
இன்றைய நவீன யுகத்தில் வங்கிக் கடன் வாங்குவது சுலபமான ஒன்றாகவே உள்ளது. இன்னும் சொல்லப்போனால் வங்கி அதிகாரிகளே தேடி வந்து கடன் கொடுக்கின்றனர். ஏனெனில் கடன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் தானே வங்கிகள் இலாபம் அடைகின்றன. இருப்பினும் இதையே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஒருசிலர், பல வங்கிகளில் கடன் வாங்குகின்றனர். இது சரிதானா? ஒரே நபர் பல தனிநபர் கடன்களை வாங்க முடியுமா?
வங்கிக் கடன் வாங்குவது மிகவும் எளிது என்றாலும், அதற்குரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். அவ்வகையில் கடன் பெறுவதற்கு வருமான விவரம், ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகியவை முக்கியமான ஆவணங்களாக பார்க்கப்படுகி. வாடிக்கையாளரின் இந்த விவரங்கள் அனைத்தையும் வங்கிகள் சேமித்து வைத்துக் கொள்ளும்.
கடன் வாங்கியவர்கள் சரியாக மாதத் தவணையைச் செலுத்த வேண்டியது அவசியமாகும். இல்லையெனில் வாடிக்கையாளர்கள் அபராதம் செலுத்த நேரிடும். ஓரிரு மாதங்கள் தவணையைத் தாமதமாக கட்டினால் பரவாயில்லை. ஆனால் மாதத் தவணைக் கட்டுவதை அடிக்கடி தாமதப்படுத்தினால், அது சிபில் ஸ்கோரை பாதிக்கும். மேலும் நீங்கள் நிதி நிர்வாகத்தில் சிறந்தவர் அல்ல என்பதையும் வங்கிகள் புரிந்து கொள்ளும்.
ரிசர்வ் வங்கி விதிப்படி, கடன் வாங்கிய வாடிக்கையாளர்களின் தற்போதைய கடன் நிலையை, மாதத்திற்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டும். ஆனால், வாடிக்கையாளரின் கடன் நிலையானது கடன் தகவல் மத்தியத் தொகுப்பில் பிரதிபலிப்பதற்கு 40 நாட்கள் ஆகி விடும். இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சிலர் கடன் வாங்கிய ஒரு மாதத்திற்கு உள்ளாகவே மற்றொரு வங்கியில் கடன் வாங்கி விடுகின்றனர்.
ரிசர்வ் வங்கி விதிப்படி, ஒரு வாடிக்கையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட தனிநபர் கடன் வாங்குவதற்கு தகுதி உடையவர் தான். ஆனால், அவர் ஏற்கனவே வாங்கிய கடனை சரியான முறையில் திருப்பிச் செலுத்துபவராக இருக்க வேண்டும். அதோடு சிபில் ஸ்கோரும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். ஏமாற்று வேலையில் ஈடுபடும் சிலர், ஒரே வருமான விவரத்தைக் காட்டி குறுகிய நாட்களிலேயே அடுத்தடுத்த கடன்களுக்கு விண்ணப்பித்து விடுகின்றனர். ஒருவரின் கடன் நிலை அப்டேட் ஆக குறைந்தபட்சம் 1 மாதம் ஆகும் என்பதால், புதிதாக கடன் வாங்கிய வாடிக்கையாளர் விவரங்களை, மற்ற வங்கிகள் சரிபார்க்கும் போது முந்தைய கடன் குறித்த தகவல்கள் அதில் காட்டப்படாது.
இதனைத் தடுக்கும் விதமாக இனி 15 நாட்களுக்கு ஒருமுறை வாடிக்கையாளர்களின் கடன் நிலையை புதுப்பிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது. எப்படியும் கடன் வழங்கும் செயல்முறையானது இரண்டு வாரத்திற்குள் மேல் நடைபெறும். இதன்மூலம், சரியாக கடனைத் திருப்பிச் செலுத்தாத வாடிக்கையாளர், மற்றொரு கடன் வாங்குவது தடுக்கப்படும்.
வாடிக்கையாளர்கள் வாங்கிய கடனை முறையாக திருப்பிச் செலுத்தும் பட்சத்தில், அடுத்தடுத்த கடன்களை வழங்குவதற்கு வங்கிகளோ, நிதி நிறுவனங்களோ தயங்குவதில்லை.
ஆனால், எளிதாக கடன் கிடைக்கிறது என்பதற்காக, தேவையே இல்லாத போது கடன் வாங்குவதும் நல்லதல்ல. நிதி சார்ந்த விஷயங்களில் நாமும் கொஞ்சம் கவனமுடன் செயல்படுவது தான் நல்லது.