உலகம் முழுவதையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வர ஆசைப்பட்ட மகா அலெக்சாண்டர், உலகத்தில் பாதியை தனது ஆட்சியின் கீழ் அடக்கிவிட்டு, இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது இங்குள்ள இந்து துறவிகளின் சிறப்புகள் பற்றிக் கேள்விப்பட்டு, அவர்களைச் சந்திக்க ஆவல் கொண்டார்.
வட இந்தியாவில் உள்ள டாக்ஸிலா என்னுமிடத்தில், திகம்பர (நிர்வாண)த் துறவிகள் இருந்தனர். திகம்பரர்கள் மக்கள் மத்தியிலோ, ஊருக்குள்ளோ வாழாமல், ஊரைவிட்டு ஒதுங்கி கானகம், குகைகள் போன்ற இடங்களில் வாழ்வார்கள். விசேஷ காலங்களிலும், தேவை ஏற்படுகிற பிற சமயங்களிலும் மட்டுமே ஊருக்குள் பிரவேசித்து மக்கள் மத்தியில் உலவுவார்கள்.
ஆடை கூட இல்லாமல் அனைத்தையும் துறப்பது என்பது துறத்தலின் உச்சம். அது மட்டுமன்றி, இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்வு என்பதும் இவர்களது நிர்வாணக் கோலத்தின் தத்துவம் ஆகும்.
ஆனால் அந்த நிர்வாணக் கோலம் பொது மக்களுக்கு - குறிப்பாக பெண்களுக்கு - சங்கடம் தரக் கூடியதாக இருக்கும் என்பதாலும், மற்றவர்களின் தொந்தரவு இல்லாமல் யோகம், தியானம், ஞானத் தேடல், இறைச் சிந்தனை ஆகியவற்றில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும், இவர்கள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு ஏகாந்தமான இடங்களில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.
கபாலிகர்கள், அகோரிகள் போல திகம்பரர்களும் வைராக்கியம் மிகுந்த துறவிகள். பெரும்பாலும் அவர்கள் கடுமை கொண்டவர்களாகவும், கோபக்காரர்களாகவும் இருக்கக் காணலாம்.
திகம்பரத் துறவிகளின் தலைமை குருவான தண்டாமிஸ், மிகப் பெரும் ஞானி என்று அலெக்சாந்தர் அடிக்கடி கேள்விப்பட நேர்ந்தது. அவர் கானகத்துக்குள், சிந்து நதிக் கரையில் வசித்துக்கொண்டிருந்தார். அவரைத் தன்னிடம் அழைத்து வருமாறு ஒன்சிக்ரிதோஸ் என்ற தனது அதிகாரியை அனுப்பி வைத்தார் அலெக்சாந்தர்.
நதிக் கரை மணலில் படுத்திருந்த தண்டாமிஸ், ஒன்சிக்ரிதோஸைக் கண்டுகொள்ளவே இல்லை.
"பேரரசர் அலெக்சாண்டர் உங்களை அழைத்து வரச் சொன்னார். நீங்கள் வந்து அவரைச் சந்தித்தால் உங்களுக்கு நிறைய பொன்னும் பொருளும் வெகுமதியாகத் தருவார். வர மறுத்தால் உங்களுடைய தலை துண்டிக்கப்படும்!" என்றார் ஒன்சிக்ரிதோஸ்.
தண்டாமிஸ் சற்றும் அச்சப்படவோ, எதிர்வினை காட்டவோ இல்லை. தன் தலையைக் கூட உயர்த்தாமல், "உங்களுடைய வெகுமதி எனக்குத் தேவையில்லை. மிரட்டலுக்கு நான் பயப்படுகிறவன் அல்ல. என்னைச் சந்திக்க விரும்பினால் அலெக்சாந்தரை இங்கே வரச் சொல்!" என்றார்.
தகவல் தெரிந்து, அலெக்சாந்தரே அங்கே வந்தார்.
இரு துருவங்களின் சந்திப்பாக இருந்தது அது. உலகம் முழுதையும் தனக்கு சொந்தமாக்க ஆசைப்பட்ட, உலகின் பாதியைத் தனக்கு சொந்தமாக ஆக்கிக்கொண்ட, மகா பேரரசர் ஒரு புறம்; சிறு துண்டுத் துணி கூட அணியாத, அது கூட சொந்தமாக இல்லாத, அதுவும் தேவையில்லை என ஒதுக்கிவிட்ட திகம்பரத் துறவி மறு புறம்.
அலெக்சாந்தர் வந்ததைப் பார்த்தும் தண்டாமிஸ், தான் படுத்திருந்த இடத்திலிருந்து சற்றும் அசையவில்லை. அவரிடம் பணிவோ அச்சமோ காணப்படவில்லை. அவரது துணிச்சலும், உறுதியும், கண்களில் மின்னும் ஒளியும் அலெக்சாந்தரைக் கவர்ந்தன.
"நீங்கள் என்னுடன் ஏதென்ஸுக்கு வரவேண்டும்!"
தண்டாமிஸ் சிரித்தார்.
"உலகம் எனக்குள் இருக்கிறது; நான் உலகத்தில் இல்லை. ஏதென்ஸ், பெர்ஷியா, ரோம் அனைத்தும் எனக்குள் இருக்கின்றன. நானே பிரபஞ்சம். சூரியனும் நட்சத்திரங்களும் என்னிலிருந்தே உதிக்கின்றன..." என்று தண்டாமிஸ் பேசத் தொடங்கினார்.
இது போன்ற மெய்யியல் பேச்சுகளை அலெக்சாந்தர் கேட்டதில்லை. அவருக்கு ஆன்மிகம், மெய்ஞானம் எதுவும் தெரியாது. ஆகவே, அவரால் அதைப் புரிந்து கொள்ள இயலவில்லை.
அதனால், "ஏதென்ஸுக்கு வந்தால் நீங்கள் விரும்புகிற அளவுக்குப் பொன்னும் ரத்தினங்களும் தருகிறேன். உங்களுக்கு என்னென்ன சௌகரியங்கள் வேண்டுமோ, அத்தனையும் செய்து தருவேன். இந்த பூமியில் கிடைக்கக்கூடிய அனைத்து விதமான இன்பங்களையும், சுக போகங்களையும் நீங்கள் அனுபவிக்கலாம்" என ஆசை வார்த்தை காட்டிப் பார்த்தார்.
"உடுத்துவதற்கு ஒரு முழம் துணி கூட வேண்டாம் என்று இருக்கிறவனுக்கு உன்னுடைய பொன்னும் ரத்தினங்களும் எதற்கு? அவற்றால் எனக்கு எந்த உபயோகமும் கிடையாது. நீ ஏற்பாடு செய்வதாகக் கூறுகிற இன்பங்களையும், சுக போகங்களையும் துறந்தவர்கள் சந்நியாசிசள் என்பதைக் கூட அறியாதவனா நீ? நான் உன்னோடு வர இயலாது" என்று சொல்லிவிட்டார் தண்டாமிஸ்.
அலெக்சாந்தருக்கு கோபம் தலைக்கேறியது. வாளை உருவிக்கொண்டு, "நீங்கள் வர மறுத்தால் உங்களுடைய தலையைத் துண்டித்து விடுவேன்!" என மிரட்டினார்.
தண்டாமிஸ் அதைக் கேட்டு சிரித்தார். "நீ என்னுடைய உடலை வேண்டுமானால் கொல்லலாம். ஆனால், எனது ஆன்மாவைக் கொல்ல இயலாது. இந்த உடல் அழிந்தாலும் எனது ஆன்மா நிரந்தரமாக இருக்கும். நீ என் உடலைக் கொன்றுவிட்டால், அதன் பிறகும் என் ஆன்மா தனது ஆற்றலோடு எங்கும் வியாபித்திருக்கும். அப்போது நான் உனக்குள் கூட இருந்து, உன்னுடைய ஆற்றலாக, வாளேந்திய உனது கைகளில் வெளிப்படுவேன்!"
வாளை ஓங்கிய அலெக்சாந்தரின் கரம் தாழ்ந்தது. அவர் தண்டாமிஸைப் பணிந்து வணங்கி, தனது செயலுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுவிட்டுத் திரும்பிச் சென்றார்.