'ஒரு குறிப்பிட்ட பங்கில் முதலீடு செய்தால் பணம் நன்கு ஈட்ட முடியும்' என்று சமூக வலைதளங்களில் சில பிரபலமான, அதிக பின் தொடர்பவர்கள் (followers) உடைய நிதிசெல்வாக்கு உடையவர்கள் (Finfluencers = Finance + Influencer) கூறலாம்.
நாம் அத்தகைய நிதி செல்வாக்கு உடையவர்களின் அறிவுரைகளிலிருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எந்த ஒரு முதலீட்டு முடிவையும் நாமே யோசித்து செய்ய வேண்டும். அந்த நிதி செல்வாக்குடையவர்களின் அறிவுரை சுயநலத்தின் காரணமாக இருக்க வாய்ப்புண்டு. அந்தப் பங்கு நிறுவனத்துடன் மறைமுகமாக கைக்கோர்த்துக் கொண்டு, அந்தப் பங்கின் விலையை ஏற்றி, அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட தரகுத் தொகையை அவர்கள் பெற முயலலாம்.
இதனை குறித்து ஒரு ஈசாப் கதையைப் பார்ப்போம்.
ஒரு குதிரை வயல்வெளிக்கு அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அது தனக்கு கிடைத்த புல்லை உண்டு கொண்டிருந்தது. அப்போது வயல்களிலிருந்து ஒரு ஓநாய் வெளியேறியது. அது அந்த குதிரையை எப்படியாவது தந்திரமாக வயலுக்குள் கொண்டு செல்ல முயற்சித்தது. 'நண்பா. எதற்காக இங்கு புற்களை மேய்ந்து கொண்டிருக்கிறாய். வயலுக்குள்ளே வா. அங்கு நன்கு முற்றிய கதிர்கள் நிறைய உள்ளன. அதனைக் கண்டுவிட்டுதான் நான் வருகிறேன். நீ அவற்றை உண்ண உள்ளே வா' என்றது ஓநாய்.
ஓநாயின் தந்திரத்தைப் புரிந்து கொண்ட குதிரை பதிலளித்தது. 'அந்த நன்கு முற்றிய கதிர்கள் உனக்கு உணவாக இருக்குமானால், நீயே உண்டிருப்பாயே. நீ எதற்கு இங்கு வந்து என்னிடம் கூறுகிறாய்? உன்னுடைய தந்திரம் என்னிடம் பலிக்காது. சென்று விடு. போ, போ.' என்றது குதிரை. ஓநாயும் குதிரை தன்னிடம் ஏமாறவில்லை என்பதை உணர்ந்து அங்கிருந்து நகர்ந்து சென்றது.
இங்கு அந்த ஓநாய்க்கு மட்டும் அந்த கதிர்கள் உணவாக இருக்குமானால், அந்த கதிர்களை அந்த ஓநாய் உண்டு நன்றாக வாழ்ந்திருக்கும். ஆனால், அந்த ஓநாய்க்கு உணவானது அந்த குதிரை தான். அந்தக் குதிரையை தந்திரமாக அழைத்து வந்து, அதனை உண்பதற்காகவே அந்த ஓநாய் அவ்வாறு கூறியது.
இதனைப் போலவே பங்குச்சந்தையில் இந்தப் பங்கு நன்றாக இருக்கும், அந்தப் பங்கு நன்றாக இருக்கும் என்று கூறி முதலீட்டாளர்களை வாங்க வைப்பதற்கு பல நிதி செல்வாக்கு உடையவர்கள், பல்வேறு சமூக வலைத்தளங்களில் இருப்பார்கள். அந்தப் பங்கு நன்றாக இருக்கும் என்றால் ஏன் அவர்களே வாங்கி, அவர்கள் அம்பானியைப் போல் பணக்காரர்கள் ஆகலாமே?!
எனவே, இத்தகைய நிதி செல்வாக்குடையவரிடமிருந்து நாம் ஜாக்கிரதையாக இருந்து, அவர்களுடைய அறிவுரையை நன்கு யோசித்து, அந்த முதலீட்டு முடிவினை நாமே எடுக்க வேண்டும். அவர்கள் சொல்லும் முதலீட்டு அறிவரைகளை எல்லாம் கண்மூடித்தனமாக நாம் செய்யக்கூடாது.
2018 ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இத்தகைய நிதி செல்வாக்கு உடையவர்களின் பரிந்துரைத்த பங்குகளை எக்கனாமிக்ஸ் டைம் நிறுவனம் ஆராய்ச்சி செய்த போது, அவற்றில் 72% பங்குகள் பங்கு சந்தை குறியீட்டினை விட குறைவாகவே வளர்ந்துள்ளன.
இத்தகைய தவறான அறிவுறுத்தல்களால், பல்வேறு மக்கள் பணத்தை இழப்பதனால் செபி நிறுவனம் இவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளது. எனவே, எந்த ஒரு முதலீட்டாளரும் எந்த ஒரு முதலீட்டு முடிவையும் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.