடுதல் பலன்கள் இதில் கிடைக்கும். மேலும் சார்ஜ் கார்டைப் பயன்படுத்தி நீங்கள் செய்யும் செலவுகளை, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் தொடர்ந்து கண்காணிக்கும்.
சார்ஜ் கார்டு பில்லைக் கட்டத் தவறும் போது, அதுகுறித்த விவரங்களை சிஆர்ஐஎஃப் நிதி முகமைக்கு சம்மந்தப்பட்ட நிதி நிறுவனம் அனுப்பி வைக்கும். இது உங்களின் சிபில் ஸ்கோரை நிச்சயமாக பாதிக்கும். அடுத்தமுறை கடன் பெற முயன்றாலோ அல்லது கடன் அட்டைக்கு விண்ணப்பித்தாலோ, இது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடும்.
நிதி நிர்வாகத்தை திறம்பட மேற்கொள்ளும் தனிநபர்கள் சார்ஜ் கார்டுகளை தாராளமாக பயன்படுத்தலாம். மாதந்தோறும் நிலுவைத் தொகை இல்லாமல் பார்த்துக் கொண்டாலே போதும்; இந்த சார்ஜ் கார்டு உங்கள் பணத் தேவையைப் பூர்த்தி செய்து விடும்.