உலகத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள பணத்தின் மொத்த மதிப்பு சுமார் 60 ட்ரில்லியன் டாலர்கள். (1 ட்ரில்லியன் என்பது 1 லட்சம் கோடி). ஆயினும் புழக்கத்தில் உள்ள நாணயம், கரன்ஸி நோட்டுக்களின் மதிப்பு வெறும் 6 ட்ரில்லியன் டாலருக்கும் குறைவானதே. ஏனெனில், மக்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தில் சுமார் 90 சதவிகிதம், அதாவது சுமார் 50 ட்ரில்லியனுக்கும் சற்று குறைவான பணம் அனைத்தும் வங்கிக் கணினியின் சர்வரில்தான் உள்ளது.
காரணம் வணிகப் பணப்பரிமாற்றங்கள் எல்லாம் மனிதர்களால் நேரடிப் பரிமாற்றமின்றி கணினியில் இருந்து கணினிக்கு மின்னணுப் பரிவர்த்தனையில் தான் நடைபெறுகின்றன. -- (தகவல் - யுவல் நோவா ஹராரியின் "சேப்பியன்ஸ் " நூல் பக்கம் 199).
காசு, துட்டு, பணம், பைசா, சில்லறை, நோட்டு, கரன்ஸி, டாலர், டப்பு, வராகன், சக்கரம், மணி, விட்டமின் -ப, வெள்ளையப்பன்... அப்பப்பா பணத்துக்குத்தான் நடைமுறை வழக்கில் எத்தனைப் பெயர்கள்! இவை மட்டுமின்றி பணம் எடுக்கும் அவதாரங்களும் மலைக்க வைக்கிறது. இப்படி....
வழிபாட்டுத் தலங்களில் காணிக்கை.
ஆசான்களுக்கு அளிக்கயில் குருதட்சணை.
விலை போகும் மணமகன் கையில் வரதட்சணை.
மருத்துவரிடம் அளிக்கையில் ஃபீஸ்.
கல்விச் சாலையில் டொனேஷன்.
நீதிமன்றங்களில் அபராதம்.
மணமுறிவு வழக்குகளில் ஜீவனாம்சம்.
விபத்து வழக்குகளில் நஷ்ட ஈடு.
பிறரிடம் கையேந்தினால் கைமாற்று.
வங்கியிடம் பெறும்போது கடன்.
கடன் குட்டி போட்டால் வட்டி.
வங்கியிடம் ஒப்படைக்கும் பொது டெபாசிட்.
காப்பீட்டுக்கு வழங்கும் பொது பிரிமியம்.
அரசு வசூலிக்கும் போது வரி, தீர்வை.
வெள்ளையனுக்கு கொடுத்த போது கிஸ்தி, திரை.
ஓய்வூதியர் கையில் பென்ஷன்.
அதிகாரி ஊழியருக்கு அளிப்பது சம்பளம்.
முதலாளி பணியாளருக்கு வழங்குவது கூலி.
விடுதிப் பணியாளருக்கு வழங்கும் போது டிப்ஸ்.
ஆட்கடத்தல் பேர்வழிக்கு அழும்போது பணயம்.
சட்ட விரோத அன்பளிப்பு வழங்கும் போது லஞ்சம்.
யாசகன் தட்டில் விழும்போது பிச்சை, தர்மம்.
ஏதேனும் சேவைக்கு வழங்கும் போது கட்டணம்.
சாதனைக்காக வழங்கும் போது பரிசு.
ஆழமாக யோசித்தால் மறைந்துள்ள 'பொருள்' இன்னும் நிறைய வெளிவரக்கூடும்.