தொழில் தொடங்க ஆசையா? குமார் மங்கலம் பிர்லாவின் அறிவுரையைக் கேளுங்கள்!

Business Tips
Business Tips

தொழில் தொடங்க நினைக்கும் நபர்கள் வெற்றிகரமாக தொழில் நடத்தும் யாரிடமாவது ஆலோசனைக் கேட்பார்கள். இவர்களுக்கு உதவும் விதமாக இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லாவின் அறிவுரையை இப்பதிவில் காண்போம்.

"சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற வேட்கை வேலைக்குச் செல்லும் பணியாளர்கள் பலருக்கும் இருக்கிறது. ஆனால், அனைவருக்குமே இருக்கும் பொதுவான பிரச்சினை எதுவென்றால் தொடக்கம் மட்டுமே. எப்படித் தொடங்குவது, எந்தத் தொழிலைத் தொடங்குவது, இலாபம் கிடைக்காமல் போனால் என்ன செய்வது, இருக்கின்ற வேலையும் போய்விடுமோ என்ற பயத்திலேயே தொழில் தொடங்கும் வாய்ப்புகளை பலரும் இழந்து வருகின்றனர். சிலருக்கு எந்தத் தொழிலைத் தொடங்க வேண்டும் என்ற புரிதல் இருந்தாலும், தொடக்கத்தில் முதலீடு செய்ய பணம் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. தொழில் தொடங்க முதலீடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தொழில் செய்து இப்போது உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் கடந்த காலத்தை எடுத்துப் பார்த்தால், அவர்களும் ஒரு சாதாரண மனிதர்களாகவே இருந்திருப்பர். ஆனால், என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்வோம்; சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் ஆரம்பித்த தொழில்கள் இன்று வெற்றிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. அதேபோன்ற நம்பிக்கை உங்களிடமும் இருந்தால் வெற்றிப்பாதைக்கு நீங்கள் செல்வது உறுதி.

சாதிக்காத வரை நாம் என்ன கருத்து சொன்னாலும் கேட்காத உலகம் கூட, சாதித்த பிறகு நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாக கவனிப்பார்கள்."

இப்படியாக இந்தியத் தொழிலதிபர்களில் முன்னணியில் இருக்கும் ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் மங்கலம் பிர்லா ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்குபவர்கள் மற்றும் சொந்தத் தொழில் தொடங்குபவர்களை உத்வேகப்படுத்தும் நோக்கத்தில் கூறியதாவது:

“இன்றைய காலகட்டத்தில் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் உடனேயே வெற்றி பெற வேண்டும் என நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறான எண்ணம். நீண்டகால தொலைநோக்குப் பார்வையுடன் தொழில்துறையில் கால்தடம் பதிக்க வேண்டியது அவசியமாகும். தோல்வியின் முடிவில் கிடைப்பது நட்டம் அல்ல; அனுபவம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய நினைக்கும் இளைஞர்களுக்கு இது எளிதாக இருக்காது. இருப்பினும் பெரிய வெற்றிகளைப் பெற பொறுமையும், நேரமும் அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். போட்டி நிறைந்த இவ்வுலகில் யாருமே தனியாக வெற்றி பெறுவதும் கடினம் தான். துவண்டு போகும் நேரத்தில் அனைவருக்குமே ஆதரவு தேவை. நாளைய தலைமுறையை நிர்ணயிக்கும் மாணவர்கள் காலத்திற்கு முன்பாகத் திட்டமிடுவது மிகவும் நல்லது.”

இதையும் படியுங்கள்:
நமது உள்ளுணர்வும் தொழில் வெற்றியும்!
Business Tips

வன் சாதாரண மனிதன்; இவன் சாதனை மனிதன் என வெற்றிக்கு பாகுபாடு எதுவும் தெரியாது. இடைவிடாத தொடர் முயற்சி இருந்தால் யாராக இருந்தாலும் வெற்றியை தன்வசப்படுத்தலாம். குறுகிய காலத்தில் கிடைக்கும் வெற்றி மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் நிலையானதாக இருக்க வாய்ப்புகள் குறைவு. தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லாவின் அறிவுரை உங்கள் தொழில் முயற்சிக்கு ஏதாவது ஒரு வகையில் உதவும் என நம்புகிறோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com