சென்னை தாக்கிய மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சிறு குறு நடுத்தர நிறுவனங்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையை தாக்கிய மிக்ஜம் புயல் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றிருக்கிறது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பல்வேறு பகுதிக ளில் தண்ணீர் பெருமளவில் தேங்கி பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் பல்வேறு வகையான பொருட்களும் சேதம் அடைந்துள்ளது. இப்படி கொட்டி தீர்த்த மிக அதிகப்படியான மழையின் காரணமாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாடு அரசின் சிட்கோ நிறுவனத்தில் பதிவு செய்துள்ள சிறு குறு மக்கள் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சென்னையில் பெருமளவில் இயங்கி வருகின்றன. இவ்வாறு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள 24 தொழிற்பேட்டைகளில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஆலைகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
இதில் இருந்த இயந்திரங்கள், தளவாடப் பொருட்கள், மூலப்பொருட்கள், உற்பத்தி செய்து இருப்பில் இருந்த பொருட்களும் சேதம் அடைந்திருக்கின்றன. இதனால் 2,800 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்து இருப்பதாக தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்து இருக்கிறது. மேலும் தமிழ்நாடு அரசு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு குறு, நடுத்தர நிறுவனங்களை பாதுகாக்க நிதி உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறது.
இதை அடுத்து சிட்கோ, புயலால் பாதிக்கப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை கணக்கெடுக்கவும் ,அவற்றை புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தி விரைவாக அறிக்கை தாக்கல் செய்ய கிளை மேலாளர் அவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.