ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு உடனடியாக கடன் கிடைக்க தங்க நகைகளே பெரிதும் உதவுகின்றன. பலபேர் தங்கம் வாங்குவதே அவசர காலத்தில் அடகு வைப்பதற்கு தான். பொதுவாக தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெறும் செயல்முறை விரைவானது மற்றும் எளிதானது. அதேநேரம் டிஜிட்டல் தங்கத்தையும் அடமானம் வைத்து கடன் பெற முடியுமா என சிறு முதலீட்டாளர்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை நோக்கி செல்கிறது. முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தை பாதுகாப்பான மற்றும் இலாபகரமான முதலீடாக கருதுகின்றனர். பெரும்பாலும் பொதுமக்கள் தங்கத்தை ஆபரணமாகவே வாங்குகின்றனர். ஆனால் தங்கத்தில் முதலீடு செய்யும் நோக்கத்தில் இருப்பவர்கள் தான், தங்க இடிஎஃப் மற்றும் டிஜிட்டல் கோல்டு வடிவில் வாங்குகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்து வரும் காலத்தில், தங்கத்தை பல்வேறு வடிவங்களில் வாங்க இயலும்.
தங்கத்தை ஆபரணமாக வாங்காமல், மின்னணு முறையில் வாங்குவதற்கு டிஜிட்டல் தங்கம் என்று பெயர். இதற்காக நம்பகமான நிறுவனத்தைத் தேர்வு செய்வது அவசியம். டிஜிட்டல் தங்கம் வாங்கும் போது, அதற்குரிய பத்திரம் உங்களுக்கு வழங்கப்படும். குறைந்தபட்சம் 1 ரூபாயில் இருந்து டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யலாம். 24 மணி நேரமும் டிஜிட்டல் தங்கத்தை வாங்கவோ அல்லது விற்கவோ முடியும் என்பது கூடுதல் அம்சமாகும்.
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் ஆபரணத் தங்கத்தை வட்டிக்கு அடகு வைக்க முடியும். தங்க நகைக் கடனில் பிணையமாக தங்கத்தைக் கொடுப்பதால் தான், இதற்கான வட்டி குறைவு. அதேபோல் டிஜிட்டல் தங்கம் மற்றும் தங்க இடிஎஃப் ஆகியவற்றையும் அடகு வைத்து கடன் பெற முடியும் என்பது பலருக்கும் தெரியாது. தங்கத்தை ஆபரணமாக அல்லாமல் டிஜிட்டல் வடிவில் வாங்குபவர்கள் பெரும்பாலும் முதலீட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தான்.
பொதுவாக பெரு முதலீட்டாளர்கள், முதலீட்டை அடகு வைத்து கடன் வாங்க நினைப்பதில்லை. அதற்கு மாறாக டிஜிட்டல் தங்கத்தின் பங்குகளை விற்று இலாபம் பார்ப்பார்கள். டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள், அதனை அடகு வைத்து கடன் பெற முடியும். பெரும்பாலும் சிறு முதலீட்டாளர்கள் தான் இக்கடனைப் பெற முயற்சிப்பார்கள். இருப்பினும் இவர்களுக்கு கூட டிஜிட்டல் தங்கத்திற்கு கடன் கிடைக்குமா என்ற சந்தேகம் இருக்கும்.
ஆனால் இதில் எவ்வித சந்தேகமும் தேவையே இல்லை. டிஜிட்டல் ஆனாலும், ஆபரணமாக இருந்தாலும் தங்கத்திற்கான மதிப்பு என்றும் குறைவதில்லை. ஆகையால் தான் சில நிதி நிறுவனங்கள் டிஜிட்டல் தங்கத்திற்கும் கடன் கொடுக்கின்றன.
டிஜிட்டல் தங்கத்திற்கு கடன் கொடுக்கும் நிறுவனங்கள், சில விதிமுறைகளை வகுத்துள்ளன. இதன்படி வட்டி விகிதம் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். இது ஒரு நேரடி செயல்முறை. கடன் வாங்கும் போது நீங்கள் டிஜிட்டல் தங்கப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
டிஜிட்டல் தங்கத்தின் பங்குகளின் அளவுக்கு ஏற்ப கடன் தொகை வழங்கப்படும். இருப்பினும் ஒரே நிறுவனத்தில் கடனுக்கு விண்ணப்பிக்காமல், எந்த நிறுவனத்தில் வட்டி குறைவு மற்றும் நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றை மதிப்பாய்வு செய்து, பிறகு கடன் பெற விண்ணப்பிக்கலாம்.