
கடன் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் காசோலை பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் ஒருவர் கடன் வாங்கும் போது, கேன்சல் செய்யப்பட்ட காசோலையைக் கேட்பார்கள். இதுதவிர்த்து கடன் தொகையைப் பெறும் போதோ அல்லது கடன் கொடுக்கும் போதோ காசோலையில் தான் எவ்வளவு பணம் என்பதை நிரப்பிக் கொடுப்பார்கள். அப்படி காசோலையைப் பயன்படுத்தும் போது, அதில் கருப்பு நிற மை கொண்ட பேனாவைப் பயன்படுத்தலாமா அல்லது கூடாதா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. இந்த சந்தேகத்தை உங்களுக்கு தீர்த்து வைக்க முயல்கிறது இந்தப் பதிவு.
வங்கிகளில் கணக்கைத் தொடங்கும் போதே இப்போதெல்லாம் காசோலையும் கொடுக்கப்படுகிறது. நடுத்தர மக்கள் பலரும் இதனை அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை. ஏனெனில் இன்றைய பொருளாதாரம் டிஜிட்டல் மயமாகி இருப்பதால், ஆன்லைனிலேயே பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது. இருப்பினும் தொழில் சார்ந்த பணப் பரிவர்த்தனை மற்றும் வங்கி சார்ந்த சில நிதி சேவைகளுக்கு இன்றளவும் காசோலை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
காசோலையை நிரப்பிக் கொடுக்கும் போது அதில் நீல நிறப் பேனாவைத் தான் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். பலமுறை காசோலையை நிரப்பியவர்களுக்கு இதில் பதட்டம் ஏதும் இருக்காது. ஆனால் புதிதாக காசோலையை நிரப்புபவர்கள், தவறாக எழுதி விடுவோமோ, எந்த நிற மையினால் எழுதுவது சரியாக இருக்கும் மற்றும் பின்புறம் கையெழுத்து போட வேண்டுமா என பல குழப்பங்கள் ஏற்படும். இந்த குழப்பமான மனநிலை நமக்கு பதட்டத்தையும் ஏற்படுத்தி விடும். ஏனெனில் சிறு தவறு ஏற்பட்டாலும், வங்கிகளால் காசோலை நிராகரிக்கப்பட்டு விடும் அல்லவா!
கடந்த சில நாட்களாக காசோலையில் கருப்பு மையால் எழுதக் கூடாது என இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்ததாக வதந்திகள் பரவி வந்தன. இன்றைய காலத்தில் உண்மையை விட வதந்திகள் மிக எளிதில் அனைவருக்கும் பரவி விடுகின்றன. இதனால் காசோலையை நிரப்பும் பல வாடிக்கையாளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. ஆனால் இது உண்மையல்ல என்ற தகவலை, பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மையைக் கண்டறியும் சிறப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இது முற்றிலும் ஆதாரமற்ற மற்றும் பொய்யான தகவல் என்றும் இந்தப் பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது.
பொதுமக்கள் பலரும் நீலம் மற்றும் கருப்பு மை கொண்ட பேனாக்களைத்தான் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இச்சமயத்தில் இதுமாதிரியான வதந்திகள் யாரையும் குழப்பமடையவே செய்யும். இருப்பினும், நமக்கு கிடைக்கும் தகவல் உண்மை தானா என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். காசோலையில் எந்தெந்த நிறங்களைப் பயன்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி இதுவரையிலும் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது தான் உண்மை. தவறாக மக்கள் மத்தியில் பரப்பப்படும் வதந்திகளை யாரும் பொருட்படுத்த வேண்டாம்.
பொதுவாக காசோலையில் அச்சடிக்கப்படும் எழுத்துகள் கருப்பு நிறத்தில் இருக்கும். இதில் வங்கிகளின் பெயர்தான் மற்ற வண்ணங்களில் இருக்கும். அச்சடிக்கப்பட்ட எழுத்துகளுடன் எவ்விதத்திலும் குழப்பம் அடையாமல் இருக்கதான், பொதுவாக நீல நிற மைகள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.