

முதலீடு மற்றும் பயன்பாட்டு ரீதியாக தங்கம் தான் உலகிலேயே மிகவும் மதிப்புமிக்க உலோகம் என்று நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், விலையைப் பொறுத்தவரை தங்கத்தை விட பல மடங்கு மதிப்புமிக்க ஒரு உலோகம் இந்த பூமியில் இருக்கிறது. அதன் பெயர்தான் 'கலிபோர்னியம்' (Californium). இதன் மதிப்பை எளிமையாகச் சொன்னால், வெறும் ஒரு கிராம் கலிபோர்னியத்தை விற்றால் உங்களால் சுமார் 200 கிலோ தங்கம் வாங்க முடியும்! கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்த உலோகத்தின் பின்னணியில் உள்ள வியக்கத்தக்க உண்மைகளைப் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
கலிபோர்னியம் என்றால் என்ன?
கலிபோர்னியம் என்பது இயற்கையாக பூமியில் கிடைக்கும் ஒரு உலோகம் அல்ல. இது மனிதர்களால் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கையான, கதிரியக்க வேதியியல் தனிமம். இதன் வேதியியல் குறியீடு 'Cf' என்பதாகும்.
1950 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலில் இந்த தனிமத்தைக் கண்டறிந்தனர். தங்களின் பல்கலைக்கழகத்தைப் பெருமைப்படுத்தும் விதமாகவே இதற்கு 'கலிபோர்னியம்' என்று அவர்கள் பெயரிட்டனர்.
சர்வதேச சந்தையில் ஒரு கிராம் கலிபோர்னியத்தின் விலை சுமார் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. தங்கம் ஒரு கிலோவே பல லட்சங்களில் விற்கும்போது, இந்த உலோகத்தின் ஒரு கிராம் விலையைக் கொண்டு சுமார் 200 கிலோ தங்கத்தையே வாங்கிவிடலாம். பூமியில் மிகவும் அரிதாக இருப்பதும், இதை உருவாக்குவதற்குத் தேவைப்படும் அதிநவீன தொழில்நுட்பமும் தான் இதன் விலைக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
ஏன் இவ்வளவு விலை?
கலிபோர்னியம் இயற்கையில் கிடைக்காததால், இதனை அணு உலைகளில் மட்டுமே செயற்கையாக உருவாக்க முடியும். இதற்கான உற்பத்தி செயல்முறை மிகவும் சிக்கலானது மற்றும் ஆபத்தானது. உலக அளவில் மிகக் குறைவான நாடுகளில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்களில் மட்டுமே இதனைத் தயாரிக்கும் வசதி உள்ளது.
மிகக் குறைந்த அளவிலேயே உற்பத்தி செய்யப்படுவதால், உலகளவில் கலிபோர்னியத்தை விநியோகம் செய்யும் சப்ளையர்களின் எண்ணிக்கையும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ளது. இந்த அதீத பற்றாக்குறையே இதன் விலையை பணக்காரர்களாலும் நெருங்க முடியாத உயரத்தில் வைத்திருக்கிறது.
இது எதற்கெல்லாம் பயன்படுகிறது?
இவ்வளவு விலைமதிப்பற்ற இந்த உலோகம் ஆடம்பர நகைகள் செய்யப் பயன்படுவதில்லை; மாறாக, மிக முக்கியமாக அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக அணுசக்தி துறையில், அணு உலைகளைத் தொடங்குவதற்கும், சிறிய ரக மாடுலர் அணு உலைகளின் செயல்பாட்டிற்கும் இது ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது. இது தவிர, விண்வெளி ஆராய்ச்சி, தொழிற்சாலைகளின் தரக்கட்டுப்பாட்டுப் பரிசோதனைகள் மற்றும் நாட்டின் பாதுகாப்புத் துறை சார்ந்த சோதனைகளிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.
மருத்துவத் துறையில் கலிபோர்னியம் மனித உயிர்களைக் காக்கும் ஒரு உன்னதப் பணியைச் செய்கிறது. குறிப்பாக, புற்றுநோய் சிகிச்சையில் புற்றுநோய் செல்களை துல்லியமாகக் குறிவைக்கும் 'நியூட்ரான் தெரபி' முறைகளில் 'கலிபோர்னியம்-252' என்ற ஐசோடோப் பயன்படுத்தப்படுகிறது. இதின் மூலம், உடலின் மற்ற ஆரோக்கியமான செல்களைப் பாதிக்காமல், புற்றுநோய் செல்களை மட்டும் மிகத் துல்லியமாகக் குறிவைத்து அழிக்க முடிகிறது.
தங்கம் நமக்கு அழகையும் பொருளாதாரப் பாதுகாப்பையும் தரலாம். ஆனால், கலிபோர்னியம், அதன் அதீத விலையையும் தாண்டி மனிதர்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் மருத்துவ முன்னேற்றத்திற்கும் ஒரு அரிய பொக்கிஷமாகத் திகழ்கிறது.