மிக்ஜம் புயலால் கடலில் கலந்த கச்சா எண்ணெயால் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளையும், ஆந்திராவின் சில பகுதிகளையும் தாக்கிய மிக்ஜம் புயல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றிருக்கிறது. இதில் சென்னை எண்ணூரில் அமைந்திருக்கக் கூடிய சிபிசிஎல் ஆலையும் பாதிக்கப்பட்டு இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
தொடர் மழை வெள்ளத்தால் சென்னை எண்ணூரில் அமைந்திருக்கக் கூடிய சிபிசிஎல் ஆலையிலிருந்து கச்சா எண்ணெய் வெளியே கசிந்து நிலம் மற்றும் கடலில் கலந்திருப்பதை கடல் படை வீரர்கள் ஹெலிகாப்டரில் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.
கச்சா எண்ணெய் கடலில் கலந்திருப்பதன் மூலம் கடல் வாழ் உயிரினங்கள் பல்வேறு வகையான பாதிப்புகளை சந்தித்து உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாது கச்சா எண்ணெய் கடலில் கலந்திருப்பதன் மூலம் மனிதர்களுக்கும் பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
கொசஸ்தலை ஆறு முகத்துவாரத்தில் இருந்து காசிமேடு துறைமுகம் வரை 20 சதுர கிலோ மீட்டர் வரை கடலில் கச்சா எண்ணெய் கலந்து இருப்பது கண்டறியப்பட்டு அவற்றை அகற்றும் பணி கடற்படை கப்பல் மூலமாக செய்யப்பட்டு வருகிறது. மேலும் இப்பணியை தீவிர படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் நிலப்பகுதியில் வெளியேறியுள்ள கச்சா எண்ணெய்களை அகற்றும் பணியை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முன்னெடுத்து வருகிறது.
கடல் மற்றும் நிலத்தில் பெருமளவில் கச்சா எண்ணெய் பரவுவதற்குள் அவற்றை முழுமையாக அகற்ற வேண்டும் என்று சென்னை எண்ணூர் பகுதி மக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கின்றனர்.