
கடன் வழங்கும் வசதிகளை வங்கிகள் எளிதாக்கியுள்ள நிலையில், வங்கிக் கடன் வாங்குவோர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக வீட்டுக் கடன் வாங்குபவர்கள் தான் அதிகம். ஏனெனில் சொந்த வீடு கனவை நிறைவேற்றுவதில், பலருக்கும் வங்கிக் கடன் தான் பேருதவியாக இருக்கிறது. இருப்பினும் அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும் என்பதால், நடுத்தர வர்க்கத்தினர் மாதத் தவணையை செலுத்துவதில் சிரமத்தை சந்திக்கின்றனர். இந்நிலையில், வீட்டுக் கடனை விரைவில் அடைக்க என்னென்ன யுக்திகளைக் கையாள வேண்டும் என்பது குறித்து விவரிக்கிறது இந்தப் பதிவு.
இன்றைய பொருளாதார உலகில் நடுத்தர வர்க்கத்தினர் தான் அதிகளவில் கடன் வாங்குகின்றனர். மாதச் சம்பளம் குறைவாகவும், தேவை அதிகமாகவும் இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம். இருப்பினும், சிறிய அளவில் வாங்கும் கடன்களை ஓரளவு சமாளித்து விடலாம். ஆனால், வீட்டுக் கடனை வாங்கினால் சமாளிப்பது மிகவும் சிரமம். ஏனெனில் இதில் கடன் தொகையும் அதிகம்; நாம் செலுத்தும் வட்டியும் அதிகம். ஆகையால் பல ஆண்டுகளுக்கு மாதத் தவணை செலுத்த வேண்டியிருக்கும்.
வீட்டுக் கடனை அடைத்து விட்டு, இனி இது நம் வீடு தான் என்று பெருமூச்சு விடுவதற்குள் வாழ்நாளில் பாதியை இழந்து விடுவோம். அப்படி ஒரு நிலைமை உங்களுக்கு வந்துவிடக் கூடாது என எண்ணினால், வீட்டுக் கடனை அடைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். சொந்த வீடு கனவை நிறைவேற்ற ஒருசிலர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு வீட்டுக் கடனை எடுத்து விட்டு, எப்போது இந்த வீட்டுக் கடனில் இருந்து வெளியே வரப் போகிறோம் என தினந்தினம் வருந்துகிறார்கள். இதிலிருந்து நீங்கள் வெளிவர இரண்டு விஷயங்களை மட்டும் திட்டமிட்டுச் செய்தால் போதும். எளிதாக வீட்டுக் கடனை அடைத்து விடலாம்.
1. மாதந்தோறும் வீட்டுக் கடனுக்கான மாதத் தவணையை கட்டும் நீங்கள், வருடத்திற்கு ஒரே ஒரு முறை மட்டும் ஒரு தவணையைக் கூடுதலாக கட்ட முயற்சி செய்யுங்கள். ஆண்டிற்கு ஒரு தவணை என்றால், 24 ஆண்டுகளில் 24 தவணை என இரண்டு ஆண்டுத் தவணைகளை இதிலேயே குறைத்து விடலாம்.
2. ஒவ்வொரு ஆண்டும் உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தி கூடுதல் நிதியை சேமிக்க முயற்சி செய்யுங்கள். மேலும், வேலையில் முன்னேற்றம் காண முயற்சி செய்யுங்கள். ஏனெனில் சம்பளம் அதிகரிக்க வாய்ப்புண்டு. இதிலிருந்து கிடைக்கும் கூடுதல் நிதியின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மாதத் தவணையைக் குறைந்தபட்சம் 5% முதல் 10% வரை உயர்த்திக் கொள்ளுங்கள். இதன் மூலம் தவணைக் காலம் வெகுவாக குறைந்து விடும்.
மேற்கண்ட இந்த இரண்டு யுக்திகளை பின்பற்றி வந்தால், அசல் தொகை கணிசமாக குறைந்துவிடும். மேலும் தவணை செலுத்தும் காலமும் மளமளவென கீழிறிங்கி விடும். ஆகையால் வீட்டுக்கடன் வாங்கியவர்கள் திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே, கடனை விரைவில் அடைக்க முடியும்.