
பொதுவாக பெண்கள் தான் தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். பெண்கள் சிறுக சிறுக வாங்கும் தங்கத்திற்கு தான் பின்னாட்களில் அதிக மதிப்பும் கிடைக்கும். தங்கத்தின் விலை பெரும்பாலும் ஏறுமுகத்திலேயே இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கம் கொண்டது என சிலர் சொல்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறு. கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலையை நாம் எடுத்துப் பார்த்தால், அது ஏறுமுகத்தில் இருப்பதை புரிந்து கொள்ள முடியும். அதாவது தங்கத்தின் விலை குறையும் விகிதத்தைக் காட்டிலும், அதிகரிக்கும் விகிதம் தான் பன்மடங்கு அதிகம்.
ஒரு வீட்டில் வசிக்கும் கணவன் மனைவி இருவரும் ஒரே அளவு தொகையை வெவ்வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள் என வைத்துக் கொள்வோம். இருவரில் யாருடைய செலவு வருங்காலத்தில் நல்ல பலன் தரும் என்பதை ஆராய்ந்தோம் என்றால், நிச்சயமாக அது பெண்களின் செலவாகத்தான் இருக்கும். ஏனெனில் பெரும்பாலான பெண்கள் தங்க நகைகளை வாங்குவதில் தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள். தங்கத்தின் தொடர் விலையேற்றம் நமக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆர்பிஜி குழுமத்தின் தலைவரான ஹர்ஷ் கோயங்கா, மனைவிகள் எந்நிலையிலும் புத்திசாலிகளாகவே சிந்திப்பார்கள் என சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். அதோடு, அவருடைய மனைவியின் செயலையும் உதாரணமாக எடுத்துக் காட்டியுள்ளார்.
கோயங்கா 10 வருடங்களுக்கு முன்பாக ரூ.8 இலட்சம் மதிப்பிலான ஒரு காரை வாங்கினார். அதே மதிப்பில் இவருடைய மனைவி தங்கத்தை வாங்கியுள்ளார். தற்போதைய நிலவரப்படி அன்று வாங்கிய காரின் மதிப்பு இன்று ரூ.1.5 இலட்சம் தான். ஆனால் தங்கத்தின் மதிப்பு மட்டும் ஏறக்குறைய ரூ.32 இலட்சமாக ஏறி இருக்கிறதாம்.
ரூ.1 இலட்சத்தில் புதிய மாடல் ஸ்மார்ட்போன் வாங்கியுள்ளார் கோயங்கா. அதே தொகைக்கு ஈடாக தங்கத்தை வாங்கியிருக்கிறார் அவருடைய மனைவி. அந்த போனின் தற்போதைய மதிப்பு ரூ.8,000 தான். ஆனால் தங்கத்தின் விலை மட்டும் இருமடங்காக உயர்ந்துள்ளது.
அடுத்ததாக சுற்றுலாவிற்கு சென்று வரலாம் என தனது மனைவியிடம் ஹர்ஷ் கோயங்கா கூறினாராம். சுற்றுலா சென்றால் 5 நாட்களுக்கு மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும். அதற்கு செலவாகும் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்தால், அதன் பலன் 5 தலைமுறை வரை நீடிக்கும் என்றாராம் அவருடைய மனைவி.
ஆண்கள் பலரும் தங்கம் எதற்கு என்ற மனநிலையில் இருக்கும் போது, தங்கம் ஒரு சிறந்த முதலீடு என்பதை பெண்கள் நமக்கு மிக எளிதாக உணர்த்தி விடுகிறார்கள். அதனால் தான் மனைவிகள் எப்பொழுதும் புத்திசாலிகள் என ஹர்ஷ் கோயங்கா கூறியுள்ளார்.
கார் மற்றும் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவது போலவே தங்க ஆபரணங்களையும் பயன்படுத்துகிறோம். ஆனால் தங்கத்தின் மதிப்பு மட்டும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்போது தான் ஆடம்பர செலவுக்கும், அத்தியாவசிய முதலீட்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
உங்கள் வீட்டிலும் பெண்கள் சிறுக சிறுக சேமித்து தங்கம் வாங்குவார்கள். தங்கத்தின் விலை அதிகமாக இருக்கிறது என்று வாங்குவதை நிறுத்த வேண்டாம். ஏனெனில் நடுத்தர வர்க்கத்தினர், சேமித்து வைத்திருக்கும் பணத்தில் தான் தங்கம் வாங்க முயல்வார்கள். ஆகையால் இது வீட்டுப் பொருளாதாரத்தைப் பெரிதாக பாதிக்காது.