

இந்தியாவின் பெரிய வணிகக் குழுமமான பஜாஜ் (Bajaj) வாகனங்கள் (இரு சக்கர, மூன்று சக்கர), நிதி சேவைகள் (Bajaj Finserv), வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற பல துறைகளில் ஈடுபட்டு வருகிறது. இது இந்தியர்களின் மனதில் "Hamara Bajaj" என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இரு சக்கர வாகன உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, பஜாஜ் நிறுவனம், இந்திய சந்தையில் குறைவான விலை கொண்ட புதிய சேட்டக் 125 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. பஜாஜ் வரிசையில் இது மிகவும் மலிவான மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிறுவனம், சேட்டக் பிராண்டின் கீழ் பல்வேறு வேரியன்ட்களாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. அதில் மிகவும் விலை குறைவான தொடக்க நிலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக வெளியாகியிருக்கிறது பஜாஜ் சேட்டக் 125. இந்த குறைவான விலை கொண்ட வேரியன்டின் வெளியீடு அதன் விற்பனையை மேலும் உயர்த்தும் எனத் தெரிகிறது.
சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களிலேயே சிறிய பேட்டரியைக் கொண்ட இதில், 2.5 கிலோ வாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் மணிக்கு 63-69 கிமீ வேகத்தில் அதிகபட்சமாக 113 முதல் 127 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம்.
மேலும், 720W ஆஃப்போர்டு சார்ஜர் மூலம் இந்த பேட்டரியை 3.45 மணி நேரத்தில் முழுவதுமாக சார்ஜ் செய்துவிட முடியும் எனவும் அந்நிறுவனம் உத்திரவாதம் அளித்துள்ளது. இது நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலும் இளம் தலைமுறையினரை கவரும் வகையிலும், நெரிசலான நகர வீதிகளில் எளிதாகச் செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹில் ஹோல்டு அசிஸ்ட், மீ ஹோம் லைட்டிங் வசதி, டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் டிஸ்ப்ளே, ப்ளூடூத் இணைப்பு (TecPack உடன்), LED விளக்குகள் உள்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பிரீமியம் மெட்டல் பாடி, ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் முன்புறம் 25 லிட்டர் கொள்ளளவு இட வசதி உள்ளது. எக்கோ, ஸ்போர்ட்ஸ் என 2 டிரைவிங் மோட்கள் உள்ளன. முன்புறம் டிஸ்க் பிரேக்குகள், பின்புறம் டிரம் பிரேக்குகள், USB சார்ஜர், கைடு-மீ-ஹோம் லைட்டிங் மற்றும் சுறுசுறுப்பான கையாளுதலுக்காக டியூன் செய்யப்பட்ட சேசிஸ் உள்ளிட்ட நவீன அம்சங்கள் சேட்டக் 125 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளன.
3 ஆண்டுகள் அல்லது 50 ஆயிரம் கிலோ மீட்டர் வாரண்டி உள்ளது. ஆக்டிவ் பிளாக், ரேசிங் ரெட், கிளாசிக் ஒயிட், ஓஷன் டியல் உள்ளிட்ட நான்கு கண்ணை கவரும் வண்ணங்களில் கிடைக்கும்.
108 கிலோ எடை மற்றும் 763 மிமீ சீட் உயரத்தையும் கொண்டிருக்கிறது புதிய சேட்டக் 125 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். இன்று விற்பனையில் இருக்கும் மெயின்ஸ்ட்ரீம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மிகவும் எடை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இதனை நாம் கூறலாம்.
ஷோரூம் விலை சுமார் ரூ.91,399 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், அறிமுகச் சலுகையாக முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ.4,299 சலுகை அளித்துள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் ரூ.87,100 ஷோரூம் விலையில் இந்த ஸ்கூட்டரை வாங்கும் வாய்ப்பு உள்ளது என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய சூழலில் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் மின்சார இரு சக்கர வாகன சந்தையில் பஜாஜ் சேடக் C25, நகர்ப்புற ரைடர்களுக்கு ஒரு பிரபலமான தேர்வாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.