
பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் வங்கிகளில் 'ஆட்டோ ஸ்வீப்' என்ற சேவையும் உள்ளது. ஆனால் இதுபற்றி பலருக்கும் தெரியாது.
ஆட்டோ ஸ்வீப் முறையைப் பயன்படுத்திக் கொண்டால், நமக்கு தான் இலாபம். முதலீடு செய்ய நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வங்கிகளில் ஆட்டோ ஸ்வீப் சேவை எப்படி செயல்படுகிறது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக உள்ள இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலும் அனைவருக்குமே தனித்தனி வங்கிக் கணக்குகள் உள்ளன. சேமிப்புக் கணக்கை தான் பல வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சுயதொழில் செய்யும் சிலர் மட்டுமே நடப்புக் கணக்கைப் பயன்படுத்தி வருகின்றனர். சேமிப்பு மற்றும் நடப்பு என இரண்டு வங்கிக் கணக்குகளுக்கும் தனித்தனியே வட்டி விகிதம் அளிக்கப்படும். அதாவது வங்கிக் கணக்கில் இருக்கும் வாடிக்கையாளர்களின் பணத்திற்கு 2.5% முதல் 3% வட்டியை வங்கிகள் வழங்கும். இப்படி கிடைக்கும் வட்டி மிகவும் குறைவாகவே இருக்கும். ஆனால் ஆட்டோ ஸ்வீப் சேவையைத் தொடங்கினால் அதிக வட்டியை நம்மால் பெற முடியும்.தொ
நமது வங்கிக் கணக்கில் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் பணம் இருந்தால், அந்தத் தொகை பிக்சட் டெபாசிட்டிற்கு சென்று விடும். இதனைத் தான் ஆட்டோ ஸ்வீப் என அழைக்கிறோம். இருப்பினும் இந்த வசதியை வாடிக்கையாளர்கள் தான் வங்கிக்கு சென்று செயலாக்கம் செய்யும்படி விண்ணப்பிக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.30,000 வரை பணம் இருக்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் தற்போது ரூ.50,000 வங்கிக் கணக்கில் இருந்தால், மீதமிருக்கும் ரூ.20,000 ஆட்டோ ஸ்வீப் முறைப்படி பிக்சட் டெபாசிட்டிற்கு சென்று விடும். பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6.5% முதல் 7.75% வரை வட்டி கிடைக்கும் என்பதால் கணிசமான தொகையை நம்மால் பெற முடியும். அதோடு சாதாரண சேமிப்புக் கணக்கிற்கு கிடைக்கும் வட்டியை விடவும் 3 மடங்கு வட்டி இதில் அதிகமாக கிடைக்கும். ஆனால் இதற்கு நீங்கள் ஆட்டோ ஸ்வீப் முறையை இயக்க வேண்டியது அவசியமாகும்.
வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்திற்கு கூடுதல் வட்டி கிடைக்கும் போது, வாடிக்கையாளர்களின் முதலீட்டு எண்ணம் அதிகரிக்கும். இதனால் இன்னும் அதிகமாக வங்கிகளில் டெபாசிட் செய்ய முன்வருவார்கள். இது தனிநபர்களின் சேமிப்பு பழக்கத்தையும் அதிகரிக்கும். இதனால் வீண் செலவுகளையும் குறைத்துக் கொண்டு சேமிப்பில் அதிக கவனத்தைச் செலுத்த முடியும்.
பொதுவாக பிக்சட் டெபாசிட்டைத் தொடங்கினால், முதிர்வு காலம் முடியும் வரை பணத்தை எடுக்கக் முடியாது. ஆனால் ஆட்டோ ஸ்வீப் முறையில் சேமிப்புக் கணக்கிலிருந்து பிக்சட் டெபாசிட்டிற்கு மாற்றப்படும் பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். பல வங்கிகள் ஆட்டோ ஸ்வீப் சேவையை வழங்குவதால், வங்கிக் கணக்கில் சேமிக்கும் வாடிக்கையாளர்கள் இந்த சேவையை விரைந்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.