
இன்றைய காலகட்டத்தில் மருத்துவப் பாலிசி என்பது விருப்பத் தேர்வாக அல்லாமல் அவசியம் என்றாகி விட்டது. ஏனெனில் மாறி வரும் உணவுப் பழக்கத்தால், வயது வித்தியாசமின்றி எண்ணற்ற நோய்கள் பலரையும் அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் அவசரத் தேவையைச் சமாளிக்கும் கேடயமாக விளங்குகிறது மருத்துவக் காப்பீடு. சந்தையில் எண்ணற்ற காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவக் காப்பீட்டை வழங்கும் நிலையில், ஆண்டுதோறும் அதனைப் புதுப்பிக்க வேண்டியது அவசியமாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பல ஆண்டுகளுக்கு செயலில் இருக்கும் மருத்துவக் காப்பீட்டு வசதி (Multi Year Health Policy) கொண்டுவரப்பட்டது. இதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
மருத்துவக் காப்பீட்டை எடுக்கும் முன், முதலில் சந்தையில் கிடைக்கும் காப்பீடுகளின் சாதக பாதகங்களை அறிந்து கொள்வது அவசியமாகும். அவ்வகையில் காப்பீட்டுத் தொகையைப் பயன்படுத்தும் போது வரி சேமிப்பு அம்சம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாக மருத்துவக் காப்பீடுகளை எடுக்கும் சிலர், தவணைத் தொகை குறைவாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக ஆண்டுதோறும் புதுப்பிக்கக் கூடிய வகையில் இருக்கும் காப்பீடுகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதுவே மல்டி இயர் பாலிசிகளை எடுத்தால் நாம் செலுத்த வேண்டிய தொகை அதிகமாக இருக்கும். இருப்பினும், இதில் வரி சேமிப்பு உள்பட பல சாதகங்கள் உள்ளன.
இன்றைய சூழலில் மருத்துவ பணவீக்கம் நிலையாக இல்லாத காரணத்தால், ஆண்டுதோறும் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை அதிகரித்து வருகிறது. மல்டி இயர் பாலிசிகளை நாம் எடுப்பதன் மூலம் பிரீமியம் தொகையை நிலைநிறுத்தி விடலாம். இருப்பினும் இதில் பாலிசிக்கான தொகையை 3 அல்லது 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து பாலிசி எடுக்கும் போதே செலுத்த வேண்டியிருக்கும். இது பலருக்கும் மிகப்பெரிய தொகையாக இருக்கும். இதன் காரணமாகத் தான் பலரும் மல்டி இயர் பாலிசிகளை எடுப்பதில்லை. ஆனால், இதில் ஆண்டுதோறும் பிரீமியம் உயரும் என்ற கவலை இருக்காது. மேலும் ஒருசில நிறுவனங்கள் பாலிசி தொகையைச் செலுத்த EMI வசதியையும் வழங்குகின்றன.
சந்தையில் ஒருசில நிறுவனங்கள், மல்டி இயர் பாலிசிகளை எடுப்பவர்களுக்கு 15 முதல் 20 சதவிகித தள்ளுபடியையும் அளிக்கிறார்கள். வருடந்தோறும் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யும் நபர்கள் பிரிவு 80D இன் கீழ் மருத்துவக் காப்பீட்டுகான பிரீமியம் தொகையில் வரி சேமிப்பையும் பெற்றுக் கொள்ள முடியும். வரிச் சேமிப்பைப் பெற வேண்டுமெனில், நீங்கள் பாலிசித் தொகையைப் பணமாக செலுத்தாமல் ஆன்லைன் பரிவர்த்தனை, காசோலை, டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு போன்ற ஆன்லைன் வழிகளைப் பயன்படுத்துவது நல்லது.
மல்டி இயர் பாலிசியை எடுத்தால், மாதாந்திர பட்ஜெட் மற்றும் நிதித் திட்டமிடலை எளிதாக நிர்வகிக்க முடியும். ஏனெனில் அவசர மருத்துவச் செலவுகளுக்கு எப்போதும் ஒரு பாதுகாப்பான திட்டம் இருக்கிறது அல்லவா!
அனைத்துத் திட்டங்களிலும் சாதகங்கள் இருப்பது போலவே பாதகங்களும் உள்ளன. ஆகவே எந்தக் காப்பீட்டை நீங்கள் தேர்வு செய்தாலும், அதுபற்றிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்து கொண்டு பாலிசி எடுங்கள்.