இன்றைய நவீன உலகில் நமது தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கிரெடிட் கார்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், மூத்த குடிமக்களுக்கு மட்டும் கிரெடிட் கார்டுகளை வங்கிக் வழங்குவதில்லை. இதற்கான காரணம் என்ன என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.
நமது அவசரத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய உதவுபவை தான் கடன்கள். இன்று பலரும் வங்கிக் கடன்களை நாடும் நிலையில், அதற்கு பல ஆவணங்களை நாம் பிணயமாக கொடுக்க வேண்டும். ஆனால், எந்தவித பிணயமும் இன்றி வங்கிகளின் சார்பில் கொடுக்கப்படுபவை தான் கிரெடிட் கார்டு கடன்கள். கிரெடிட் கார்டுகளை சரியாகப் பயன்படுத்தி, குறிப்பிட்ட தேதிக்குள் தவணைக் தொகையை செலுத்தி விட்டால் நமக்கு எந்தவித நஷ்டமும் ஏற்படாது. ஆனால் கிரெடிட் கார்டு தவணைகளை செலுத்த தாமதப்படுத்தினால் தான் அதிக வட்டியை வசூலிப்பார்கள்.
கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான சலுகைகளை வழங்கி, வங்கிகள் அவர்களை அதிகமாகப் பயன்படுத்த வைக்கின்றன. இருப்பினும் விண்ணப்பதாரர்கள் சம்பளம் பெறுவோராகவும் அல்லது சுயதொழில் செய்வோராகவும் இருக்க வேண்டும். மேலும், கிரெடிட் ஸ்கோர் நல்ல நிலையில் இருப்பதும் முக்கியம்.
மூத்த குடிமக்களுக்கு எந்த வங்கியும் கிரெடிட் கார்டுகளைத் தருவதற்கு விரும்புவதில்லை. இது ஏன் என்று சற்று நிதானித்துப் பார்த்தாலே உண்மை புரிந்து விடும். வேலையில்லாத நபர்களுக்கு கூட வங்கிகள் கிரெடிட் கார்டுகளைக் கொடுக்கத் தயாராக இல்லை. ஏனெனில் உங்களது வங்கிக் கணக்கு விவரங்களை ஆராய்ந்து பார்த்த பிறகே கிரெடிட் கார்டு கடன்களை அளிக்க வங்கிகள் முன்வருகின்றன.
கிரெடிட் கார்டுகளை விற்பதற்கு பொதுவாக மாதச் சம்பளம் வாங்குபவர்கள் தான் வங்கிகளின் இலக்காக இருக்கின்றனர். ஏனெனில் மாதந்தோறும் நிலையான வருமானம் உள்ளவர்களால் தான் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும் என்று வங்கிகள் நம்புகின்றன. மூத்த குடிமக்கள் பலரும் நிலையான வருமானம் இல்லாதவர்கள். சிலருக்கு மட்டுமே பென்சன் தொகை கிடைக்கின்ற நிலையில், கடன் வாங்கினால் பலராலும் திருப்பி செலுத்த முடியாது என வங்கிகள் கருதுகின்றன. இதன் காரணமாகவே மூத்த குடிமக்களுக்கு கிரெடிட் கார்டுகளை அளிக்க வங்கிகள் தயங்குகின்றன.
கிரெடிட் கார்டுகளைப் பொறுத்த வரையில், மூத்த குடிமக்கள் முழுவதுமாக புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை தான். ஏனெனில் மூத்த குடிமக்களை மிகவும் அபாயகரமானவர்கள் என வங்கிகள் கருதுகின்றன. இதன் காரணமாகவே 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கிரெடிட் கார்டுகளை வழங்க மறுக்கின்றனர். இருப்பினும் அனைவருக்கும் வழங்குவதைப் போல் டெபிட் கார்டுகளை வங்கிகள் வழங்குகின்றன.
கிரெடிட் கார்டுகளை வழங்க ஒவ்வொரு வங்கியும் தனித்தனியாக வயது வரம்பை நிர்ணயித்துள்ளன. உதாரணத்திற்கு எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டை வழங்க குறைந்தபட்ச வயது 21 முதல் அதிகபட்ச வயது 60 வரை நிர்ணயித்துள்ளது. இருப்பினும் இதில் வேலைக்குச் செல்வதைக் கணக்கில் கொண்டு அதிகபட்ச வயதை சில வங்கிகள் நிர்ணயிக்கின்றன. பாரத ஸ்டேட் வங்கியில் 70 வயது வரை உள்ளவர்களுக்கு கூட கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன.