வைப்பு நிதி முதலீட்டில் மட்டுமே நாம் கவனம் செலுத்துவது சரியா?

Fixed Deposit
Fixed Deposit Img. Credit: Corporatefinanceinstitute

முதலீடு என்றாலே வைப்பு நிதி தான் என பலரும் நினைக்கிறார்கள். இதனால் மற்ற முதலீட்டுத் திட்டங்களை யாரும் நினைவில் கொள்வதில்லை. வைப்பு நிதி முதலீடு மட்டுமே சரியான சேமிப்பாக இருக்குமா என்பதை ஆராய்கிறது இந்தப் பதிவு.

நாளைய தேவைக்கான இன்றைய சேமிப்பிற்கு அடித்தளமாய் இருப்பது முதலீடு. நாட்டில் எண்ணற்ற முதலீட்டு வாய்ப்புகள் இருந்தாலும், இந்தியர்கள் பலரும் வைப்பு நிதி முதலீட்டைத் தான் தேர்வு செய்கின்றனர். மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்கு முதலீடு போன்ற பல முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு அதிகரித்து இருந்தாலும், இன்னமும் பல முதலீட்டாளர்கள் வைப்பு நிதி மற்றும் பி.பி.எப்., போன்ற முதலீட்டு வாய்ப்புகளையே முதன்மையான முதலீடாக கருதுகின்றனர். வைப்பு நிதி முதலீடுகள் மிகவும் பாதுகாப்பானது மற்றும் நிலையான பலன் அளிக்கக் கூடியது என்றாலும், இதனை மட்டுமே சார்ந்திருப்பது சரியான யுக்தி அல்ல என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சரியான உத்தி:

சேமிப்பு பணம் வருங்காலத்தில் உதவும் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்காக ஒட்டுமொத்த பணத்தையும், வைப்பு நிதி முதலீடுகளில் மட்டுமே முதலீடு செய்வது சரியான உத்தி அல்ல. உங்களுடைய முதலீட்டின் ஒரு பகுதி வைப்பு நிதி முதலீடுகளில் இருக்கலாம்; முழுவதுமாக அல்ல.

மாற்று வழி:

வைப்பு நிதி முதலீடுகளுடன் ஒப்பிட்டால், சமபங்கு சார்ந்த முதலீடு அதிகளவு பலன் அளிக்கும் என்பது போல, அதிகளவில் இடர் தன்மை கொண்டவை என்பதும் உண்மை. இந்த இடர் தன்மையைக் கண்டு பயம் கொள்பவர்கள் வைப்பு நிதி முதலீடுகளுடன், நிரந்தர வருமானம் அளிக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

முதலீடுத் தொகுப்பு:

இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையில், இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிதிச் சூழல் மற்றும் நிதி இலக்குகளுக்கு ஏற்ப முதலீடுத் தொகுப்பில் வளர்ச்சிக்கான நிரந்தர வருமானம் தரும் நிதி முதலீடுகளை முதலீட்டாளர்கள் அணுகலாம். மேலும், குறுகிய கால நிதிகளையும் பரிசீலிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வைப்பு நிதியா, பரஸ்பர நிதியா - எதில் முதலீடு செய்வது?
Fixed Deposit

பணவீக்கம்:

வைப்பு நிதி முதலீடுகள் பல்வேறு வகையான அணுகூலங்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், பணவீக்கத்தின் தாக்கத்தினை பலரும் மறந்து விடுகிறார்கள். பணவீக்கம் வைப்பு நிதி முதலீடுகள் அளிக்கும் பலனைக் குறைத்து விடும். பணவீக்க விகிதம் வட்டி விகிதத்தினை விட அதிகமாக இருந்தால் இன்னமும் பாதிப்பு தான். மேலும், இதில் வரி விதிப்பின் தாக்கமும் உள்ளது.

வளர்ச்சி பலன்:

பணவீக்கத்தின் தாக்கத்தினால், வைப்பு நிதி முதலீட்டை மட்டுமே முதன்மையானதாகக் கருதுவது சரியான தேர்வு அல்ல. மேலும் வைப்பு நிதி முதலீடுகளில் மட்டுமே முதலீடு செய்வதால் வளர்ச்சி வாய்ப்புள்ள மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்கு முதலீடு போன்ற நிதி வாய்ப்புகளை தவற விடும் நிலைமை ஏற்படும்.

நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், முதலில் அனைத்து வகையான முதலீட்டுத் திட்டங்களையும் அறிந்து கொண்டு அதன்பின்பு செயல்படுவது சிறப்பாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com