வலை விரிக்கும் கடன் நிறுவனங்கள்: தப்பிப்பது எப்படி?

Loans
Scam Loan
Published on

இணைய வழித்திருட்டு தான் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் சாபக்கேடாக பார்க்கப்படுகிறது. மற்றபடி, தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி நமக்கு பல நன்மைகளை அள்ளித் தருகிறது. இருப்பினும் சிலர் அவசரத் தேவை மற்றும் பேராசையால் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் ஆன்லைன் செயலிகளில் கடன் வாங்கி தவிப்பவர்கள் தான் அதிகம். இதிலிருந்து நம்மை நாம் எப்படி தற்காத்துக் கொள்வது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலகட்டத்தில் கடன் வழங்கும் நிறுவனங்கள் புற்றீசல் போல பெருகி விட்டன. பொதுமக்கள் மொபைல் போன்களை அதிகமாகப் பயன்படுத்தி வருவதை ஆதாரமாக வைத்து, இணையத்தில் குறைந்த வட்டியில் கடன் மற்றும் தள்ளுபடி போன்ற பல அறிவிப்புகளை வெளியிட்டு பொதுமக்களை கவர்கின்றனர். நடுத்தர வர்க்கத்தினரும் குறைந்த வட்டியில் அதிகக் கடன் கிடைக்கும் என்பதை நம்பி ஏமாறுகின்றனர்.

உதாரணத்திற்கு, ஒரு நிறுவனம் பணையம் இல்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் அளிப்போம் என்று விளம்பரப்படுத்துகிறது. இதனை நம்பி ஒருவர் கடன் கேட்கும் போது ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் தகவல்களை கேட்கின்றனர். மேலும், பிராசஸிங் கட்டணத்தைக் கட்டினால் உங்களுக்கு இன்னும் கடன் தொகை அதிகமாக கிடைக்கும் என்கிறது அந்த நிறுவனம். அவசரத் தேவையில் இருப்பவர்கள் இதில் மாட்டிக் கொள்ள வாய்ப்புண்டு. இதுமட்டுமல்ல கடனைக் கொடுத்து விட்டு, மிரட்டும் கடன் நிறுவனங்களும் இங்கு உண்டு என்பதை மறக்க வேண்டாம். ஒருசிலருக்கு கடன் தேவையில்லை என்ற போதிலும் எளிதாக கிடைக்கிறதே என்பதற்காக கூட கடன் வாங்குகின்றனர்.

பொதுமக்கள் இது மாதிரியான கடன் மோசடிகளில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், முதலில் எந்தக் கடன் நிறுவனத்தையும் நம்ப வேண்டாம். உங்களுக்கு கடன் தேவைப்படும் பட்சத்தில் ஒரு நிறுவனத்தை நாடினால், சில கேள்விகளை கேட்க வேண்டியது அவசியம். அந்தக் கேள்விகளுக்கு திருப்தியான விடை கிடைத்தால், அந்நிறுவனத்தில் கடன் வாங்குவது பற்றி நீங்கள் முடிவெடுக்கலாம்.

1. முதலில் கடனுக்கான வட்டி எத்தனை சதவிகிதம், வட்டியை சரியாக செலுத்தவில்லை என்றால் அதற்கான அபராதம் எவ்வளவு என்பதை கேட்டறிந்து கொள்ள வேண்டும்.

2. இது தவிர்த்து மறைமுகக் கட்டணங்கள் ஏதேனும் வசூலிக்கப்படுமா என்பதையும் கேட்க வேண்டும். பொதுவாக மறைமுகக் கட்டணங்களை நிறுவனங்கள் சொல்வதில்லை.

இதையும் படியுங்கள்:
கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறதா?
Loans

3. கடன் வழங்கும் நிறுவனமானது முறையான அரசு அனுமதியைப் பெற்றிருக்கிறதா என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

4. பணத்தை வசூல் செய்வதில் முறையாக நடந்து கொள்வார்களா அல்லது அடியாட்களை வைத்து மிரட்டுவார்களா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம்மில் பலரும் கடன் வழங்கும் நிறுவனங்களிடம் கேள்வியே கேட்பதில்லை. அப்படி கேள்வி கேட்டால் கடன் கிடைக்காதோ என்ற பயம் தான் காரணமா அல்லது அசட்டு நம்பிக்கையா என்பது புரியாத புதிர் தான். இனியாவது கேட்க வேண்டிய நேரத்தில் கேள்வி கேளுங்கள். இல்லையெனில் கடன் வலையில் சிக்கித் தவிக்க வேண்டியிருக்கும். ஆன்லைன் மோசடிகள் பல நடந்து கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் நாம் கொஞ்சம் கவனமாக இருப்பதும் நல்லது தானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com