வங்கியில் கடன் வாங்கும் போதோ அல்லது வேறு ஏதேனும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கும் போதோ நம்மிடம் கேன்சல் செய்த காசோலையைக் கேட்பார்கள். என்றாவது ஏன் இதனைக் கேட்கிறார்கள் என்று நீங்கள் சிந்தித்தது உண்டா அல்லது இதற்கான காரணம் என்னவென்பதை அறிய முயற்சி செய்து இருக்கிறீர்களா? இல்லையெனில் அதற்கான காரணத்தை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய பொருளாதார உலகில் நாளுக்கு நாள் குடும்பச் செலவுகளும், தனிநபருக்கான பணத் தேவையும் அதிகரித்து வருகின்றன. மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு, அடுத்த மாதம் எப்போது சம்பளம் வரும் என்று காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த அளவிற்கு செலவுகள் நம் கையை மீறிப் போகின்றன. இப்படியான சூழலில் சில சமயங்களில் நம்மால் கடன் வாங்குவதைத் தவிர்க்க முடியாது. ஒவ்வொரு கடனுக்கும் ஒவ்வொரு விதமான வழிமுறைகள் இருக்கும். தங்க நகைக் கடன்களுக்கு நம்மிடம் நகைகளைத் தவிர வேறு எதையும் வங்கிகள் கேட்பதில்லை. ஏனெனில் பிணையமாக நாம் தங்கத்தை கொடுக்கிறோம் அல்லவா!
வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கு நாம் எந்த விதமான பிணயமும் அளிக்க மாட்டோம். ஆகையால், இந்தக் கடன்களை வங்கிகள் நமக்கு அளிக்கும் போது பல ஆவணங்களைக் கேட்பார்கள். அதில் ஒன்று தான் கேன்சல் செய்யப்பட்ட காசோலை. பலருக்கும் ஏன் இந்த காசோலையைக் கேட்கிறார்கள் என்று தெரியாது. ஏனெனில் கடன் வாங்கும் பலரும், கடன் தொகை எப்போது கிடைக்கும் என்ற அவசரத்தில் இருப்பார்கள். ஆகையால், எதைக் கேட்டாலும் கேள்வியே கேட்காமல் பலர் கொடுத்து விடுகின்றனர். நமது ஆவணங்களை வங்கி தரப்பில் கேட்கும் போது, நாம் சமர்ப்பிக்கும் ஒவ்வொரு ஆவணத்தையும் எதற்காக கேட்கிறார்கள் என்று அறிந்து கொள்வது நல்லது.
வங்கிக் கடன் வாங்கும் போது வங்கிக் கணக்கு விவரங்கள், சம்பளம் குறித்த தகவல்கள், ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் கேன்சல் செய்த காசோலை ஆகியவற்றைக் கேட்பார்கள். நாம் கொடுக்கும் ஆவணங்கள், வாங்கும் கடனுக்கான உத்தரவாதமாக இருந்தாலும், காசோலையை வாங்குவதிலும் ஒரு உள்ளார்ந்த தேவை இருக்கிறது. ஏனெனில் வாடிக்கையாளர் உண்மையிலேயே வங்கிக் கணக்கு வைத்திருக்கிறாரா என்பதை உறுதி செய்து கொள்வதற்காகத் தான் கேன்சல் செய்த காசோலையைக் கடன் நிறுவனங்கள் கேட்கின்றன. ஏதாவது ஒரு வங்கியின் பெயர் மற்றும் கணக்கு எண்ணைக் கொடுத்து கடன் வாங்கி விட்டு, ஏமாற்றினால் அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது கடினம். காசோலையில் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு விவரங்கள் அனைத்துமே இருக்கும். ஆகையால் தான் காசோலையைக் கேட்கின்றனர்.
காசோலையில் இருக்கும் தகவல்களை கடன் நிறுவனங்கள் சேமித்து வைத்துக் கொள்ளும். இவர்களைப் பார்த்து தான் பாலிசி நிறுவனங்களும், மற்ற சில வங்கிச் சேவைகளுக்கும் கேன்சல் செய்த காசோலையைக் கேட்கிறார்கள். இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். இனி நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ஆவணத்திற்கும் உரிய காரணத்தை கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.