
சேமிப்பு குறித்த விழிப்புணர்வுகள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில், பல்வேறு காப்பீடு திட்டங்களும் சந்தையில் கிடைக்கின்றன. பாதி பேர் காப்பீட்டுத் திட்டத்தை குடும்பத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு எடுத்தாலும், சில பேர் வங்கிகள் மற்றும் சில நிதி நிறுவனங்களின் கட்டாயத்தால் தான் எடுக்கின்றனர். பொதுமக்களை மூளைச் சலவை செய்தும் காப்பீட்டை எடுக்க வைத்து விடுகின்றனர் சில முகவர்கள்.
காப்பீடு சிறந்தத் திட்டம் தான்; அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. இருப்பினும் சொந்த விருப்பத்தில், நிதி நிலைமைக்கேற்ப ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். அவ்வகையில் யாரோ சொல்வதைக் கேட்டு பாலிசியை எடுத்து விட்டு, பிறகு அதனைக் கட்ட முடியாமல் தவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அடுத்து என்ன செய்ய வேண்டும் மற்றும் பாலிசியை நிறுத்துவது எப்படி என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.
வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் வேலையே காப்பீடுகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி விற்பதுதான். உண்மையில் இதுவும் ஒரு வியாபாரம்தான். ஒரு முகவர் எத்தனை வாடிக்கையாளர்களை பாலிசி எடுக்க வைக்கிறாரோ, அதற்கேற்ப அவருக்கு கமிஷன் தொகை கிடைக்கும்.
இருப்பினும் ஒருவர் எவ்வளவுதான் வற்புறுத்தினாலும், காப்பீடு வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நாம்தான். ஆகையால், எந்நிலையிலும் நமது நிதி நிலைமைக்கேற்ப சரியான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகும். வேறு வழியின்றி பாலிசி எடுத்தவர்களுக்கு நிதி நெருக்கடிக்கு ஆளாகும் நேரத்தில், காப்பீட்டை நிறுத்தி விடலாம் என்ற எண்ணம் வரும். அப்படியான சூழலில் பாலிசிகளை எப்படி கேன்சல் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.
முதலில் காப்பீட்டு நிறுவனங்களின் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் அதிகாரிக்கு, உங்கள் நிதி நிலைமையை விளக்கிக் கூறி பாலிசியை கேன்சல் செய்யுமாறு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். முடிந்தால் காப்பீட்டு நிறுவனத்திற்கே சென்றும் பாலிசி கேன்சல் குறித்து மனு கொடுக்க முயற்சிக்கலாம். நீங்கள் மனு அளித்தீர்கள் என்பதற்கு ஒரு ஒப்புகைச் சீட்டை வாங்கிக் கொள்வது நல்லது.
உங்கள் மனு மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், மத்திய அரசின் பீமா பரோசா https://bimabharosa.irdai.gov.in/ என்ற வலைதளத்தில் உங்களின் புகாரைப் பதிவு செய்யலாம். இங்கேயும் உங்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்றாலும் அல்லது அவர்கள் அளித்த தீர்வில் முழு திருப்தி இல்லை என்றாலும், காப்பீட்டுத் துறை சார்ந்த குறை தீர்க்கும் ஆணையருக்கு https://www.cioins.co.in/ என்ற வலைதளத்தின் மூலம் புகார் அளிக்கலாம்.
இது கொஞ்சம் சிக்கலான சட்டப் போராட்டம் தான். இருப்பினும், உங்களது நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு பாலிசியைத் தொடர முடிந்தால், கேன்சல் செய்ய வேண்டாம். வேறு வழியில்லை என்ற சூழலில் கேன்சல் செய்வதில் தவறில்லை. ஏனெனில் நிதி நெருக்கடி உங்களை மன அழுத்தத்தில் ஆழ்த்தி விடும்.