மீனவர்களும் தொழில்முனைவோராக மாற முடியுமா?
வேலைக்கு செல்லும் பலரது கனவும், விரைவில் நாமும் ஒரு தொழில் தொடங்கி சாதிக்க வேண்டும் என்பதே. இதற்கு மீனவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன! மீனவர்கள் மீன் விற்பனையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் தொழில்முனைவோராக மாற என்ன செய்ய வேண்டும் என்பதை விவரிக்கிறது இந்தப் பதிவு.
நாட்டில் அதிகம் பேர் மாதச் சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள் தான். ஒருசிலர் தங்களுக்கு தெரிந்த வேலைகளைச் செய்து வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். அனைவருக்கும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், முதல் அடியை எடுத்து வைக்கத் தயங்குவதால் தான் பலரும் இன்று வரை தொழிலாளர்களாகவே இருக்கின்றனர்.
கடலை நம்பி உழைப்பைக் கொடுக்கும் மீனவர்கள் மட்டும் இதில் சற்று வேறுபட்டு நிற்கின்றனர். இவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்; ஆனால் விற்பனை செய்வதில் தான் இவர்களுக்கு பிரச்சினை. விவசாயத்தில் நாம் உருவாக்கும் விளைபொருள்களை மதிப்புக் கூட்டினால், நல்ல இலாபத்தை அடையலாம். அதே போல் தான் மீன்களை மதிப்புக் கூட்டி விற்பது அதிக இலாபத்தைப் பெற வழிவகுக்கும். மீனவர்கள் பெரும்பாலும் கடலில் பிடிக்கும் மீன்களை சந்தைக்கு கொண்டு வந்து விற்கின்றனர். இவர்களின் அன்றாட பிழைப்பு இப்படித் தான் செல்கின்றன.
சந்தையில் மீன்களை விற்பதால் தான், பொதுமக்கள் பலரும் கடல் உணவுகளை ருசித்து சாப்பிட முடிகின்றன. இருப்பினும், மீனவர்கள் அனைத்து மீன்களையும் சந்தையில் விற்காமல் சத்துள்ள மீன்களை மதிப்புக் கூட்டி விற்க கற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் முன்னணி தொழிலதிபரான ஸ்ரீதர் வேம்பு, நாட்டு மக்கள் நலனில் அக்கறை செலுத்தி பல்வேறு நற்காரியங்களை செய்து வருகிறார். ZOHO நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இவர், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முயற்சி மேற்கொண்டு வருகிறார். மீனவர்களுக்கு விருப்பம் இருந்தால் தொழில்முனைவோராக மாற்ற நாங்கள் உதவுகிறோம் என்று அவர் சமீபத்தில் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “புரதச்சத்து நிறைந்த மீன்களை மதிப்புக் கூட்டி விற்பதற்கு மீனவர்கள் முன்வர வேண்டும். மீனவர்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். மீனவர்கள் சொந்தக் காலில் நிற்பதை ஊக்குவிப்பதே எங்கள் நோக்கம்” என்று தெரிவித்தார்.
மீன் பதப்படுத்துதல்:
மீன்களில் இருக்கும் முள், செதில் மற்றும் தோலை நீக்கி சதையை மட்டும் பதப்படுத்துவதன் மூலம் புரதச்சத்து அதிகரிக்கும். இதனைப் பொடி செய்து நிறைய பொருள்களில் பயன்படுத்தலாம்.
மீன் வெள்ளைக்கரு:
மீன் முட்டைகள் மற்றும் கழிவுகளில் இருந்து வெள்ளைக்கருவை பிரித்தெடுக்க வேண்டும். இந்த வெள்ளைக்கரு மருந்து மற்றும் உணவுப் பொருட்களில் கரைய வைத்தலுக்கு உதவுகிறது. மேலும் சோப்பு தூள், ஐஸ்கிரீம், மிட்டாய் மற்றும் ரொட்டி கிடங்கிலும் இது பயன்படுகிறது.
இதுமாதிரி மீன்கள் எந்தெந்தத் துறைகளில் எப்படியெல்லாம் பயன்படுகின்றன என்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்ப முயற்சி செய்தால் மீனவர்களும் தொழில்முனைவோராக மாற முடியும்.