
வங்கி லாக்கர் என்பது வாடிக்கையாளர்களுடைய மதிப்பு மிக்க பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக வங்கியில் வழங்கப்படும் ஒரு சேவையாகும். இதில் நகைகள், பணம், பர்த் சர்டிபிகேட், மேரேஜ் சர்டிபிகேட், இன்சூரன்ஸ் பாலிசி, சேமிப்பு பத்திரங்கள், லோன் டாக்குமென்ட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் போன்ற விலை மதிப்பு மிக்க பொருட்களை பாதுகாப்பாக வைக்க முடியும்.
வங்கி லாக்கர்கள் என்பது வங்கியில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அறைகளில் வைக்கப்படுகின்றது. இந்த லாக்கரை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வாடகையாக செலுத்த வேண்டும்.
வங்கி லாக்கரை எவ்வாறு தேர்வு செய்வது?
சிறந்த சேவைக்கு பெயர் பெற்ற வங்கியை தேர்வு செய்யலாம் அல்லது ஏற்கனவே கணக்கு வைத்திருக்கும் வங்கியை தேர்வு செய்வது நம்முடைய பரிவர்த்தனையை எளிதாக்கும்.
வங்கி லாக்கரை பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்?
வங்கி லாக்கரை பெறுவதற்கு அந்த வங்கியில் சேமிப்பு கணக்கை வைத்திருக்க வேண்டும். நம் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு வங்கி லாக்கரை பெறுவதற்கு முதலில் வங்கிக் கிளையில் விண்ணப்பிக்க வேண்டும். தற்போதைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பான் கார்டு, ஆதார் கார்டு போன்ற அடையாளம் மற்றும் முகவரி சான்றுகள் தேவைப்படும்.
வங்கியில் கேட்கப்படும் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் லாக்கர் பயன்பாட்டிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் வேண்டும். லாக்கருகாக செலுத்த வேண்டிய வாடகை தொகையை செலுத்தவும் வேண்டும். அதன் பிறகு லாக்கர் நமக்கு வழங்கப்படும். அதில் நம் பொருட்களை பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம்.
வங்கியின் லாக்கர் விதிகள் பற்றி அறிவோமா?
ஒவ்வொரு வங்கியிலும் லாக்கர் பயன்பாட்டிற்கான விதிகள் வேறுபடலாம். லாக்கரில் எந்தெந்த பொருட்களை வைக்கலாம், எவற்றை வைக்கக் கூடாது என்பது பற்றிய வழிகாட்டுதல்கள் வங்கியில் வழங்கப்படும். அத்துடன் லாக்கர் ஒப்பந்தம் புதுப்பிக்கும் தேதியையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வங்கி லாக்கரின் சிறப்பு அம்சங்கள்:
a) லாக்கர்கள் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இவை நம் விலைமதிப்பு மிக்க பொருட்கள் திருட்டு போவதிலிருந்தும், இழப்பு ஏற்படாமல் இருப்பதற்கும் பொருட்களை பத்திரமாக பாதுகாக்கின்றன.
b) வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப வெவ்வேறு அளவுகளில் லாக்கர்கள் கிடைக்கின்றன. லாக்கரின் அளவைப் பொறுத்து வசூலிக்கப்படும் கட்டணமும் மாறுபடும்.
c) ஒவ்வொரு லாக்கருக்கும் தனித்தனி சாவிகள் இருக்கும். அவை வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சொந்தமானது. நம்மிடம் ஒரு சாவி கொடுக்கப்படும். அதேபோன்று வங்கியிலும் ஒரு சாவி இருக்கும்.
வங்கி லாக்கரை பயன்படுத்துவதற்கு செக்யூரிட்டி டெபாசிட் செய்ய வேண்டும். பிறகு வங்கி லாக்கரை பயன்படுத்தி விட்டு சாவியை திருப்பித் தரும்பொழுது இந்த செக்யூரிட்டி டெபாசிட் தொகை திருப்பி தரப்படும். கணக்கு வைத்திருப்பவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் தடையின்றி லாக்கரை பயன்படுத்துவதற்கு லாக்கருக்கு ஒரு குடும்ப உறுப்பினரை நாமினியாக நியமிப்பது நல்லது.