ஆயுள் காப்பீடு எடுக்கும் முன் இதை படிக்கலனா உங்க பணம் வேஸ்ட்!

life insurance vs term insurance
life insurance vs term insurance
Published on

திர்பாராத செலவுகளுக்குக் கடன் வாங்காமல் வரும் முன் காத்துக்கொள்வதற்கு காப்பீடு அவசியம். அந்தக் காப்பீடுகளை நாம் நான்கு வகைகளாகப் பிரித்துக்கொள்ளலாம்.

1) அவசரகாலக் காப்பீடு அல்லது அவசர கால நிதி

2) ஆயுள் காப்பீடு

3) மருத்துவக் காப்பீடு

4) வீட்டுக் காப்பீடு, விபத்துக் காப்பீடு போன்ற இதர காப்பீடுகள்

இவற்றில் இரண்டாவதான ஆயுள் காப்பீடு பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஆயுள் காப்பீடு என்றால் என்ன?

குடும்பத்தின் சம்பாதிக்கும் நபர் இறந்துவிட்டால், ஆயுள் காப்பீடு எடுக்கப்பட்டிருந்தால், காப்பீடுத்தொகை வழங்கப்படும். அதன் மூலம், சம்பாதிக்கும் நபர் இல்லாதபோதும், குடும்பத்தின் நிதி நிலைமை காக்கப்படும். கடன் வாங்காமலும், முதலீடுகளில் கை வைக்காமலும், சம்பாதிக்கும் நபர் இருந்திருந்தால், குடும்பத்தை எவ்வாறு நடத்தியிருப்பாரோ, அதே போல் குடும்பத்தை நடத்த ஆயுள்காப்பீடு உதவும். ஆயுள் காப்பீடு குடும்பத்திற்கு மன‍அமைதியைக் கொடுக்கிறது.

ஆயுள் காப்பீடில் பல வகைகள் உள்ளன.

1) முழு வாழ்நாள் காப்பீடு (Whole Life insurance)

2) அறக்கட்டளை காப்பீடு (Endowment insurance)

3) காலவரையறை காப்பீடு(Term insurance)

4) அலகு இணைத்த காப்பீடுத் திட்டம்(Unit Linked Insurance Plan)

இவற்றில் காலவரையறை காப்பீடு போதுமானது. அதில் காப்பீடு மட்டுமே உள்ளது. எனவே, காப்பீடு தவணைத்தொகை குறைவு. மற்ற வகை திட்டங்களில், முதலீடும் காப்பீடும் இணைக்கப்பட்டிருப்பதால், காப்பீடிற்கு கிடைக்கும் தொகை குறைவு. முதலீடையும் காப்பீடையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. முதலீடினைத் தனியாக வைத்திருக்க வேண்டும்.

காலவரையறை காப்பீடு என்றால் என்ன?

காலவரையறை காப்பீடுத் திட்டத்தின் காலவரையறையில், குடும்பத்தின் சம்பாதிக்கும் நபர் இறந்துவிட்டால், காப்பீடுத் தொகையானது, குடும்பத்திற்கு வழங்கப்படும். அந்தப் பணமானது குடும்பத்தின் நிதி நிலைமையைக் காக்க உதவும். குடும்பத்தின் எதிர்காலக் குறிக்கோள்களுக்கும் உதவும். சம்பாதிக்கும் நபர் காலவரையறை கடந்த பிறகும் உயிரோடு இருந்தால், எந்த ஒரு பணமும் குடும்பத்திற்கு வழங்கப்படாது. இது பரவாயில்லை. ஏனென்றால், குடும்பத்தின் நபர் உயிரோடிருந்து சம்பாதித்த காரணத்தினால், அவரது பணம் குடும்பத்தின் நிதி நிலைமையைக் காக்கவும் மற்றும் எதிர்காலக் குறிக்கோள்களுக்கும் உதவியிருக்கும்.

இதையும் படியுங்கள்:
விவசாயிகளின் காப்பீடு முதல் மானியம் வரை - ஒரே கார்டில் இத்தனை நன்மைகளா?
life insurance vs term insurance

எவ்வளவு காப்பீடுத் தொகை எடுக்கவேண்டும்?

வருடாந்திர வருமானத்தைப்போல், குறைந்தபட்சம் 15 - 20 மடங்கு எடுத்துக்கொள்ளுதல் நலம். திருமணமாகி குழந்தைகளின் எதிர்கால படிப்பு, வீட்டுக் கடன், ஏற்கனவே உள்ள சில கடன்கள் போன்றவை இருக்கும் பட்சத்தில், 20 - 25 மடங்கு எடுத்துக் கொள்வது நலம். உதாரணமாக, ஒருவரது வருடாந்திர வருமானம் 10 இலட்சம் என்றால், 1.5 கோடி முதல் 2 கோடி வரை காலவரையறை காப்பீடு எடுத்துக்கொள்வது நலம்.

எவ்வளவு வருடங்கள் காப்பீடு காலவரையறை (Term) வைத்திருக்க வேண்டும்?

காலவரையறை காப்பீடு என்பது சம்பாதிக்கும் நபர் இல்லாத பட்சத்தில் உதவுவது. சம்பாதிக்கும் நபர் ஓய்வு பெற்றுவிட்டால், அவர் சம்பாதிக்கப் போவதில்லை. எனவே, ஓய்வு காலம் வரை எடுத்துக்கொள்வது நலம். உதாரணமாக, ஒருவரின் வயது 30 என்றால், அவரது ஓய்வு வயது 60 என்றால், 30 வருடங்களைக் காலவரையறையாகக் கொண்டு காப்பீட்டுத் திட்டம் எடுத்துக் கொள்வது நலம்.

காலவரையறைக் காப்பீடு எப்போது எடுக்க வேண்டும்?

வேலைக்கு வந்த உடனேயே காலவரையறை காப்பீட்டு திட்டம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சம்பாதிக்கும் நபர் இறந்துவிட்டால் அவரைச் சார்ந்து இருக்கும் பெற்றோர்கள் எதிர்காலத்தை நடத்த காப்பீடு பணம் உதவும். எடுக்கும்போதே, திருமணம், குழந்தைகள் என எதிர்காலத்திற்கும் திட்டமிட்டு அதிகமாக எடுத்துக்கொள்வது நலம். அவ்வாறு எடுக்காத பட்சத்தில், திருமணமான பிறகு காப்பீடுத் தொகையை அதிகரித்துக் கொள்ளலாம். மேலும், சிறிய வயதில் காப்பீடுத் தவணை குறைவாக இருக்கும்.

காலவரையறை காப்பீடு எங்கு வாங்க வேண்டும்?

எல்லா காப்பீடு நிறுவனங்களுமே ஐஆர்டிஏ(IRDA - Insurance Regulatory and Development Authority) அதாவது காப்பீடு கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் வருகின்றன. எனவே, இணையத்தில் ஒப்பிட்டு எந்த நிறுவனம் நல்லதொரு சகாய விலையில் ஆயுள் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறார்கள் என்று பார்த்து, தேர்ந்தெடுக்க வேண்டும். பாலிசி பஜார் போன்ற காப்பீடுகளை ஒப்பிடும் இணையதளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். காப்பீடு எடுக்கும்போது எல்லா விபரங்களையும் முழுமையாக தெரிவிக்க வேண்டும். அப்போது காப்பீடு கோரலின்போது நிராகரிக்கப்படுவது தவிர்க்கப்படும். காப்பீடு நிறுவனத்தின் காப்பீடு கோரல் தீர்ப்பு விகிதம் (Claim Settlement Ratio) எவ்வளவு விகிதம் என்று பார்த்து வாங்க வேண்டும். குறைந்தபட்சம் 90 சதவீதத்திற்கு மேல் உள்ளதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும்.

இணையத்தில் வாங்கினால், சகாய விலையில் கிடைக்கும். காப்பீடு கோரல் சம்பந்தமான விஷயங்களை அணுகுவதற்கு போதிய புரிதல் உள்ள நபர் உதவுவதற்கு இல்லாத பட்சத்தில், காப்பீடு தரகர் வாயிலாக வாங்கி கொள்ளலாம். காப்பீடு கோரலின்போது, காப்பீடின் தரகர் உதவுவார். காப்பீடு எடுத்தவுடன் காப்பீடு சம்பந்தமான விபரங்களைக் குடும்பத்திற்கு தெரிவித்து விடவேண்டும்.

இதையும் படியுங்கள்:
பட்ஜெட் போட்டும் கடன் தீரலையா? நீங்கள் செய்யும் 'அந்த' 2 தவறுகள் இதுதான்!
life insurance vs term insurance

காலவரையறை காப்பீட்டினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

குடும்பத்தின் சம்பாதிக்கும் நபர் இறந்துவிட்டால், காலவரையறை காப்பீடின் கோரலைச் செய்யவேண்டும். அப்போது, பணத்தை மொத்தமாக வாங்கி விடுவது நல்லது. கிடைத்த பணத்தைக் கொண்டு, நிதி ஆலோசகரை அணுகினால், அவர் குடும்பத்தின் கடன்கள் மற்றும் முதலீடுகளுக்கு பணத்தை ஒதுக்க ஆலோசனை வழங்குவார். அதன் மூலம், குடும்பத்தின் நிதி நிலைமை காக்கப்படும். குடும்பம் கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்த உதவும்.

இவ்வாறு காலவரையறை காப்பீடு திட்டம், குடும்பத்தின் சம்பாதிக்கும் நபர் இறந்தாலும் கூட கடன் வாங்காமல் குடும்பத்தின் நிதி நிலையைக் காக்க உதவும். இது குடும்பத்தில் கடன் வாங்காமல் வரும் முன் காப்பதற்கு நல்லதொரு திட்டம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com