நீங்கள் வருமான வரி தாக்கல் செய்யப் போகிறீர்களா? பின்வரும் தவறுகளைத் தவிர்ப்பதன் மூலம், வருமான வரி தாக்கல் நிராகரிக்கப்படுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். வருமான வரி தாக்கல் நிராகரிக்கப்பட்டால், அதனைத் தொடர்ந்து தாமதமாக வருமான வரி தாக்கல் செய்வதால் வரும் அபராதக் கட்டணங்கள், மீள்கொடுப்பு (Refund) பெறுவதில் தாமதங்கள் மற்றும் சட்ட ரீதியான பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே, வருமான வரி தாக்கலை நாம் சரியாக செய்வது அவசியம்.
வருமான வரித் தாக்கல் செய்வதில் பின்வரும் பிரச்சனைகளைத் தவிருங்கள்.
தவறான ஐடிஆர் படிவத்தைத் தேர்ந்தெடுத்தல்- உங்களுடைய வருமானத்தின் அளவு, உங்களுக்கு வரும் வருமானங்களின் முகாந்திரங்கள் போன்ற பல்வேறு காரணிகளைக் கொண்டு உங்களுடைய ஐடிஆர் படிவம் மாறுபடும். பின்வரும் பட்டியல் ஐடிஆர் படிவங்களும் மற்றும் அவற்றுக்கான நபர்களையும் பற்றிக் குறிப்பிடுகிறது.
ஐ.டி.ஆர் 1 - 50 இலட்சத்திற்கு குறைவாக வருமானத்தை உடைய சம்பளம் வாங்கும் நபர்கள்.
ஐ.டி.ஆர் 2 - மூலதன ஆதாயம் (Capital gains) அல்லது வெளிநாட்டுச் சொத்துக்களை (Foreign Asset) உடையவர்கள்.
ஐ.டி.ஆர் 3 - வியாபாரம் செய்யும் தனிநபர்கள் (Business) அல்லது தொழில் வல்லுனர்கள் (professional).
ஐ.டி.ஆர் 4 - உத்தேசமான வருமானத்தைக் (presumptive income) கொண்டு வருமான வரி தாக்கல் செய்யும் நபர்கள்.
தவறான ஐடிஆர் படிவத்தைத் தேர்ந்தெடுத்தால், உங்களுடைய வருமானவரி தாக்கல் நிராகரிக்கப்படும்.
தவறான தனிப்பட்ட தகவல்களைக் (Personal information) கொடுத்தல் - உங்களுடைய பெயர், ஆதார் எண், பான் எண், விலாசம், வங்கிக் கணக்கு விபரங்கள் போன்ற பல்வேறு தகவல்கள் சரியாக தெரிவிக்கப்பட வேண்டும். அவை உங்களது பான் எண்ணுடன் ஒத்துப் போக வேண்டும். அவற்றில் ஏதேனும் தவறு இருந்தால் உங்களுடைய வருமானவரி தாக்கல் நிராகரிக்கப்படும்.
எல்லா வருமான முகாந்திரங்களையும் தெரிவிக்காமல் இருத்தல் - உங்களுக்கு சம்பளத்தைத் தவிர, வீட்டு வாடகை, வங்கி வட்டி, மூலதன ஆதாயம் என பல்வேறு விதங்களில் வருமானங்கள் வந்திருந்தால் அவை எல்லாம் தெரிவிக்கப்பட வேண்டும்.
வருமான வரி இணையதளத்தில் படிவம் 26AS(Form 26AS), வருடாந்திர தகவல் அறிக்கை(AIS-Annual Information Statement), வரி செலுத்துபவர் தகவல் சாராம்சம்(TIS - Tax Information Summary) போன்றவற்றுடன் உங்களது வருமானங்களை ஒப்பிட்டு உங்களது எல்லா வருமானங்களின் முகாந்திரங்களையும் குறிப்பிடப்பட வேண்டும். உங்களுடைய வருமானங்களின் முகாந்திரங்களுக்கும், வருமான வரி இணையதளத்தின் வருமான வரி முகாந்திர தரவுகளுக்கும் இடையே வித்தியாசங்கள் இருந்தால் உங்களுடைய வருமான வரி தாக்கல் நிராகரிக்கப்படும்.
தவறான வருமான வரி கணிப்பு வருடத்தைத்(Assessment Year) தேர்ந்தெடுத்தல் - வருமான வரி தாக்கல் செய்யும்பொழுது சரியான வருமான வரி கணிப்பு வருடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கடந்த நிதியாண்டு(Fiscal year) FY 2024-25 க்கு வருமான வரி கணிப்பு வருடம்(Assessment Year) AY 2025-26 என வருமான வரி தாக்கலின் போது தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யாத பட்சத்தில் வருமான வரி தாக்கல் நிராகரிக்கப்படும்.
தவறான வருமான வரி விலக்குகள் கோருதல் - பழைய வருமானவரி முறை அல்லது புதிய வருமான வரி முறை போன்றவற்றில் பல்வேறு வரி விலக்குகள் உண்டு. அந்த வரி விலக்குகளுக்கு தகுதி இல்லாத பட்சத்தில், தவறாக கோரினால், வருமான வரி தாக்கல் நிராகரிக்கப்படும்.
உதாரணமாக, 80C பிரிவில் வரக்கூடிய காப்பீட்டுத் தவணையை, 80D பிரிவில் கோருவது, வீட்டு வாடகை இல்லாதபட்சத்தில், வீட்டு வாடகைப்படிக்காக (House Rent Allowance-HRA) வரி விலக்கு கோருவது போன்றவை. இத்தகைய தவறான வரி விலக்குகளைக் கோரினால், வருமான வரி தாக்கல் நிராகரிக்கப்படும்.
வருமான வரித் தாக்கலின் இணைய வழி சரிபார்த்தலைச் (E-Verify) செய்யாதிருப்பது - வருமானவரி தாக்கல் செய்த பிறகு அதனைத் தொடர்ந்து 30 நாட்களுக்குள் வருமானவரி தாக்கலை இணைய வழியாக சரி பார்க்க (E-Verify) வேண்டும். அவ்வாறு சரி பார்க்காத பட்சத்தில் வருமான வரி தாக்கல் மறுபடி செய்ய நேரிடும்.
தாமதமாக வருமான வரி தாக்கல் செய்வது - வருமானவரி தாக்கலைத் தாமதமாக செய்வதனால் பிரிவு 234F படி ரூபாய்.5000 வரை தாமதத்திற்கான அபராதத் தொகை, பிரிவு 234A/B/C படி வரி பாக்கிப் பணத்திற்கு வட்டி, மேலும் தாமதமான மீள்கொடுப்பின் (Refund) காரணமாக வட்டி இழப்பு போன்றவை ஏற்படும். இந்த வருட வருமானவரி தாக்கலுக்கு செப்டம்பர் 15, 2025 என்ற தேதி கடைசி நாளாகக் குறிக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கு முன்பு வருமான வரி தாக்கல் செய்வது அவசியம்.
நீங்கள் சீக்கிரமாக வருமான வரி தாக்கல் செய்ய வாழ்த்துகள்.