முன்பெல்லாம், வைப்பு நிதிகள் பிரபலமானவையாக இருந்தன. தற்போது, பரஸ்பர நிதிகள் பிரபலமடைந்து வருகின்றன. இவற்றில் எதனைத் தேர்வு செய்வது என்ற கேள்வி எழலாம். அதனைப் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.
வைப்பு நிதிகள், பரஸ்பர நிதிகள் என்றால் என்ன ?
வைப்பு நிதிகள்:
வைப்பு நிதிகளில் வங்கியானது முதலீட்டுப் பணத்திற்கு குறிப்பிட்ட வட்டி விகிதத்தை அளிக்கிறது. இது பங்குச் சந்தையின் ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படுவதில்லை. இவற்றுக்கு வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும்.
பரஸ்பர நிதிகள்;
இது ஊர்கூடி தேரிழுப்பதைப் போன்றது. இங்கு பலரது முதலீடுகள் ஒன்று சேர்க்கப்பட்டு, பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப் படுகின்றன. இது பங்குச் சந்தையின் ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படும். முதலீடு தொடங்கிய காலம், முதலீடு முடிந்த காலம், இவற்றிற்கிடையே உள்ள காலவரையறைக்கு ஏற்பவும், பரஸ்பர நிதிகளின் வகைக்கு ஏற்பவும், வரிகள் மாறுபடும். பொதுவாக, இவற்றிற்கு வட்டி விகிதம் குறைவு.
பரஸ்பர நிதிகளில் மூன்று வகைகள் உண்டு:
1. பங்குகள் சார்ந்த பரஸ்பர நிதிகள் (Equity Mutual Funds):
இவை பெருமளவில் பங்குகளில் முதலீடு செய்யும். குறைந்தபட்சம் 65% பங்குகளில் முதலீடு செய்யும்.
2. கடன் பத்திரங்கள் சார்ந்த பரஸ்பர நிதிகள் (Debt Mutual Funds):
இவை பெருமளவில் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும்.
3. கலப்பின பரஸ்பர நிதிகள் (Hybrid Mutual Funds): இவை பங்குகளும், கடன் பத்திரங்களும் என இரண்டிலும் முதலீடு செய்யும்.
வைப்பு நிதிகள், பரஸ்பர நிதிகள் - முதலீட்டுக் கூறுகளில் ஒப்பீடு:
எந்த ஒரு முதலீட்டிற்கும் மூன்று கூறுகள் உண்டு:
1. பணத்தை இழக்கும் அபாயம் (risk):
நம்பகமான வங்கிகளில் முதலீடு செய்யப்படும் வைப்பு நிதிகளில் இது குறைவு. பரஸ்பர நிதிகளில் இது அதிகம்.
2. பணம் வளரும் விகிதம் (rate of return):
வைப்பு நிதிகளில் இது குறைவு. பரஸ்பர நிதிகளில் இது அதிகம். பரஸ்பர நிதியின் திட்டத்திற்கு ஏற்ப (கடன் பத்திரங்கள், பங்குகள், கலப்பு முதலீடுகள்) வளர்ச்சி மாறுபடும்.
3. நீர்ப்புத்தன்மை (liquidity): வைப்பு நிதிகளில் இது குறைவு. அபராதத் தொகை செலுத்தி, முதலீட்டினைப் பணமாக மாற்ற முடியும். பரஸ்பர நிதிகளில் எளிதாக ஓரிரு நாட்களில் அபராதமின்றி பணமாக மாற்ற முடியும்.
எனது குறிக்கோளுக்கு வைப்பு நிதி சிறந்ததா, பரஸ்பர நிதி சிறந்ததா ?
எந்த ஒரு முதலீடும் குறிக்கோளினைச் சார்ந்து அமைய வேண்டும். குறிக்கோள்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
1. குறுகிய காலக் குறிக்கோள்கள் (5 வருடங்களுக்கு உட்பட்டது):
இத்தகைய குறிக்கோள்களுக்கு வைப்பு நிதிகள் சிறப்பானவை. இத்தகைய குறுகிய காலங்களில், பரஸ்பர நிதிகளில் பணத்தை இழக்கும் வாய்ப்பு அதிகம்.
(உதாரணமாக, 2 வருடங்களில் சிற்றுந்து வாங்க எண்ணுவது, 3 வருடங்கில் வெளிநாட்டுச் சுற்றுலா)
2. நடுத்தர காலக் குறிக்கோள்கள் (5 முதல் 10 வருடங்கள் வரை):
இத்தகைய குறிக்கோள்களுக்கு வைப்பு நிதிகளைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது, கடன் பத்திரங்கள் சார்ந்த பரஸ்பர நிதிகளைத் தேர்ந்தெடுக்கலாம். அரசாங்க கடன் பத்திரங்கள் சார்ந்த பரஸ்பர நிதிகளில் பணத்தை இழக்கும் வாய்ப்பு குறைவு.
(உதாரணமாக, 7 வருடங்களில் மகள் அல்லது மகனின் மேல்படிப்புச் சேர்க்க எண்ணுவது, 8 வருடங்களில் மகள் அல்லது மகனுக்குத் திருமணம் செய்ய எண்ணுவது)
3. நீண்ட காலக் குறிக்கோள்கள் (10 வருடங்களைத் தாண்டியவை):
இத்தகைய குறிக்கோள்களுக்கு பங்குகள் சார்ந்த பரஸ்பர நிதிகள் சிறப்பானவை. இவை நீண்ட காலத்தில் நல்ல பணப் பெருக்கத்தைக் கொடுக்கும். பெரிய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும், அதிக சந்தை மதிப்பு வாய்ந்த நிறுவனங்களின் பங்குகள் சார்ந்த பரஸ்பர நிதிகளில் (large cap, blue chip) பணத்தை இழக்கும் வாய்ப்பு குறைவு.
(உதாரணமாக, ஓய்வு காலத்திற்காக பணத்தை பெருக்க எண்ணுவது)
மேலும், பரஸ்பர நிதிகளில் எந்த வகை பரஸ்பர நிதியில் முதலீடு செய்கிறோம், அந்த பரஸ்பர நிதியின் கடந்த கால செயல்பாடுகள் எப்படி என்று கண்டு முதலீடு செய்ய வேண்டும்.
வைப்பு நிதிகளில் முதலீடு செய்யும்போது, நம்பகமான வங்கிகள் அல்லது அஞ்சலகம் சார்ந்த வைப்பு நிதிகளில் முதலீடு செய்வது நலம்.
எனவே, உங்களது குறிக்கோளுக்கு ஏற்ற முதலீட்டினைத் தேர்ந்தெடுத்து, வெற்றியடைய வாழ்த்துகள்.