வைப்பு நிதிக்கும் (Fixed Deposit), தேசிய சேமிப்பு சான்றிதழுக்கும் (National Savings Certificate) பின்வரும் காரணிகளில் ஒப்பீடு செய்யலாம்.
வைப்பு நிதி என்றால் என்ன? வைப்பு நிதிகள் வங்கிகளால் நடத்தப்படும் ஒரு முதலீட்டுத் திட்டம். இங்கு பணமானது, பல்வேறு காலங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இது குறைந்தபட்சம் 7 நாட்களிலிருந்து, 10 வருட காலம் வரை மாறுபடலாம். வட்டி விகிதமானது வங்கிக்கு வங்கி மாறுபடும். வட்டிகணக்கிடப்படும் காலமானது வங்கிக்கு வங்கி மாறுபடும்.
தேசிய சேமிப்பு சான்றிதழ் என்றால் என்ன? தேசிய சேமிப்பு சான்றிதழ் , அஞ்சலகங்களில் விற்கப்படுகிறது. இது 100 ரூபாய் முதல் 10000 ரூபாய் வரை பல்வேறு விலைகளில் விற்கப்படுகிறது. இதற்கு வட்டியானது வருடா வருடம் கணக்கிடப்படுகிறது. இது 5 வருட காலத்திற்கு பணத்தினை முடக்கி வைக்கும் ஒரு திட்டம்.
வைப்பு நிதி - தேசிய சேமிப்பு சான்றிதழ் ஒரு ஒப்பீடு:
1. வட்டி விகிதம்: (பணம் வளரும் விகிதம்):
வை. நி; இது வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. இது பொதுவாக 7% ஒட்டி இருக்கிறது. வட்டி விகிதம் மட்டுமன்றி, வட்டி கணக்கிடப்படும் காலமும் முக்கியம். இது வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. இது ஏற்றத் தாழ்வுகளுக்கு உட்பட்டது. எப்போது வேண்டுமானாலும் வங்கிகளால் மாற்ற முடியும்.
தே.சே.சா: இது பொதுவாக 8% ஒட்டி இருக்கிறது. இது ஒவ்வொரு காலாண்டும் அறிவிக்கப்படுகிறது. வட்டி வருடா வருடம் கணக்கிடப்படுகிறது. நிச்சயிக்கப்பட்ட வட்டி கண்டிப்பாக மாறாது.
2. பணத்தின் பாதுகாப்பு: (பணத்தை இழக்கும் அபாயம்):
வை. நி: இது பொதுவாக பாதுகாப்பு நிறைந்ததுதான். ஆனால், சில தனியார் வங்கிகள் சார்ந்த வைப்பு நிதிகளில் பணத்தை இழக்கும் அபாயம் உண்டு.
தே.சே.சா: இது மிகவும் பாதுகாப்பானது. பணத்தை இழக்கும் அபாயம் இல்லை.
3.நீர்ப்புத் தன்மை: (liquidity):
வை. நி: இதில் நீர்ப்புத் தன்மை அதிகம். பணத்தை குறைவான காலத்திற்கு முதலீடு செய்யலாம். மேலும், பணத்தை தேவைப்படும் போது, கொஞ்சம் வட்டி இழப்புடன் எளிதாக பெற முடியும்.
தே.சே.சா: இதில் நீர்ப்புத் தன்மை குறைவு. 5 ஆண்டுகளுக்கு பணம் முடக்கப்படுகிறது. இதுவும் மக்களின் நன்மைக்காகவே அரசாங்கம் செய்துள்ளது. பணம் நீண்ட காலத்திற்கு வளர விடப்படுகிறது.
4. வரிச் சலுகை:
வை. நி: இது நீர்ப்புத்தன்மை உடைய காரணத்தினால், அரசாங்கம் எந்த ஒரு வரிசலுகையும் அளிப்பதில்லை. இது சம்பாதிக்கும் நபரின் வருமானத்திற்கு ஏற்ப, வருமானத்துடன் வட்டி சேர்க்கப்பட்டு, வரி விதிக்கப்படுகிறது.
தே.சே.சா: இதில் முதலீடு செய்யும் பணத்திற்கு, அரசாங்கத்தின் 80C வரி சலுகை உண்டு. மேலும், வருடா வருடம் கிடைக்கும் வட்டியானது, மறுபடி அசலுடன் முதலீடு செய்யப்படுவதால், 5 வருடங்களில் , முதல் நான்கு வருட வட்டிக்கு 80C ல் வரி விலக்கு கொடுக்கப்படுகிறது. 5ம் வருட வட்டிக்கு மட்டுமே வரி செலுத்த வேண்டும்.
5. முதலீட்டின் அளவு:
வை. நி: குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
தே.சே.சா: குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் எவ்வளவு பணம் வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். ஆனால், 80C வரிசலுகையின் படி 1.5 லட்சத்திற்கு மட்டுமே, வரி விலக்கு உண்டு. இது எளியவர்களும் பயன்பெறும் வகையில் எளிதாக்கப்பட்டுள்ளது.
6. கடன் வாங்க அடமானம்:
வை. நி: இதனில் உள்ள பணத்தினை, மற்ற கடன் வாங்க அடமானத்திற்கு பயன் படுத்த முடியும். சில சமயங்களில் ஒப்புக் கொள்ளப்படாத வாய்ப்பு உள்ளது.
தே.சே.சா: இதனில் உள்ள பணம், உத்தரவாதமுள்ள பணமானதால், இந்த சான்றிதழை அடமானமாக பயன்படுத்த முடியும்.
குறுகிய காலத்தின் தேவைகளுக்கு, 5 வருடங்களுக்கு குறைவான, எப்போது வேண்டுமானாலும், பணத்தினை தேவை இருக்கும், நீர்ப்புத் தன்மை வேண்டுமெனில், வைப்பு நிதி நல்லது. ஆனால், எனக்கு 5 வருடங்களுக்குப் பிறகே, பணம் தேவைப்படும் என்றால், தேசிய சேமிப்பு சான்றிதழ் நல்லது.