

எந்த ஒரு பெற்றோருமே தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பொருளாதார ரீதியாக பாதுகாக்கத்தான் விரும்புவார்கள். குறிப்பாக கல்விச் செலவுகள் அதிகரித்து வரும் இக்காலத்தில், முன்கூட்டியே முதலீடு செய்யத் தொடங்குவது அவசியம். குழந்தைகளின் எதிர் காலத்திற்காக முதலீடு செய்வதென்றால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஒரு சிறந்த முதலீடாகும்.
சில்ட்ரன் மியூச்சுவல் ஃபண்ட் (Children's Mutual Fund) என்பது குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால இலக்குகளுக்காக, பெற்றோர்கள் முதலீடு செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு நீண்டகால திட்டமாகும். இது ஒரு வரிச்சலுகை கொண்ட சிறப்பு திட்டமாகும். இவை பங்குகள் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் வகைகளாகும். இந்த நிதிகள் முதிர்ச்சியின் போது குழந்தைகளின் கல்வித் தேவைகள் மற்றும் பிற நிதி இலக்குகளை பூர்த்தி செய்வதற்கு மொத்த தொகையை வழங்குகிறது.
1) இதன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்:
a) லாக்-இன் காலம்:
பொது நோக்கத்திற்கான மியூச்சுவல் ஃபண்டுகளைப் போலன்றி, குழந்தைகள் நிதிகள் பெரும்பாலும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அல்லது குழந்தை 18 வயது முதிர்ச்சி அடையும் வரை முதலீட்டை எடுக்க முடியாது. இது நீண்ட கால முதலீட்டிற்கு உதவுகிறது. மேலும் வளர்ச்சிக்கு ஈக்விட்டி மற்றும் நிலைத்தன்மைக்கு கடன் ஆகியவற்றின் கலவையில் முதலீடு செய்கிறது.
b) பங்குச்சந்தை முதலீடு:
இந்த நிதிகள் பெரும்பாலும் ஈக்விட்டி (பங்குகள்) மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் பணவீக்கத்தைவிட அதிக வருமானத்தை நோக்கமாகக் கொண்டுள்ளன.
c) குழந்தைகளுக்கான மியூச்சுவல் ஃபண்டுகள், பெற்றோர்கள் மைனர் சார்பாக முதலீடு செய்ய அனுமதிக்கின்றன. குழந்தை சட்டபூர்வ வயதை அடைந்தவுடன் உரிமையை மாற்றும் விருப்பமும் உள்ளது.
d) 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தால், குழந்தைகள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை தொடங்க இதுவே சரியான நேரமாகும். ஆரம்பகால திட்டமிடல் கூட்டுத்தொகையை அதிகரிக்கிறது. எனவே குழந்தைகள் மியூச்சுவல் ஃபண்டுகளில் எவ்வளவு சீக்கிரமாக முதலீடு செய்கிறோமோ அவ்வளவு சிறந்தது. இது உயர்கல்வி, சர்வதேச படிப்புகள் போன்ற குறிப்பிட்ட மைல் கற்களுக்காக சேமிப்பவர்களுக்கு மிகவும் ஏற்றது.
2) 2026 ஆம் ஆண்டில் முதலீடு செய்ய சிறந்த குழந்தைகள் மியூச்சுவல் ஃபண்டுகள்:
ஆதித்யா பிர்லா சன் லைஃப் பால் பவிஷ்யா யோஜ்னா, HDFC குழந்தைகள் நிதி நேரடி (G), டாட்டா குழந்தைகள் நிதி நேரடி(Tata Young Citizens Direct), SBI Magnum Children's Benefit Fund மற்றும் UTI குழந்தைகள் ஈக்விட்டி ஃபண்ட் நேரடி (G) ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்ட சில நிதிகளாகும்.
இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டமானது நீண்டகால முதலீட்டிற்கு பரிசீலிக்கக்கூடிய ஒரு திறந்தநிலை ஃபண்டாகும். இந்த நிதியின் லாக்-இன் காலம் குறைந்தது ஐந்தாண்டுகள் ஆகும். அதிக ரிஸ்க் இருந்தாலும் நல்ல வருமானத்தை அளிக்கிறது. நீண்டகால அடிப்படையில் இந்த நிதிகள் ஒழுக்கமான முதலீட்டு பழக்கத்தை உருவாக்கி, கணிசமான செல்வத்தை உருவாக்க உதவுகின்றன.
3) முதலீடு செய்யும் முன்பு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்:
a) குழந்தையின் வயதுக்கு ஏற்ப நிதியை தேர்வு செய்யவும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு பங்குச்சந்தை (Equity) சார்ந்த திட்டங்களும், 13 வயதுக்கு மேல் இருப்பின் குறைந்த அபாயம் கொண்ட கடன்பத்திர (Debt) நிதிகளும் சிறந்தது.
b) இது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. 5 ஆண்டுகள் லாக்-இன் காலம் இருப்பதால் உடனடி தேவைகளுக்கு பயன்படுத்த முடியாது.
c) குழந்தை 18 வயதை எட்டியதும், கணக்கு மைனர் நிலையிலிருந்து மேஜர் நிலைக்கு மாற்றப்பட வேண்டும். இல்லையெனில் கணக்கில் உள்ள பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும்.
d) பல்வேறு ஃபண்டுகளின் செலவு விகிதம் மற்றும் கட்டணங்களை ஒப்பிட்டு, குறைந்த கட்டணம் கொண்ட, அதிக வருவாய் தரும் ஃபண்டுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் முதலீடு செய்வதற்கு முன்பு நிதி ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது.
e) மைனர் பெயரில் உள்ள முதலீடுகள் அந்த முதலீட்டை செய்த பெற்றோரின் வருமானத்துடன் சேர்த்து கணக்கிடப்படலாம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.