
எதிர்காலத் தேவைக்கு இன்றே முதலீடு செய்யும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப சந்தையில் முதலீட்டு வாய்ப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. அஞ்சல் அலுவலகத் திட்டங்கள், எல்ஐசி, வங்கி முதலீடுகள் தான் பாதுகாப்பானவை என்றிருந்த மக்கள் பலரும், இன்றைய காலகட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட், எஸ்ஐபி, தங்கப் பத்திர முதலீடு என பரவலாக முதலீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் பரவலாக முதலீடு செய்வதால் கிடைக்கும் பலன்களை அலசுகிறது இந்தப் பதிவு.
பரவலான முதலீடு குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இன்னும் பெரிய அளவில் ஏற்படவில்லை என்றே சொல்ல வேண்டும். பெரு முதலீட்டாளர்கள் மட்டுமே பரவலான முதலீட்டு யுக்தியைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மாதச் சம்பளம் வாங்குவோர் பலரும் பரவலான முதலீடுகளை மேற்கொள்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் அவர்களின் குறைவான வருமானம் தான். இருப்பினும், வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தி ஒரே முதலீட்டை மட்டும் நம்பியிருக்காமல் பல திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்த பொருளாதார யுக்தியாகும்.
பரவலான முதலீடு என்பது ஒருவர் தன்னிடம் இருக்கும் பணத்தை ஒரே திட்டத்தில் முதலீடு செய்யாமல், அதனைப் பிரித்து ஒன்றுக்கும் மேற்பட்ட திட்டங்களில் முதலீடு செய்வதாகும். முதலீடு செய்யத் தொடங்கும் போதே இம்மாதிரி பல திட்டங்களில் முதலீடு செய்வது குறித்து சிந்திக்க வேண்டும். புதிதாக முதலீடு செய்பவர்கள், பாதுகாப்பான அஞ்சல் அலுவலகத் திட்டங்களிலேயே முதலீடு செய்ய நினைப்பார்கள். இதில் தவறேதும் இல்லை. ஆனால், அஞ்சல் அலுவலகத் திட்டத்தில் மட்டுமே முதலீடு செய்வதைக் காட்டிலும், தங்கப் பத்திர முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட், எஸ்ஐபி என பல திட்டங்களில் பரவலாக முதலீடு செய்ய வேண்டும்.
பரவலாக முதலீடு செய்யும் போது, அவசரத் தேவைக்கு ஏதேனும் ஒரு திட்டத்தில் இருந்து பணம் எடுத்துக் கொண்டால் கூட மற்ற திட்டங்கள் எதிர்காலத்திற்கு உதவும். அதோடு, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் கிரிப்டோ போன்ற முதலீடுகளில் ஒருவேளை நஷ்டம் ஏற்பட்டாலும், அதிலிருந்து மீண்டு வர மற்ற முதலீட்டுத் திட்டங்கள் உங்களுக்கு கைக்கொடுக்கும். இனிவரும் காலங்களில் ஃபண்டு திட்டங்கள் எப்போதும் இலாபத்தை மட்டுமே தரும் என்பது சந்தேகம் தான். ஒருவேளை வீழ்ச்சியை சந்திக்கும் சமயங்களில், பரவலாக முதலீடு செய்திருந்தால் நிச்சயமாக நீங்கள் வருந்தக் கூடிய சூழலே ஏற்படாது. இது நிதி சிக்கலில் விழுந்து விடாமல் உங்களைப் பாதுகாக்கும்.
உங்களிடம் ஒரே மொத்தமாக பணம் அதிகமாக இருந்தால், பொருளாதார ஆலோசகரின் உதவியுடன் பல திட்டங்களில் முதலீடு செய்ய முயற்சிக்கலாம். நடுத்தர வர்க்கத்தினர் சிறிய அளவில் முதலீடு செய்தாலும் பரவாயில்லை; உங்களிடம் இருக்கும் பணத்தைப் பிரித்து சிறிய அளவிலேயே பரவலாக முதலீடு செய்யலாம். அஞ்சல் அலுவலகம், வங்கி மற்றும் எல்ஐசியில் சிறிய அளவில் முதலீடு செய்து கொண்டே, எஸ்ஐபியிலும் முதலீடு செய்யலாம்.
நிச்சயமற்ற எதிர்காலத்தில் நமது இன்றைய முதலீடுகள், குடும்பத்தைப் பாதுகாக்கும் கவசமாக மாறும் என்பதில் ஐயமில்லை.